யோனா 2:4-10

யோனா 2:4-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன். தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது; ஆழி என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது. பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர். என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது. பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள். நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான். கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது.

யோனா 2:4-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

‘உமது முன்னிலையிலிருந்து நான் துரத்தப்பட்டேன். இருந்தாலும், நான் திரும்பவும் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப்பார்ப்பேன்’ என்றேன். என்னை விழுங்கிய தண்ணீர் என்னைப் பயமுறுத்தியது, ஆழம் என்னை சூழ்ந்துகொண்டது; கடற்பாசிக்கொடிகள் என் கழுத்தைச் சுற்றிக்கொண்டன. மலைகளின் அடிவாரங்கள்வரை நான் அமிழ்ந்தேன், கீழேயுள்ள பூமி என்னை என்றென்றைக்குமாக அடைத்து வைத்தது. ஆனால் என் இறைவனாகிய யெகோவாவே, நீர் குழியிலிருந்து என் உயிரை மேலே கொண்டுவந்தீர். “யெகோவாவே, என் உயிர் தளர்ந்துபோகையில் நான் உம்மையே நினைத்தேன், என் மன்றாட்டு மேலெழுந்து உமது பரிசுத்த ஆலயத்தில் உம்மிடம் வந்தடைந்தது. “சிலர் ஒன்றுக்கும் உதவாத விக்கிரகங்களைப் பற்றிக்கொள்கிறார்கள்; அவர்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய கிருபையை இழந்துபோகிறார்கள். ஆனால், நானோ துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன். நான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவேன். ‘இரட்சிப்பு யெகோவாவிடமிருந்தே வருகிறது’ ” என்றான். யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவை கரையில் கக்கிவிட்டது.

யோனா 2:4-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் உமது கண்களுக்கு எதிரே இல்லாதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆனாலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன். தண்ணீர்கள் என்னுடைய ஜீவனை எடுக்க என்னை நெருக்கினது; ஆழங்கள் என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது. மலைகளின் அடிவாரங்கள்வரைக்கும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாக இருந்தது; ஆனாலும் என் தேவனாகிய யெகோவாவே, நீர் என் உயிரை அழிவிலிருந்து காப்பாற்றினீர். என்னுடைய ஆத்துமா எனக்குள் சோர்ந்துபோகும்போது யெகோவாவை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது. பொய்யான விக்கிரக தெய்வங்களைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் புறக்கணிக்கிறார்கள். நானோ, துதியின் சத்தத்தோடு உமக்குப் பலியிடுவேன்; நான் செய்த பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு யெகோவாவுடையது என்றான். யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிப்போட்டது.

யோனா 2:4-10 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு நான் நினைத்தேன், ‘இப்போது நான் உம் பார்வையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளேன்.’ ஆனால், நான் தொடர்ந்து உதவிக்காக உமது பரிசுத்த ஆலயத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். “கடல் தண்ணீர் என்னை மூடியது. தண்ணீரானது எனது வாயை நிறைத்தது. என்னால் சுவாசிக்க முடியவில்லை. நான் கடலுக்குள் மேலும், மேலும் ஆழமாகச் சென்றேன். கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது. நான் மலைகள் துவங்குகிற கடலின் ஆழத்திற்குச் சென்றேன். நான் இந்தச் சிறைக்குள் என்றென்றும் இருப்பேனோ என்று நினைத்தேன். ஆனால் எனது கல்லறையிலிருந்து என்னை என் தேவனாகிய கர்த்தர் மீட்டார். தேவனே, நீர் எனக்கு மீண்டும் உயிர்கொடுத்தீர். “எனது ஆத்துமா எல்லா நம்பிக்கையையும் இழந்தது. ஆனால், பிறகு நான் கர்த்தரை நினைத்தேன். கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபம் செய்தேன், நீர் உமது பரிசுத்தமான ஆலயத்திலிருந்து எனது ஜெபத்தைக் கேட்டீர். “சிலர் பயனற்ற விக்கிரகங்களை தொழுகின்றார்கள். ஆனால், அந்தச் சிலைகள் அவர்களுக்கு உதவுவதில்லை. கர்த்தர் ஒருவரிடமிருந்தே இரட்சிப்பு வருகிறது. கர்த்தாவே, நான் உமக்குப் பலிகளை கொடுப்பேன். நான் உம்மைத் துதித்து, உமக்கு நன்றி சொல்வேன். நான் உம்மிடம் சிறப்பு வாக்குறுதிகளைச் செய்வேன், நான் வாக்குறுதிப்படி செய்வேன்” என்றான். பிறகு கர்த்தர் மீனோடு பேசினார். மீன் யோனாவை தன் வயிற்றிலிருந்து உலர்ந்த நிலத்தில் கக்கிவிட்டது.