யோபு 3:1-26
யோபு 3:1-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதற்குப்பின் யோபு தன் வாயைத் திறந்து தன் பிறந்த நாளைச் சபித்தான், யோபு சொன்னதாவது: “நான் பிறந்த நாளும், ‘ஒரு ஆண் குழந்தை உற்பத்தியானது!’ என்று சொல்லப்பட்ட இரவும் அழியட்டும். அந்த நாள் இருளடையட்டும்; உன்னதத்தின் இறைவன் அதைக் கவனத்தில் கொள்ளாதிருக்கட்டும்; அதில் ஒளி பிரகாசியாதிருக்கட்டும். அந்த நாளை இருளும், நிழலும் ஒருமுறை பற்றிக்கொள்ளட்டும்; மேகம் அதின்மேல் மூடிக்கொள்ளட்டும்; மந்தாரம் அதின் வெளிச்சத்தை மூழ்கடிக்கட்டும். அந்த இரவைக் காரிருள் பிடிப்பதாக; வருடத்தின் நாட்களில் அது சேர்க்கப்படாத நாளாகவும், மாதங்களிலும் குறிக்கப்படாமலும் போவதாக. அந்த இரவு பாழாவதாக; அதில் மகிழ்ச்சியின் சத்தம் எதுவும் கேளாதிருக்கட்டும். நாட்களைச் சபிக்கிறவர்களும், லிவியாதான் என்னும் பெரிய பாம்பை, எழுப்புகிறவர்களும் அதைச் சபிக்கட்டும். அந்த நாளின் விடியற்கால நட்சத்திரங்கள் இருளடையட்டும்; பகல் வெளிச்சத்திற்காக அது வீணாய்க் காத்திருக்கட்டும்; அது அதிகாலையின் ஒளிக்கீற்றுகளைக் காணாதிருக்கட்டும். ஏனெனில், அந்த நாள் என் கண்களில் இருந்து கஷ்டத்தை மறைக்காமலும், என் தாயின் கருப்பையை அடைக்காமலும் போயிற்றே. “பிறக்கும்போதே ஏன் நான் அழிந்துபோகவில்லை? நான் கருப்பையில் இருந்து வெளியே வரும்போதே ஏன் சாகவில்லை? என்னை ஏற்றுக்கொள்ள மடியும், எனக்குப் பால் கொடுக்க மார்பகங்களும் ஏன் இருந்தன? அவ்வாறு இல்லாதிருந்தால், நான் அமைதியாய், இளைப்பாறுவேனே! இப்பொழுது பாழாய்க்கிடக்கும் இடங்களில் தங்களுக்கு அரண்மனைகளைக் கட்டிய பூமியின் அரசர்களோடும், ஆலோசகர்களோடும், பொன்னை உடையவர்களும், தங்கள் வீடுகளை வெள்ளியால் நிரப்பினவர்களுமான ஆளுநர்களோடும் நான் இளைப்பாறுவேனே. அல்லது செத்துப்பிறந்த குழந்தையைப் போலவும், பகல் வெளிச்சத்தைக் காணாத பாலகனைப் போலவும் நான் ஏன் தரையில் புதைக்கப்படவில்லை? கொடியவர்கள் அங்கே கலகத்திலிருந்து ஓய்ந்திருப்பார்கள்; சோர்வுற்றோர் அங்கே இளைப்பாறுவார்கள். கைதிகள்கூட அங்கே சுகம் அனுபவிப்பார்கள்; அடிமைகளை நடத்துபவர்களின் சத்தத்தை இனி அவர்கள் கேட்பதில்லை. அங்கே சிறியவர்களும், பெரியவர்களும் இருக்கிறார்கள்; அத்துடன் அடிமையும் தனது தலைவனிடமிருந்நு விடுதலையாகிறான். “அவலத்தில் மூழ்கியிருப்பவனுக்கு வெளிச்சம் எதற்கு, உள்ளத்தில் கசப்பு உள்ளவனுக்கு வாழ்வு எதற்கு? மறைவான புதையல்களைவிட, சாவைத் தேடியும், அடையாதவர்களுக்கு வாழ்வு ஏன்? அவர்கள் கல்லறையைச் சென்றடையும்போது, மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருப்பார்களா? இறைவனால் நெருக்கப்பட்டு, அவன் போகும் பாதை மறைக்கப்பட்ட, மனிதனுக்கு வாழ்வு ஏன் கொடுக்கப்பட்டிருக்கிறது? பெருமூச்சே எனது உணவு; என் கதறுதல் தண்ணீராய்ப் புரண்டோடுகிறது. நான் எதற்கு பயந்தேனோ, அது என்மேல் வந்தது; நான் எதற்கு அஞ்சினேனோ, அது எனக்கு நிகழ்ந்தது. எனக்கு சமாதானமோ, அமைதியோ, இளைப்பாறுதலோ இல்லை. ஆனால் மனக்குழப்பத்தை மட்டும் அனுபவிக்கிறேன்.”
யோபு 3:1-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அதற்குப் பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து, வசனித்துச் சொன்னது என்னவென்றால்: நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியானது என்று சொல்லப்பட்ட இரவும் அழிவதாக. அந்த நாள் இருளாக்கப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரிக்காமலும், வெளிச்சம் அதின்மேல் பிரகாசிக்காமலும், கடுமையான இருளும் மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக. அந்த இரவை இருள் பிடிப்பதாக; வருடத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாக இராமலும் மாதக்கணக்கிலே அது வராமலும் போவதாக. அந்த இரவு தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக. நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பச் செய்கிறவர்களும், அதைச் சபிப்பார்களாக. அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் தோன்றாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது பார்க்காமலும் இருப்பதாக. நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே. நான் கர்ப்பத்தில் அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே இறக்காமலும் போனதென்ன? என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண மார்பகங்களும் இருந்ததென்ன? அப்படியில்லாதிருந்தால், அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து, பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களுடனும் மந்திரிமார்களுடனும், அல்லது, பொன்னை உடையவர்களும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களுடன் நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே. அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும், வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகளைப்போலவும் இருப்பேனே. துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று சோர்ந்து போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள். சிறைப்பட்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமர்ந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை. சிறியவனும் பெரியவனும் அங்கே சமமாக இருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான். மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும், கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து, அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனவருத்தமும் உள்ள இவர்களுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன? தன் வழியைக் காணமுடியாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன? என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது. நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது; நான் பயப்பட்டது எனக்கு வந்தது. எனக்குச் சுகமுமில்லை, நிம்மதியுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் துன்பமே வந்தது.
யோபு 3:1-26 பரிசுத்த பைபிள் (TAERV)
பின்பு யோபு தன் வாயைத் திறந்து தான் பிறந்த நாளை சபித்தான். அவன், “நான் பிறந்தநாள் என்றென்றும் இராதபடி அழிக்கப்படட்டும் என நான் விரும்புகிறேன். ‘அது ஒரு ஆண்’ என அவர்கள் கூறிய இரவு, என்றும் இருந்திருக்கக் கூடாதென நான் விரும்புகிறேன்! அந்நாள் இருண்டு போக விரும்புகிறேன். அந்நாளை தேவன் மறக்க வேண்டுமென விரும்புகிறேன். அந்நாளில் ஒளி பிரகாசித்திருக்கக் கூடாதென விரும்புகிறேன். மரணம் எவ்வளவு இருட்டோ அதுபோல், அந்நாள் அவ்வளவு இருளாயிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இருண்ட மேகங்கள் அந்நாளை மறைக்கட்டுமெனவும், நான் பிறந்த நாளிலிருந்த இருண்ட மேகங்கள் ஒளியை அச்சுறுத்தட்டும் எனவும் நான் விரும்புகிறேன். இருள் நான் பிறந்த அந்த இரவை ஆக்கிரமிக்கட்டும். நாள்காட்டியிலிருந்து அந்த இரவு நீக்கப்படட்டும். எந்த மாதத்திலும் அந்த இரவைச் சேர்க்க வேண்டாம். அந்த இரவு எதையும் விளைவிக்காதிருக்கட்டும். அவ்விரவில் மகிழ்ச்சியான எந்த ஒலியும் கேளாதிருக்கட்டும். சில மந்திரவாதிகள் லிவியாதானை எழுப்ப விரும்புகிறார்கள். அவர்கள் சாபங்கள் இடட்டும். நான் பிறந்தநாளை அவர்கள் சபிக்கட்டும். அந்நாளின் விடிவெள்ளி இருளாகட்டும். அந்த இரவு விடியலின் ஒளிக்காகக் காத்திருக்கட்டும், ஆனால் அந்த ஒளி ஒருபோதும் வராதிருக்கட்டும். சூரியனின் முதல் கதிர்களை அது பார்காதிருக்கட்டும். ஏனெனில், அந்த இரவு நான் பிறப்பதைத் தடை செய்யவில்லை. இத்தொல்லைகளை நான் காணாதிருக்கும்படி, அந்த இரவு என்னைத் தடை செய்யவில்லை. நான் பிறந்தபோதே ஏன் மரிக்கவில்லை? நான் ஏன் பிறப்பில் மடியவில்லை? ஏன் என் தாய் என்னை அவளது ழுழங்காலில் தாங்கிக்கொண்டாள்? ஏன் என் தாயின் மார்புகள் எனக்குப் பாலூட்டின? நான் பிறந்தபோதே மரித்திருந்தால், இப்போது சமாதானத்தோடு இருந்திருப்பேன். முற்காலத்தில் பூமியில் வாழ்ந்த ராஜாக்களோடும் ஞானிகளோடும் நான் உறக்கமாகி ஓய்வுக்கொண்டிருக்க விரும்புகிறேன். இப்போது அழிக்கப்பட்டுக் காணாமற்போன இடங்களைத் தங்களுக்காக அவர்கள் கட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் வீடுகளைப் பொன்னாலும் வெள்ளியாலும் நிரப்பினர், அவர்களோடு கூட புதைக்கப்பட்டிருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். பிறப்பில் மரித்துப் புதைக்கப்பட்ட குழந்தையாய் நான் ஏன் இருக்கவில்லை? பகலின் ஒளியைக் கண்டிராத குழந்தையைப்போன்று இருந்திருக்கமாட்டேனா என விரும்புகிறேன். கல்லறையில் இருக்கும்போது தீயோர், தொல்லை தருவதை நிறுத்துகிறார்கள். சோர்வுற்ற ஜனங்கள் கல்லறையில் ஓய்வெடுக்கிறார்கள். சிறைக் கைதிகளும்கூட கல்லறையில் சுகம் காண்கிறார்கள். அவர்களைக் காப்போர் அவர்களை நோக்கிக் கூக்குரல் இடுவதை அவர்கள் கேட்பதில்லை, முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் எனப் பலவகை ஜனங்கள் கல்லறையில் இருக்கிறார்கள். அடிமையுங்கூட எஜமானனிடமிருந்து விடுதலைப் பெற்றிருக்கிறான். “துன்புறும் ஒருவன் ஏன் தொடர்ந்து வாழ வேண்டும்? கசந்த ஆன்மாவுடைய ஒருவனுக்கு ஏன் கசந்து வாழவேண்டும்? அம்மனிதன் மரிக்க விரும்புகிறான், ஆனால் மரணம் வருவதில்லை. துக்கமுள்ள அம்மனிதன் மறைந்த பொக்கிஷத்தைப் பார்க்கிலும் மரணத்தைத் தேடுகிறான். அந்த ஜனங்கள் தங்கள் கல்லறைகளைக் காண்பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் புதை குழியைக் (கல்லறையை) கண்டு களிப்படைகிறார்கள். ஆனால் தேவன் எதிர்காலத்தை இரகசியமாக வைத்திருக்கிறார். அவர்களைப் பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் ஒரு சுவரை எழுப்புகிறார். சாப்பிடும் நேரத்தில் நான் துன்பத்தால் பெரு மூச்சு விடுகிறேன். மகிழ்ச்சியினால் அல்ல. என் முறையீடுகள் தண்ணீரைப் போல வெளிப்படுகின்றன. ஏதோ பயங்கரம் எனக்கு நிகழலாம் என அஞ்சியிருந்தேன். அதுவே எனக்கு நிகழ்ந்துள்ளது! நான் மிகவும் அஞ்சியது எனக்கு நேரிட்டது! நான் அமைதியுற முடியவில்லை. என்னால் இளைப்பாற முடியவில்லை. நான் ஓய்வெடுக்க இயலவில்லை. நான் மிகவும் கலங்கிப்போயிருக்கிறேன்!” என்றான்.
யோபு 3:1-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அதற்குப்பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து, வசனித்துச் சொன்னது என்னவென்றால்: நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட இராத்திரியும் அழிவதாக. அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின்மேல் பிரகாசியாமலும், அந்தகாரமும் மரணஇருளும் அதைக் கறைப்படுத்தி, மப்பு அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை அருக்களிப்பாக்குவதாக. அந்த இராத்திரியை அந்தகாரம் பிடிப்பதாக; வருஷத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாயிராமலும் மாதங்களின் கணக்கிலே அது வராமலும் போவதாக. அந்த இராத்திரி தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக. நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பப்பண்ணத்தக்கவர்களும், அதைச் சபிப்பார்களாக. அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் உண்டாகாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது காணாமலும் இருப்பதாக. நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே. நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன? என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண ஸ்தனங்களும் உண்டாயிருந்ததென்ன? அப்படியில்லாதிருந்தால், அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து, பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களோடும் மந்திரிமார்களோடும், அல்லது, பொன்னை உடையவர்களும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களோடுங்கூட நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே. அல்லது, வெளிப்படாத முதிராப்பிண்டம்போலவும், வெளிச்சத்தைக் காணாத சிசுக்கள்போலவும் இருப்பேனே. துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று விடாய்த்துப்போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள். கட்டுண்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமைந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை. சிறியவனும் பெரியவனும் அங்கே சரியாயிருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான். மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும், பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து, அதற்காகச் சந்தோஷப்படுகிற நிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன? தன் வழியைக் காணக்கூடாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன? என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது. நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது. எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது.