யோவான் 3:16-21

யோவான் 3:16-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவன் தமது ஒரே மகனை ஒப்புக்கொடுத்து அவரில் விசுவாசிக்கிற ஒருவரும் அழிந்து போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி இவ்வளவாய் உலகத்தினரை அன்புகூர்ந்தார். உலகத்தைக் குற்றவாளி என்று தீர்ப்பதற்காக இறைவன் தமது மகனை அனுப்பாமல், தமது மகனின் மூலமாய் உலகத்தவர்களை இரட்சிப்பதற்காகவே அனுப்பினார். இறைவனுடைய மகனில் விசுவாசிக்கிற யாவருக்கும் நியாயத்தீர்ப்பு இல்லை. ஆனால் அவரை விசுவாசிக்காதவருக்கோ ஏற்கெனவே நியாயத்தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. ஏனெனில் அவர்கள் இறைவனுடைய ஒரே மகனின் பெயரில் விசுவாசம் வைக்கவில்லை. அந்த நியாயத்தீர்ப்பு என்னவென்றால்: உலகத்திற்குள் வெளிச்சம் வந்தது. மனிதர் வெளிச்சத்தை அல்ல, இருளையே விரும்பினார்கள். ஏனெனில் அவர்களது செயல்கள் தீயவைகளாய் இருந்தன. தீயசெயலைச் செய்கிற ஒவ்வொருவரும் வெளிச்சத்தை வெறுக்கிறார்கள். தமது தீய செயல்கள் வெளியரங்கமாகிவிடும் என்று அவர்கள் வெளிச்சத்திற்குள் வரமாட்டார்கள். ஆனால் சத்தியத்தின்படி வாழ்கிறவர்களோ வெளிச்சத்திற்குள் வருகிறார்கள். தமது செயல்கள் எல்லாம் இறைவனுக்குள்ளாகவே செய்யப்பட்டிருப்பதால், அது தெளிவாய்த் தெரியும்படி அவர்கள் வெளிச்சத்திற்குள் வருகிறார்கள் என்றார்.

யோவான் 3:16-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான். ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது. தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

யோவான் 3:16-21 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் குமாரனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர். தேவன் தன் குமாரனை உலகிற்கு அனுப்பினார். உலகின் குற்றங்களை நியாயம் விசாரிக்க தனது குமாரனை அனுப்பவில்லை. இவ்வுலகம் தேவனுடைய குமாரனால் இரட்சிக்கப்படுவதற்கென்று தேவன் தன் குமாரனை அனுப்பினார். தேவகுமாரன் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. ஆனால், அவர் மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களுக்கு தேவனுடைய ஒரே குமாரன் மீது நம்பிக்கை இல்லை. இந்த உலகத்துக்கு ஒளி (நன்மை) வந்திருக்கிறது. ஆனால் அந்த ஒளியை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் இருளை (பாவத்தை) விரும்பினார்கள். ஏனென்றால் அவர்கள் தீய செயல்களைச் செய்துகொண்டிருந்தார்கள். இந்த உண்மையை வைத்தே அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுகிறார்கள். தீமைகளைச் செய்கிற ஒவ்வொரு மனிதனும் ஒளியை வெறுக்கிறான். அவன் வெளிச்சத்துக்குள் வரமாட்டான். ஏனென்றால் ஒளி அவன் செய்த தீமைகளை வெளிப்படுத்திக்காட்டும். ஆனால் உண்மை வழியைப் பின்தொடர்ந்து செல்கிறவர்கள் ஒளியிடம் வந்தடைகிறார்கள். பிறகு, அந்த ஒளி அவர்கள் செய்த செயல்கள் தேவன் மூலமாகச் செய்த நற்செயல்கள் எனக் காட்டும் என்று இயேசு கூறினார்.”

யோவான் 3:16-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.

யோவான் 3:16-21

யோவான் 3:16-21 TAOVBSIயோவான் 3:16-21 TAOVBSI