யோவான் 5:5-9

யோவான் 5:5-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதியஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வியாதியஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய்விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான். இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.

யோவான் 5:5-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அங்கிருந்த ஒருவன் முப்பத்தெட்டு வருடங்களாக நோயாளியாயிருந்தான். இயேசு அவனைக் கண்டு, அங்கே அவன் அநேக காலமாக இந்நிலையில் கிடப்பதை அறிந்துகொண்டார். அவர் அவனிடம், “நீ சுகமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அந்த நோயுற்ற மனிதன், “ஐயா, தண்ணீர் கலக்கப்படும்போது, நான் குளத்தில் இறங்குவதற்கு எனக்கு உதவிசெய்ய ஒருவரும் இல்லை. நான் இறங்குவதற்கு முயற்சி செய்கையில், வேறொருவன் எனக்கு முன்பாகவே இறங்கி விடுகிறான்” என்றான். அப்பொழுது இயேசு அவனிடம், “எழுந்திரு! உன் படுக்கையை தூக்கிக்கொண்டு நட” என்றார். உடனே அவன் குணமடைந்தான்; மேலும் தன் படுக்கையையும் எடுத்துக்கொண்டு நடந்துபோனான். இது நிகழ்ந்த நாள் யூதருடைய ஒரு ஓய்வுநாளாயிருந்தது.

யோவான் 5:5-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

முப்பத்தெட்டு வருடங்கள் வியாதியாயிருந்த ஒரு மனிதன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு பார்த்து, அவன் அநேக நாளாக வியாதி உள்ளவன் என்று அறிந்து, அவனைப் பார்த்து: சுகமாகவேண்டும் என்று விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வியாதியுள்ளவன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய்விடுகிறதற்கு ஒருவரும் இல்லை, நான் போகிறதற்குமுன் வேறொருவன் எனக்கு முன்னே இறங்கிவிடுகிறான் என்றான். இயேசு அவனைப் பார்த்து: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனிதன் சுகமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது.

யோவான் 5:5-9 பரிசுத்த பைபிள் (TAERV)

அவர்களில் ஒருவன் முப்பத்தெட்டு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்தான். இயேசு அந்த நோயாளி அங்கு படுத்துக்கிடப்பதைக் கண்டார். அவன் நீண்ட காலமாக நோயாளியாக இருப்பதை அவர் அறிந்தார். ஆகையால் அவர் அவனிடம், “நீ குணமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார். “ஐயா, தண்ணீர் கலங்கும்போது நான் போய் நீரில் இறங்குவதற்கு எனக்கு உதவி செய்ய யாருமில்லை. முதல் மனிதனாகப் போய் மூழ்குவதற்கு முயல்வேன். ஆனால் எனக்கு முன்னால் எவனாவது ஒருவன் முதல் மனிதனாகப் போய் மூழ்கிவிடுகிறான்” என்று அந்த நோயாளி பதில் சொன்னான். பிறகு இயேசு “எழுந்து நில். உனது படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். உடனே அந்த நோயாளி குணமடைந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். இது நிகழ்ந்த அந்த நாளோ ஓய்வு நாள்.