யோனா 1:11-17

யோனா 1:11-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான். அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய்த் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று. அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி, யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது. அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப்பண்ணினார்கள். யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.

யோனா 1:11-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கடல் மென்மேலும் கொந்தளித்தது. எனவே அவர்கள், “கடலின் கொந்தளிப்பை அமைதிப்படுத்த, நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என அவனைக் கேட்டார்கள். “என்னைத் தூக்கிக் கடலுக்குள் எறிந்துவிடுங்கள்; அப்பொழுது அது அமைதலாகும். என் குற்றத்தினாலேயே உங்கள்மேல் இப்பெரும் புயல் வந்திருக்கிறது என நான் அறிவேன்” என அவன் விடையளித்தான். ஆனாலும் அந்த மனிதர், கப்பலை தண்டுவலித்து கரைக்குக் கொண்டுபோகும்படி, தங்களால் இயன்றவரை முயற்சித்தனர். ஆனால் அது அவர்களால் முடியவில்லை. கடலோ முன்பு இருந்ததைவிட, மிக அதிகமாக கொந்தளித்துக் கொண்டேயிருந்தது. அப்பொழுது அவர்கள் யெகோவாவிடம் வேண்டுதல்செய்து, “யெகோவாவே, இந்த மனிதனின் உயிரை எடுத்ததற்காக எங்களைச் சாகவிடாதேயும். குற்றமற்ற ஒரு மனிதனைக் கொன்றதற்கான பழியை எங்கள்மீது சுமத்தாதேயும். ஏனெனில், நீர் எப்பொழுதும் உமது விருப்பத்தின்படியே செய்திருக்கிறீர்” என அழுதார்கள். அதன்பின் அவர்கள் யோனாவைத் தூக்கிக் கப்பலைவிட்டு கடலுக்குள் எறிந்தார்கள். அப்பொழுது கொந்தளித்த கடல் அமைதியானது. இதைக் கண்ட அம்மனிதர்கள் யெகோவாவுக்கு மிகவும் பயந்து, அவருக்கு பலியைச் செலுத்தினார்கள்; அவருக்கு நேர்த்திக்கடன்களையும் செய்தார்கள். ஆனால் யெகோவாவோ, யோனாவை விழுங்கும்படி, ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தியிருந்தார்; யோனா அந்த மீனின் வயிற்றில் மூன்றுநாள் இரவும் பகலும் இருந்தான்.

யோனா 1:11-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்னும் கடல் அதிகமாகக் கொந்தளித்துக்கொண்டிருந்ததால், அவர்கள் அவனை நோக்கி: கடல் நமக்காக அமைதியாகும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்து கடலிலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது கடல் அமைதியாக இருக்கும்; என்னால்தான் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான். அந்த மனிதர்கள் கரைசேருவதற்காக வேகமாகத் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் கடல் மிகவும் மும்முரமாகக் கொந்தளித்துக் கொண்டேயிருந்ததால் அவர்களால் முடியாமற்போனது. அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: ஆ யெகோவாவே, இந்த மனிதனுடைய ஜீவனுக்காக எங்களை அழித்துப்போடாதிரும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதிரும்; தேவரீர் யெகோவா; உமக்குச் சித்தமாக இருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி, யோனாவை எடுத்துக் கடலிலே போட்டுவிட்டார்கள்; கடல் தன்னுடைய மும்முரத்தைவிட்டு அமைதியானது. அப்பொழுது அந்த மனிதர்கள் யெகோவாவுக்கு மிகவும் பயந்து, யெகோவாவுக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைச் செய்தார்கள். யோனாவை விழுங்குவதற்காக ஒரு பெரிய மீனை யெகோவா ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீனின் வயிற்றிலே யோனா இரவுபகல் மூன்றுநாட்கள் இருந்தான்.

யோனா 1:11-17 பரிசுத்த பைபிள் (TAERV)

காற்றும், கடல் அலைகளும் மேலும், மேலும் பலமடைந்தன. எனவே அவர்கள் யோனாவிடம், “நாங்கள் எங்களைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யவேண்டும்? நாங்கள் கடலை அமைதிப்படுத்த உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். யோனா அவர்களிடம், “நான் குற்றம் செய்துவிட்டேன் என்று எனக்குத் தெரியும். என்னால்தான் இந்தப் புயல் வந்துள்ளது என்று எனக்குத் தெரியும். எனவே என்னைக் கடலுக்குள் எறியுங்கள். கடல் அமைதி அடையும்” என்றான். ஆனால் அவர்கள் யோனாவைக் கடலுக்குள் எறிய விரும்பவில்லை. அவர்கள் கப்பலை மறுபடியும் கரைக்குக் கொண்டுப்போக முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. காற்றும், கடல் அலைகளும் மேலும், மேலும் பலமடைந்தன. எனவே அவர்கள் கர்த்தரிடம், “கர்த்தாவே, நாங்கள் இவனை அவன் செய்த தவறுக்காக கடலில் தூக்கி எறிகிறோம். எனவே, ஒரு அப்பாவி மனிதனைக் கொன்றோம் என்று எங்களைக் குற்றப்படுத்தாதிரும். நாங்கள் அவனைக் கொன்றதற்காக எங்களை மரிக்கச் செய்யாதிரும். நீர்தான் கர்த்தர், நீர் என்ன செய்ய விரும்புகிறீரோ அதைச் செய்வீர் என்பதை நாங்கள் அறிகிறோம். ஆனால் தயவு செய்து எங்களிடம் இரக்கமாய் இரும்” என்று அழுதார்கள். அவர்கள் யோனாவைக் கடலுக்குள் வீசினார்கள். புயல் நின்று கடல் அமைதியானது. இதனைப் பார்த்த அவர்கள் பயப்படத் தொடங்கி கர்த்தரிடம் மரியாதை செலுத்தத் தொடங்கினார்கள். அவர்கள் பலி கொடுத்து கர்த்தருக்குச் சிறப்பான வாக்குறுதிகளைச் செய்தார்கள். யோனா கடலுக்குள் விழுந்தவுடன், கர்த்தர் ஒரு பெரிய மீனைத் தேர்ந்தெடுத்து, யோனாவை விழுங்கும்படிச் செய்தார். யோனா அந்த மீனின் வயிற்றுக்குள் மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் இருந்தான்.