யோபு 1:1-5

யோபு 1:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஊத்ஸ் என்னும் நாட்டில் யோபு என்றொரு மனிதன் வாழ்ந்தான். அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனுமாய் இருந்தான். அவன் இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகி நடந்தான். அவனுக்கு ஏழு மகன்களும், மூன்று மகள்களும் இருந்தார்கள். அவனுக்கு ஏழாயிரம் செம்மறியாடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஜோடி ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளும் இருந்தன, அநேகம் வேலைக்காரர்களும் இருந்தார்கள். கிழக்குப் பகுதியில் இருந்த மக்கள் எல்லோரிலும் யோபு மிக முக்கியமான மனிதனாய் இருந்தான். அவனுடைய மகன்கள் ஒவ்வொருவரும், தன்தன் வீட்டில் முறையே விருந்து கொடுப்பது வழக்கம். அத்துடன் தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களுடன் விருந்துக்கு அழைப்பார்கள். ஒவ்வொரு முறையும் விருந்து முடிந்தவுடன் யோபு, “என் பிள்ளைகள் ஒருவேளை தங்கள் இருதயங்களில் பாவம் செய்து, இறைவனைத் தூஷித்திருக்கலாம்” என நினைத்து அவர்களை வரவழைத்துத் தூய்மைப்படுத்துவான். அதிகாலையில் ஒவ்வொருவருக்காகவும் தகனபலிகளையும் செலுத்துவான். இவ்வாறு செய்வது யோபுவின் வழக்கமான நடைமுறையாய் இருந்தது.

யோபு 1:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான்: அந்த மனிதன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். அவனுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தார்கள். அவனுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 500 ஏர்மாடுகளும், 500 கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, மிகுதியான வேலைக்காரர்களும் இருந்தார்கள்; அதினால் அந்த மனிதன் கிழக்குப்பகுதியின் மக்களில் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். அவனுடைய மகன்கள், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களுடன் உணவு சாப்பிட அழைப்பார்கள். விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் மகன்கள் பாவம் செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே நிந்தித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை வரவழைத்து, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லோருடைய எண்ணிக்கையின் வரிசையில் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்த முறையில் யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.

யோபு 1:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

ஊத்ஸ் என்னும் நாட்டில் யோபு என்னும் பெயருள்ள மனிதன் வாழ்ந்து வந்தான். யோபு நல்லவனும் உண்மையுள்ள மனிதனுமாக இருந்தான். தேவனுக்கு பயந்து தீயக் காரியங்களைச்செய்ய மறுத்தான். யோபுவுக்கு ஏழு குமாரர்களும் மூன்று குமாரத்திகளும் இருந்தனர். யோபுவுக்கு 7,000 ஆடுகளும், 3,000 ஒட்டகங்களும், 1,000 காளைகளும், 500 பெண் கழுதைகளும் இருந்தன. அவனிடம் வேலையாட்கள் பலர் இருந்தனர். கிழக்குப் பகுதியில் யோபுவே பெரிய செல்வந்தனாக இருந்தான். யோபுவின் குமாரர்கள் ஒருவருக்குப் பின் ஒருவராகத் தங்கள் வீடுகளில் விருந்து வைத்து, அவர்களின் சகோதரிகளை அழைப்பது வழக்கம். அவனது பிள்ளைகளின் விருந்து முடிந்தப்பின் யோபு அதிகாலையில் எழுந்தான். ஒவ்வொரு பிள்ளைக்காகவும் அவன் தகனபலியை அளித்தான். அவன், “என் பிள்ளைகள் கவலையீனமாக இருந்து, விருந்தின்போது தேவனுக்கெதிராக தங்கள் இருதயங்களில் தூஷிப்பதினால் பாவம் செய்திருக்கக் கூடும்” என்று எண்ணினான். அவனது பிள்ளைகள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறும்படியாக யோபு எப்போதும் இவ்வாறு செய்தான்.

யோபு 1:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள். அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள். விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.