யோவான் 6:25-70

யோவான் 6:25-70 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைக் கண்டபோது: ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர் என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார். அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்? வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானத்திலிருந்திறங்கி. உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார். அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து: இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம். என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஜீவ அப்பம் நானே, உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார். அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார். அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள். சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ? மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார். அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்.

யோவான் 6:25-70 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கடலின் மறுகரையிலே அவர்கள் இயேசுவைக் கண்டபோது, அவர்கள் அவரிடம், “போதகரே, எப்பொழுது நீர் இங்கே வந்தீர்?” என்று கேட்டார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் அடையாளங்களைக் கண்டதினால் அல்ல, இங்கே திருப்தியாகச் சாப்பிட்டதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள். அழிந்துபோகும் உணவுக்காக வேலைசெய்யவேண்டாம், நித்திய வாழ்வுவரை நிலைநிற்கும் உணவுக்காகவே வேலைசெய்யுங்கள். அதை மானிடமகனாகிய நான் உங்களுக்குக் கொடுப்பேன்; பிதாவாகிய இறைவன் என்மேலேயே தமது அங்கீகாரத்தின் முத்திரையைப் பதித்திருக்கிறார்” என்றார். அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “இறைவனுடைய வேலையை நிறைவேற்ற நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “இறைவன் அனுப்பிய என்னை விசுவாசிப்பதே இறைவனுடைய வேலை” என்றார். அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நாங்கள் கண்டு உம்மை விசுவாசிக்கும்படி, நீர் எங்களுக்கு என்ன அடையாளத்தைக் கொடுப்பீர்? என்னத்தைச் செய்வீர்? எங்கள் முற்பிதாக்கள் பாலைவனத்தில் மன்னா என்னும் உணவைச் சாப்பிட்டார்களே; ‘அவர்கள் சாப்பிடுவதற்கு அவர் பரலோகத்திலிருந்து உணவு கொடுத்தார்’ என்று எழுதியிருக்கிறதே” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், பரலோகத்திலிருந்து உங்களுக்கு உணவு கொடுத்தது மோசே அல்ல, என் பிதாவே பரலோகத்திலிருந்து வந்த உண்மையான உணவை உங்களுக்குக் கொடுக்கிறார். பரலோகத்திலிருந்து இறங்கிவந்து, உலகத்துக்கு ஜீவன் கொடுக்கிற நானே இறைவனின் உணவு” என்றார். அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, எப்பொழுதும் இந்த உணவை நீர் எங்களுக்குத் தாரும்” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “நானே ஜீவ அப்பம். என்னிடம் வருகிறவன் ஒருபோதும் பசியுடன் போகமாட்டான். என்னை விசுவாசிக்கிறவன் ஒருபோதும் தாகமடையமாட்டான். நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என்னைக் கண்டு இன்னும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள். பிதா எனக்குக் கொடுக்கின்ற அனைவரும் என்னிடம் வருவார்கள். என்னிடம் வருகிற ஒருவரையும் நான் துரத்திவிடமாட்டேன். ஏனெனில் நான் என்னுடைய சித்தத்தைச் செய்வதற்காக அல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்வதற்காகவே பரலோகத்திலிருந்து வந்திருக்கிறேன். அவர் எனக்குத் தந்திருப்பவர்கள் எல்லோரிலும் நான் ஒருவரையும் இழந்துவிடக் கூடாது. கடைசி நாளிலே நான் அவர்களை எழுப்பவேண்டும் என்பதே என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது. என்னைக் கண்டு என்னில் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறவேண்டும். கடைசி நாளில் நான் அவர்களை எழுப்பவேண்டும் என்பதே என் பிதாவின் சித்தமாயிருக்கிறது” என்றார். “நானே பரலோகத்திலிருந்து கீழே வந்த உணவு” என்று இயேசு சொன்னதால், யூதர்களில் சிலர் அவரைக்குறித்து முறுமுறுக்கத் தொடங்கினார்கள். அவர்கள் இயேசுவைப்பற்றி, “இவர் யோசேப்பின் மகன் இயேசு அல்லவா? இவருடைய தகப்பனையும் தாயையும் நமக்குத் தெரியுமே. அப்படியிருக்க, ‘நான் பரலோகத்திலிருந்து வந்தேன்’ என்று இப்பொழுது இவர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்களுக்குள்ளே முறுமுறுத்துக் கொள்வதை நிறுத்துங்கள்” என்றார். “என்னை அனுப்பிய பிதா, ஒருவனை ஈர்த்துக்கொள்ளாவிட்டால், ஒருவரும் என்னிடத்தில் வரமாட்டார்கள். என்னிடம் வருகிறவரையோ நான் கடைசி நாளில் எழுப்புவேன். ‘அவர்கள் எல்லோரும் இறைவனால் போதிக்கப்பட்டிருப்பார்கள்’ என்று இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியே பிதாவுக்குச் செவிகொடுத்து, அவரிடம் கற்றுக்கொள்கிற ஒவ்வொருவனும் என்னிடம் வருகிறான். இறைவனிடமிருந்து வந்த என்னைத்தவிர, ஒருவரும் பிதாவைக் கண்டதில்லை; நான் மட்டுமே பிதாவைக் கண்டிருக்கிறேன். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. நானே ஜீவ அப்பம். உங்கள் முற்பிதாக்கள் பாலைவனத்தில் மன்னா என்னும் உணவைச் சாப்பிட்டார்கள்; ஆனால் அவர்கள் இறந்துபோனார்களே. ஆனால் புசிக்கிறவர்கள் சாகாமல் இருக்கக்கூடிய அப்பம் இங்கு இருக்கிறது. அது பரலோகத்திலிருந்து வந்திருக்கிறது. நானே பரலோகத்திலிருந்து வந்த ஜீவ அப்பம். யாராவது இந்த அப்பத்தைச் சாப்பிட்டால், அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். உலகத்தின் வாழ்வுக்காக நான் கொடுக்கும் அப்பம் எனது மாம்சமே” என்றார். அப்பொழுது யூதர்கள், “இவன் எப்படி தன் மாம்சத்தை நமக்குச் சாப்பிடக் கொடுப்பான்?” என்று தங்களுக்குள்ளே கடுமையாய் வாக்குவாதம் பண்ணத் தொடங்கினார்கள். இயேசு அவர்களிடம், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் மானிடமகனாகிய எனது மாம்சத்தைச் சாப்பிட்டு, என்னுடைய இரத்தத்தை பானம் பண்ணாவிட்டால் உங்களுக்குள்ளே ஜீவன் இருக்கமாட்டாது. எனது மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவருக்கு, நித்திய ஜீவன் உண்டு. நான் அவரை கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன். ஏனெனில் எனது மாம்சமே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம். எனது மாம்சத்தைப் புசித்து, எனது இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவர், என்னில் தங்கி வாழ்கிறார். நானும் அவரில் வாழ்கிறேன். ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினார். பிதாவின் நிமித்தமே நான் உயிர் வாழ்கிறேன். அதைப் போலவே என் மாம்சத்தைப் புசிக்கிறவர் என் நிமித்தம் வாழ்வடைவார். இதுவே பரலோகத்திலிருந்து வந்த அப்பம். உங்கள் முற்பிதாக்கள் மன்னா புசித்தும் இறந்துபோனார்கள். ஆனால் இந்த அப்பத்தைச் சாப்பிடுகிறவர் என்றென்றுமாய் வாழ்வார்” என்றார். இயேசு கப்பர்நகூமிலே ஜெப ஆலயத்தில் போதித்தபோது இதைச் சொன்னார். இதைக் கேட்ட இயேசுவினுடைய சீடர்களில் பலர், “இது ஒரு கடுமையான போதனை. யாரால் இதை ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றார்கள். தமது சீடர்கள் இதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு அறிந்து அவர்களிடம், “இது உங்கள் மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறதா? மானிடமகனாகிய நான் முன்பிருந்த இடத்திற்கு மேலெழுந்து போவதை நீங்கள் கண்டீர்களானால், அது உங்களுக்கு எப்படியிருக்கும்! பரிசுத்த ஆவியானவரே ஜீவனைக் கொடுக்கிறார்; மாம்சமானதோ ஒன்றுக்கும் உதவாது. நான் உங்களுடன் பேசிய வார்த்தைகள் ஆவியானவரையும் ஜீவனையும் கொண்டுள்ளன. ஆனால் உங்களில் சிலர் விசுவாசியாமல் இருக்கிறீர்கள்” என்றார். ஏனெனில் இயேசு தொடக்கத்திலிருந்தே அவர்களில் யார் தம்மை விசுவாசிக்கவில்லை என்றும், யார் தம்மைக் காட்டிக்கொடுப்பான் என்றும் அறிந்திருந்தார். மேலும் இயேசு சொன்னதாவது, “யாரையாவது என் பிதா எனக்கு கொடுத்தால் மட்டுமே, அவர் என்னிடம் வரமுடியும் என்று இதனாலேயே நான் உங்களுக்குச் சொன்னேன்” என்றார். அப்பொழுதிலிருந்து இயேசுவின் சீடர்களில் பலர் அவரைவிட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள். தொடர்ந்து அவர்கள் அவரைப் பின்பற்றவில்லை. அப்பொழுது இயேசு பன்னிரண்டு பேரிடமும், “நீங்களும் போய்விட விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். சீமோன் பேதுரு அதற்குப் பதிலாக, “ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் அல்லவா உண்டு. நீர் இறைவனின் பரிசுத்தர் என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்” என்றான். அப்பொழுது இயேசு, “பன்னிரண்டு பேராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? ஆனால் உங்களில் ஒருவன் பிசாசாக இருக்கிறான்!” என்றார்.

யோவான் 6:25-70 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைப் பார்த்தபோது: ரபீ, நீர் எப்பொழுது இந்த இடத்திற்கு வந்தீர் என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் அற்புதங்களைப் பார்த்ததினால் அல்ல, நீங்கள் அப்பங்கள் புசித்துத் திருப்தியானதினால் தான் என்னைத் தேடுகிறீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அழிந்துபோகிற உணவிற்காக இல்லை, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற உணவிற்காகவே செயல்களை நடப்பியுங்கள்; அதை மனிதகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் நிச்சயத்திருக்கிறார் என்றார். அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: தேவனுக்குரிய செயல்களை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்குரிய செயல்களாக இருக்கிறது என்றார். அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படி நாங்கள் பார்க்கதக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்ன காரியத்தை நடப்பிக்கிறீர்? வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தை சாப்பிடக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய முற்பிதாக்கள் வனாந்திரத்தில் மன்னாவைச் சாப்பிட்டார்களே என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானத்தில் இருந்து இறங்கி. உலகத்திற்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே, தேவன் தரும் அப்பம் என்றார். அப்பொழுது அவர்கள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்கு கொடுக்கவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருபோதும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் ஒருபோதும், தாகமடையான். நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் விசுவாசியாமல் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறதெல்லாம் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் வெளியே தள்ளுவதில்லை. என் விருப்பத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தின்படி செய்யவே, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன். அவர் எனக்குக் கொடுத்ததில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் விருப்பமாக இருக்கிறது. குமாரனைப் பார்த்து, அவரிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய விருப்பமாக இருக்கிறது என்றார். நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து: இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும், தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படி இருக்க, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுக்குள் முறுமுறுக்க வேண்டாம். என்னை அனுப்பின பிதா, ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். எல்லோரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே; ஆகவே, பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். தேவனிடத்தில் இருந்து வந்தவரேதவிர வேறு ஒருவரும் பிதாவைப் பார்த்ததில்லை, இவரே பிதாவைப் பார்த்தவர். என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஜீவ அப்பம் நானே. உங்களுடைய பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைச் சாப்பிட்டிருந்தும் மரித்தார்கள். இதிலே சாப்பிடுகிறவன் மரிக்காமலும் இருக்கும்படி வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே. நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தை சாப்பிடுகிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம், உலக மக்களின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என்னுடைய சரீரமே என்றார். அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய சரீரத்தை எப்படி நமக்கு சாப்பிடக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்தார்கள். அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனுடைய சரீரத்தைச் சாப்பிடாமலும், அவருடைய இரத்தத்தைக் குடிக்காமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். என் சரீரம் உண்மையான உணவாக இருக்கிறது, என் இரத்தம் உண்மையான பானமாக இருக்கிறது. என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். வானத்திலிருந்து இறங்கின அப்பம் இதுவே; இது உங்களுடைய தகப்பன்மார்கள் புசித்த மன்னாவைப்போல அல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கும்போது இவைகளைச் சொன்னார். அவருடைய சீடர்களில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்கள். சீடர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்கள் என்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களைப் பார்த்து: இது உங்களுக்கு இடறலாக இருக்கிறதோ? மனிதகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் பார்ப்பீர்களானால் எப்படி இருக்கும்? ஆவியே உயிர்ப்பிக்கிறது, சரீரமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாகவும், ஜீவனாகவும் இருக்கிறது. ஆனாலும் உங்களில் விசுவாசிக்காதவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றார்; விசுவாசிக்காதவர்கள் இவர்கள் என்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இவன்தான் என்றும் ஆரம்பமுதல் இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: ஒருவன் என் பிதாவின் அனுமதி பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதற்காகவே உங்களுக்குச் சொன்னேன் என்றார். அதுமுதல் அவருடைய சீடர்களில் அநேகர் அவருடனேகூட நடக்காமல் பின்வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிரண்டுபேரையும் பார்த்து: நீங்களும் போய்விட விருப்பமாக இருக்கிறீர்களோ என்றார். சீமோன்பேதுரு அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் இருக்கிறது. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். இயேசு அவர்களைப் பார்த்து: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாக இருக்கிறான் என்றார்.

யோவான் 6:25-70 பரிசுத்த பைபிள் (TAERV)

கடலின் அக்கரையில் இயேசுவை மக்கள் கண்டுபிடித்தனர். அவர்கள், “போதகரே, நீங்கள் இங்கு எப்பொழுது வந்தீர்கள்?” என்று கேட்டனர். “ஏன் என்னைத் தேடுகிறீர்கள்? எனது வல்லமையை வெளிப்படுத்தும் எனது அற்புதங்களைப் பார்த்தீர்கள். அதற்காகவா என்னைத் தேடுகிறீர்கள்? இல்லை. நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அப்பத்தை உண்டீர்கள், திருப்தியாக உண்டீர்கள், அதனால் என்னைத் தேடுகிறீர்கள். பூமியிலுள்ள உணவுகள் கெட்டு அழிந்துபோகும். ஆகையால் அத்தகைய உணவுக்காக நீங்கள் வேலை செய்யவேண்டாம். ஆனால் எப்பொழுதும் நன்மையையும் நித்திய வாழ்வையும் தருகிற உணவுக்காக வேலை செய்யுங்கள். மனித குமாரனே உங்களுக்கு அத்தகைய உணவினைத் தருவார். தேவனாகிய பிதா, தான் மனித குமாரனோடு இருப்பதைக் காட்டிவிட்டார்” என்று இயேசு கூறினார். “நாங்கள் எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்?” என்று மக்கள் இயேசுவிடம் கேட்டனர். “தேவனால் அனுப்பப்பட்ட ஒருவரை நீங்கள் நம்பவேண்டும். இதுவே நீங்கள் செய்யத்தக்கது என்று தேவன் விரும்புகிறார்” என இயேசு பதிலுரைத்தார். “தேவனால் அனுப்பப்பட்டவர் நீர்தான் என்பதை நிரூபிக்க என்ன அற்புதத்தை நீர் செய்யப் போகிறீர். நீர் செய்யும் அற்புதத்தைப் பார்க்க முடியுமெனில், அதற்குப் பின்னர் நாங்கள் உம்மை நம்புவோம். என்ன செய்யப் போகிறீர்? நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் தேவன் கொடுத்த மன்னாவை (உணவு) உண்டார்கள். இது ‘தேவன் பரலோகத்தில் இருந்து அவர்களுக்கு உண்பதற்கு அப்பத்தைக் கொடுத்தார்,’ என்று எழுதப்பட்டிருக்கிறது” என்று மக்கள் கேட்டனர். “நான் உண்மையைச் சொல்லுகிறேன். பரலோகத்திலிருந்து அப்பத்தை உங்களுக்கு கொடுத்தது மோசே அல்ல. ஆனால் என்னுடைய பிதா பரலோகத்திலிருந்து உண்மையான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். தேவனின் அப்பம் என்பது என்ன? பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்து உலகத்துக்காக ஜீவனைத் தருகிற ஒருவர்தான் தேவனின் அப்பம்” என்றார் இயேசு. “ஆண்டவரே, எப்பொழுதும் அந்த அப்பத்தை எங்களுக்குத் தாரும்” என்றனர் மக்கள். “நான்தான் உங்களுக்கு ஜீவனளிக்கும் அப்பம். என்னிடம் வருகிற மனிதன் என்றென்றைக்கும் பசியோடு இருப்பதில்லை. என்மீது நம்பிக்கை வைக்கிற எவனும் எப்பொழுதும் தாகமாய் இருப்பதில்லை. நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் என்மீது நம்பிக்கையில்லாமல் இருக்கிறீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன். எனது பிதா என் மக்களை எனக்குத் தந்திருக்கிறார். அம்மக்களில் ஒவ்வொருவரும் என்னிடம் வருவார்கள். என்னிடம் வருகிற ஒவ்வொருவரையும் நான் ஏற்றுக்கொள்வேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்வதற்காக நான் பரலோகத்தில் இருந்து வந்திருக்கிறேன். நான் விரும்புவதைச் செய்வதற்கு வரவில்லை. தேவன் கொடுத்த மக்களில் எவரையும் நான் இழக்கக்கூடாது. நான் இறுதி நாளில் அவர்களையெல்லாம் எழுப்புவேன். என்னை அனுப்பினவர் நான் செய்யவேண்டும் என்று விரும்புவதும் இதைத்தான். குமாரனைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அவரில் நம்பிக்கை வைத்து நித்திய ஜீவனைப் பெறுகின்றனர். நான் அந்த மனிதர்களை இறுதி நாளில் எழுப்புவேன். இதுதான் எனது பிதாவின் விருப்பமும் ஆகும்” என்றார் இயேசு. பிறகு யூதர்கள் இயேசுவைப்பற்றி முறு முறுக்கத் தொடங்கினர். ஏனென்றால் “நான் பரலோகத்திலிருந்து வந்த அப்பம்” என்று இயேசு சொன்னார். அதற்கு யூதர்கள், “இவர் இயேசு. நாங்கள் இவரது தந்தையையும் தாயையும் அறிவோம். இயேசு யோசேப்பின் குமாரன். அவர் எப்படி நான் பரலோகத்திலிருந்து வந்தேன் என்று சொல்லலாம்?” என்று கேட்டனர். “ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள். என்னை அனுப்பியவர் அந்தப் பிதாதான். அவரே மக்களை என்னிடம் அழைத்து வருகிறவர். நான் இறுதி நாளில் அவர்களை எழுப்புவேன். என் பிதா என்னிடம் மக்களை அழைத்து வராவிட்டால், எவரும் என்னிடம் வர முடிவதில்லை. இது தீர்க்கதரிசிகளின் மூலம் எழுதப்பட்டிருக்கிறது, ‘தேவன் எல்லா மக்களுக்கும் கற்றுத் தருவார்.’ மக்கள் அப்பிதாவைக் கவனிக்கிறார்கள். கற்றுக்கொள்கிறார்கள். பிறகு அவர்கள் என்னிடம் வருகிறார்கள். எவரும் பிதாவைப் பார்த்திருப்பதாக நான் கருதவில்லை. தேவனிடம் இருந்து வந்தவர் மட்டுமே அவரைப் பார்த்திருக்கிறார். “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒருவன் நம்பிக்கை வைத்தால் அவன் நித்திய ஜீவனைப் பெறுவான். நானே ஜீவனளிக்கும் அப்பம். உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே மாண்டுபோனார்கள். நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் உயிர்வாழ்வான். என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். நான் என் சரீரத்தைத் தருவேன். உலகில் உள்ளவர்கள் வாழ்வைப் பெறுவார்கள்” என்று இயேசு கூறினார். பிறகு யூதர்கள் தங்களுக்குள் விவாதம் செய்துகொண்டனர். “எவ்வாறு இந்த மனிதன் தனது சரீரத்தை நாம் உண்ணும்படி தருவான்?” என்றனர் அவர்கள். “நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் மனித குமாரனின் சரீரத்தை உண்ணவேண்டும். அவரது இரத்தத்தை அருந்த வேண்டும். இதனை நீங்கள் செய்யாவிட்டால், உங்களுக்கு உண்மையான வாழ்க்கை கிடைக்காது. எனது சரீரத்தைப் புசித்து, இரத்தத்தை அருந்துகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான். நான் அவனை இறுதி நாளில் எழுப்புவேன். எனது சரீரமே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம். ஒருவன் எனது சரீரத்தைப் புசித்து என் இரத்தத்தை அருந்துவானேயானால் அவன் என்னிலும் நான் அவனிலும் வாழ்வதாகும். “பிதா என்னை அனுப்பினார். பிதா வாழ்கிறார். அவரால் நானும் வாழ்கிறேன். ஆகையால் என்னை உண்ணுகிறவன் என்னால் உயிர் வாழ்கிறான். நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் புசித்த அப்பத்தைப்போல் அல்ல நான். அவர்கள் அந்த அப்பத்தை உண்டார்கள். ஆனால், மற்றவர்களைப்போன்று அவர்கள் இறந்துபோயினர். நானோ பரலோகத்திலிருந்து இறங்கி வந்த அப்பம். இதனை உண்ணுகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான்” என்றார் இயேசு. இவை எல்லாவற்றையும் இயேசு, கப்பர்நகூமிலுள்ள யூதர்களின் ஜெப ஆலயத்தில் போதனைசெய்யும்போது கூறினார். இயேசுவின் சீஷர்கள் இவற்றைக் கேட்டார்கள். “இந்த உபதேசங்கள் ஏற்றுக்கொள்வதற்குக் கடினமானவை, இவற்றை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்?” என சீஷர்கள் கூறினர். அவருடைய சீஷர்கள் முறுமுறுப்பதை இயேசு அறிந்துகொண்டார். எனவே இயேசு அவர்களிடம், “நான் சொன்னவற்றை ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறதா?” என்று கேட்டார். “அப்படியானால் மனித குமாரன் தாம் வந்த இடத்திற்கே திரும்பி ஏறிப்போவதைக் காண்பது எப்படியிருக்கும்? ஒரு மனிதனுக்கு அவனது சரீரம் மட்டுமே வாழ்வு அளிப்பது இல்லை. அவனது ஆவியே ஜீவனைத் தருகிறது. நான் உங்களுக்குச் சொன்ன வசனங்கள் யாவும் ஆவியே. இவையே ஜீவனைத் தருவன. ஆனால் உங்களில் சிலர் விசுவாசம் இல்லாமல் இருக்கிறீர்கள்” என்றார். (தன்னை விசுவாசிக்காதவர்களை இயேசு புரிந்துகொண்டார். இதனை அவர் துவக்கம் முதலே புரிந்துகொண்டார். தனக்கு எதிராகத் திரும்புகிறவனையும் இயேசு அறிந்திருந்தார்.) அதனால்தான், “நான், ‘பிதா அனுமதித்தால் ஒழிய ஒருவனும் என்னிடம் வரமாட்டான்’ என்று சொன்னேன்” என்றார் இயேசு. இயேசு இவ்வாறு சொன்னபிறகு அவரது சீஷர்களில் அநேகர் அவரை விட்டுப் போயினர். அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்வதை நிறுத்தினர். பிறகு இயேசு தனது பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும் பார்த்து, “நீங்களும் விட்டுவிட்டு விலகிச் செல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். சீமோன் பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாங்கள் எங்கே போவோம்? நித்திய ஜீவனுக்குரிய வார்த்தைகளை நீரே வைத்திருக்கிறீர். நாங்கள் உம்மை நம்புகிறோம். நீரே தேவனிடமிருந்து வந்த பரிசுத்தமானவர் என்பதை நாங்கள் அறிவோம்” என்றார். பிறகு இயேசு அவர்களிடம், “என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிருவர் நீங்கள். ஆனால் உங்களில் ஒருவன் பிசாசு” என்றார்.