யோசுவா 10:10-43

யோசுவா 10:10-43 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா எமோரியப் படையினரை இஸ்ரயேலருக்கு முன்பாகக் கலக்கமடையச் செய்தார். இஸ்ரயேலர் கிபியோனிலே அவர்களைத் தோற்கடித்து பெரும் வெற்றியீட்டினார்கள். இஸ்ரயேலர் பெத் ஓரோனுக்குப் போகும் வழியெங்கும் அவர்களைத் துரத்திச்சென்று அசேக்கா, மக்கெதா ஆகிய ஊர்கள் வரையிலும் வெட்டி வீழ்த்தினார்கள். அவர்கள் இஸ்ரயேலருக்கு முன்பாகப் பெத் ஓரோனிலிருந்து இறங்கும் வழியில் அசேக்காவரை ஓடுகையில், யெகோவா ஆகாயத்திலிருந்து பெரிய கல்மழையை அவர்கள்மேல் பொழிந்தார். இதனால் இஸ்ரயேலரின் வாளால் தாக்கப்பட்டு இறந்தவர்களைவிட, பெரிய கல்மழையினால் தாக்கப்பட்டு இறந்தவர்கள் அநேகராயிருந்தார்கள். யெகோவா எமோரியரை இஸ்ரயேலரிடம் ஒப்படைத்த அன்று, யோசுவா இஸ்ரயேலர் முன்னிலையில் யெகோவாவிடம் வேண்டிக்கொள்கையில் கூறியதாவது: “சூரியனே, கிபியோனுக்கு மேலாக தரித்து நில்; சந்திரனே ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலாகத் தரித்து நில்.” அப்படியே இஸ்ரயேலர் தங்கள் பகைவர்களைப் பழிவாங்கும்வரை சூரியனும் நின்றது, சந்திரனும் நின்றது. இது யாசேரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. சூரியன் நடுவானத்தில் தரித்து நின்றதால், ஒரு முழுநாள்வரை அது மறையத் தாமதித்தது. யெகோவா ஒரு மனிதனுடைய விண்ணப்பத்திற்கு செவிகொடுத்த இந்த நாளைப்போன்ற ஒரு நாள், இதற்கு முன்பு ஒருபோதும் இருந்ததில்லை, பின்பும் இருக்கவில்லை. நிச்சயமாக யெகோவா இஸ்ரயேல் மக்களுக்காகப் போர்புரிந்தார். அதன்பின் யோசுவா இஸ்ரயேலருடன் கில்காலில் இருந்த முகாமுக்குத் திரும்பிச்சென்றான். இப்போர் நடந்தவேளையில் ஐந்து எமோரிய அரசர்களும் மக்கெதாவிலுள்ள குகையில் ஓடிப்போய் ஒளித்துக்கொண்டார்கள். இந்த ஐந்து அரசர்களும் மக்கெதாவிலுள்ள குகையில் ஒளித்திருக்கிறார்கள் என்ற செய்தி யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது. உடனே யோசுவா இஸ்ரயேலரிடம், “அந்தக் குகைவாசலைப் பெரும் பாறைக் கற்களை உருட்டி மூடிவிடுங்கள். அங்கு சிலரைக் காவலுக்கு நிறுத்துங்கள். நீங்களோ நிற்காமல் உங்கள் பகைவர்களைத் தொடர்ந்து துரத்தி அவர்களைப் பின்நின்று தாக்குங்கள். அவர்களை தங்கள் நகரத்திற்குள் தப்பித்துச்செல்ல விடாதீர்கள். ஏனென்றால் உங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்துவிட்டார்” என்று உத்தரவிட்டான். இவ்வாறே யோசுவாவும், இஸ்ரயேலர்களும் அவர்களை ஒருவரும் மீந்திராதபடி முழுவதும் அழித்தார்கள். ஆனாலும் தப்பிச்சென்ற ஒரு சிலரோ அரண்சூழ்ந்த தங்கள் பட்டணங்களுக்குப் போய்ச்சேர்ந்தார்கள். அதன்பின் இஸ்ரயேல் படை முழுவதும் எத்தீங்குமில்லாமல் மக்கெதா நகரினுள் முகாமிட்டிருந்த யோசுவாவிடம் திரும்பி வந்தார்கள். இஸ்ரயேலுக்கு எதிராக ஒருவரும் ஒரு வார்த்தையும் பேசத் துணியவில்லை. அப்பொழுது யோசுவா, “அரசர் மறைந்திருக்கும் குகைவாசலைத் திறந்து, அந்த ஐந்து அரசர்களையும் என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கட்டளையிட்டான். அவ்வாறே எருசலேம், எப்ரோன், யர்மூத்துர், லாகீசு, எக்லோன் பட்டணங்களின் ஐந்து அரசர்களையும் அந்த குகையிலிருந்து வெளியே கொண்டுவந்தார்கள். அவர்களை யோசுவாவிடம் கொண்டுவந்ததும், யோசுவா இஸ்ரயேல் மனிதர்கள் அனைவரையும் அங்கு வரவழைத்து, தன்னோடு வந்திருந்த படைத்தளபதிகளிடம், “இங்கே வாருங்கள்! உங்கள் பாதங்களை இந்த அரசர்களின் கழுத்துகளில் வையுங்கள்” என்று கட்டளையிட்டான். எனவே அவர்கள் முன்னேவந்து தங்கள் பாதங்களை அரசர்களின் கழுத்தின்மேல் வைத்தார்கள். யோசுவா தன் படைத்தளபதிகளிடம், “பயப்படாதீர்கள்; மனந்தளராதீர்கள். பலங்கொண்டு தைரியமாய் இருங்கள். நீங்கள் போரிடவிருக்கும் உங்கள் எதிரிகளுக்கு யெகோவா இவ்விதமே செய்வார்” என்றான். இப்படிக் கூறி யோசுவா அந்த அரசர்களை வெட்டிக்கொன்று அவர்களுடைய உடல்களை ஐந்து மரங்களிலே தொங்கவிட்டான். அவ்வுடல்கள் மாலைவரை தொங்கிக்கொண்டிருந்தன. சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் யோசுவா உத்தரவிட்டபடி, இஸ்ரயேலர் அவ்வுடல்களை இறக்கி முன்பு அரசர்கள் ஒளித்திருந்த குகைக்குள்ளே அவற்றை வீசினார்கள். குகை வாசலை பெரிய கற்களினால் மூடினார்கள். அவை இன்றுவரை அங்கே இருக்கின்றன. அதே நாளில் யோசுவா மக்கெதா நகரைக் கைப்பற்றினான். அந்நகரில் இருந்தோரையும் அதன் அரசனையும் வாளுக்கு இரையாக்கி, அங்கிருந்த அனைவரையும் முழுவதும் அழித்தான். ஒருவரையேனும் உயிரோடு தப்பவிடவில்லை. எரிகோவின் அரசனுக்குச் செய்ததுபோலவே மக்கெதா அரசனுக்கும் செய்தான். பின் யோசுவாவும், அவனோடு இருந்த எல்லா இஸ்ரயேலர்களும் மக்கெதாவிலிருந்து லிப்னாவுக்குச் சென்று அதைத் தாக்கினார்கள். யெகோவா அப்பட்டணத்தையும், அதன் அரசனையும் இஸ்ரயேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார். அப்பட்டணத்திலுள்ள அனைவரையும் யோசுவா வாளுக்கு இரையாக்கினான். அவன் ஒருவரையும் உயிரோடு தப்பவிடவில்லை. எரிகோவின் அரசனுக்குச் செய்ததுபோலவே லிப்னா அரசனுக்கும் செய்தான். பின் யோசுவா அவனோடிருந்த இஸ்ரயேல் அனைவரோடும் லிப்னா பட்டணத்திலிருந்து லாகீசு நகருக்குச்சென்றான். யோசுவா தன் படைகளை அதற்கு எதிராக நிலைநிறுத்தி அதைத் தாக்கினான். யெகோவா லாகீசு நகரை இஸ்ரயேலரிடம் ஒப்புக்கொடுத்தார். யோசுவா இரண்டாம் நாளிலே நகரத்தைக் கைப்பற்றினான். லிப்னா நகருக்குச் செய்ததுபோலவே, அப்பட்டணத்தையும் அதிலுள்ள அனைவரையும் யோசுவா வாளுக்கு இரையாக்கினான். அதேவேளையில் கேசேர் நகரின் அரசனாகிய ஒராம், லாகீசு நகரத்தாருக்கு உதவிசெய்ய படையோடு வந்திருந்தான். ஆனாலும் யோசுவா அவனையும் அவனுடைய படையையும் ஒருவரும் தப்பிப் போகாதிருக்கும் வரைக்கும் தோற்கடித்தான். பின் யோசுவாவும் அவனோடிருந்த இஸ்ரயேலர் அனைவரும் லாகீசு நகரிலிருந்து எக்லோன் நகருக்குச் சென்றார்கள். அந்நகருக்கெதிராக நிலைகொண்டு அதைத் தாக்கினார்கள். அந்த நாளில் அவர்கள் எக்லோனைக் கைப்பற்றி, லாகீசு நகருக்குச் செய்தவாறே இந்நகரத்தை வாளுக்கு இரையாக்கி, எல்லோரையும் முழுவதும் அழித்துப்போட்டார்கள். அதன் பின்னர் இஸ்ரயேலர் அனைவரோடும் யோசுவா எக்லோன் நகரிலிருந்து எப்ரோன் நகரையடைந்து அதனைத் தாக்கினான். இஸ்ரயேலர் அந்நகரைக் கைப்பற்றி அதை வாளுக்கு இரையாக்கினார்கள். அதன் அரசனையும், அதன் கிராமங்களையும், அங்கிருந்த எல்லோரையும் அழித்தார்கள். ஒருவனையாகிலும் உயிரோடு தப்பவிடவில்லை. எக்லோன் நகரைப்போலவே இந்நகரையும் அதன் மக்களையும் முழுவதும் அழித்தார்கள். பின்னர் யோசுவாவும் அவனோடிருந்த எல்லா இஸ்ரயேலர்களும் திரும்பிச்சென்று தெபீர் நகரைத் தாக்கினார்கள். அவர்கள் அப்பட்டணத்தைக் கைப்பற்றி அதன் அரசனையும் அதன் கிராமங்களையும் வாளுக்கு இரையாக்கினார்கள். அங்கிருந்த எல்லோரையும் அழித்தார்கள், ஒருவரையும் தப்பிப்பிழைக்க விடவில்லை. லிப்னாவுக்கும் அதன் அரசனுக்கும், எப்ரோன் பட்டணத்திற்கும் செய்ததுபோலவே தெபீருக்கும் அதன் அரசனுக்கும் செய்தார்கள். இவ்விதமாய் யோசுவா மலைநாட்டையும், நெகேப் என்ற தெற்கு நாட்டையும், மலையடிவாரப் பகுதியையும் கிழக்கே மலைச்சரிவுப் பகுதிகள் அனைத்தையும் அதன் அரசர்களையும் தனது ஆட்சிக்குட்படுத்தினான். ஒருவரையும் தப்பவிடாமல் கொன்றொழித்தான். இவ்வாறு இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைப்படி சுவாசமுள்ள அனைவரையும் முழுவதும் அழித்துவிட்டான். யோசுவா காதேஸ் பர்னேயா நாடு தொடங்கி காசாவரைக்கும், கோசேனின் முழுபிரதேசம் தொடங்கி கிபியோன் வரையுமுள்ள நாடு முழுதையும் தன் ஆட்சிக்குட்படுத்தினான். இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா இஸ்ரயேலருக்காக யுத்தம் புரிந்ததினால், இந்த எல்லா அரசர்களையும் அவர்களுடைய நாடுகளையும் ஒரே படையெடுப்பில் யோசுவா வெற்றிகொண்டான். இதன்பின்னர் யோசுவா இஸ்ரயேலர் அனைவரோடும் கில்காலில் இருந்த முகாமுக்குத் திரும்பினான்.

யோசுவா 10:10-43 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கச்செய்தார்; ஆகவே அவர்களைக் கிபியோனிலே மகா பயங்கரமாகத் தாக்கி, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்கா மற்றும் மக்கெதாவரைக்கும் முறியடித்தார்கள். அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகும்போது, அசெக்காவரைக்கும் ஓடுகிற அவர்கள்மேல் யெகோவா வானத்திலிருந்து பெரிய கல்மழைகளை விழச்செய்தார், அவர்கள் இறந்தார்கள்; இஸ்ரவேல் மக்களுடைய பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களைவிட கல்மழையினால் இறந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள். யெகோவா எமோரியர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்த நாளிலே, யோசுவா யெகோவாவை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும் நில்லுங்கள் என்றான். அப்பொழுது மக்கள் தங்களுடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டும்வரைக்கும் சூரியன் நின்றது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புத்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் மறைவதற்குத் துரிதப்படாமல், ஏறக்குறைய ஒருபகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது. இப்படிக் யெகோவா ஒரு மனிதனுடைய சொல்லைக் கேட்ட அந்த நாளைப்போன்ற ஒருநாள் அதற்கு முன்னும் இல்லை, அதற்குப் பின்னும் இல்லை; யெகோவா இஸ்ரவேலுக்காக யுத்தம்செய்தார். பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் கில்காலில் இருக்கிற முகாமிற்குத் திரும்பினான். அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு குகையில் ஒளிந்துகொண்டார்கள். ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற ஒரு குகையில் ஒளிந்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவிற்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யோசுவா: பெரிய கற்களைக் குகையின் வாயிலே புரட்டிவைத்து, அந்த இடத்தில் அவர்களைக் காவல்காக்க மனிதர்களை நிறுத்துங்கள். நீங்களோ நிற்காமல், உங்களுடைய எதிரிகளைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே நுழையவிடாதிருங்கள்; உங்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான். யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் அவர்களை மகா பயங்கரமாக அவர்கள் முழுவதும் அழியும்வரைக்கும் தாக்கினார்கள்; அவர்களில் மீதியானவர்கள் பாதுகாப்பான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள். மக்களெல்லோரும் சுகமாக மக்கெதாவிலிருக்கிற முகாமிலே, யோசுவாவிடம் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் மக்களுக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை. அப்பொழுது யோசுவா: குகையின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் குகையிலிருந்து என்னிடம் வெளியே கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் குகையிலிருந்து வெளியே அவனிடத்திற்குக் கொண்டுவந்தார்கள். அவர்களை யோசுவாவிடம் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரையும் அழைத்து, தன்னோடு வந்த யுத்தமனிதர்களின் அதிகாரிகளை நோக்கி: நீங்கள் அருகில் வந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் அருகில் வந்து, தங்களுடைய கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள். அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலமாகவும் திடமனதாகவும் இருங்கள்; நீங்கள் யுத்தம்செய்யும் உங்களுடைய எதிரிகளுக்கெல்லாம் யெகோவா இப்படியே செய்வார் என்றான். அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; மாலைநேரம்வரைக்கும் மரங்களில் தொங்கினார்கள். சூரியன் மறைகிற நேரத்திலே, யோசுவா அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளிந்துகொண்டிருந்த குகையிலே அவர்களைப் போட்டு; இந்தநாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்களைக் குகையின் வாயிலே அடைத்தார்கள். அந்த நாளிலே யோசுவா மக்கெதாவைப் பிடித்து, அதைப் பட்டயத்தினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனிதர்களையும் எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான். மக்கெதாவிலிருந்து யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்செய்தான். யெகோவா அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயத்தினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான். லிப்னாவிலிருந்து யோசுவா இஸ்ரவேல் அனைவரோடும் லாகீசுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்தான். யெகோவா லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் பட்டயத்தினால் அழித்தான். அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்கு உதவிசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவனுடைய மக்களையும், ஒருவனும் மீதியாக இல்லாதபடி, வெட்டிப்போட்டான். லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர்கள் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்து, அதை அந்த நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் அந்த நாளிலே அழித்துப்போட்டான். பின்பு எக்லோனிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர்கள் அனைவருமாக எபிரோனுக்குப் புறப்பட்டு, அதின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப் பட்டணங்களையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், பட்டயத்தினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் அழித்துப்போட்டான். பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்செய்து, அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயத்தினால் அழித்து, அதிலுள்ள உயிரினங்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், அழித்தார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோல தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான். இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் அழித்து, காதேஸ்பர்னேயா துவங்கிக் காசாவரை இருக்கிறதையும் கிபியோன்வரை இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான். அந்த ராஜாக்கள் எல்லோரையும் அவர்களுடைய தேசத்தையும் யோசுவா ஒரே சமயத்தில் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா இஸ்ரவேலுக்காக யுத்தம்செய்தார். பின்பு யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் கில்காலில் இருக்கிற முகாமிற்குத் திரும்பினான்.

யோசுவா 10:10-43 பரிசுத்த பைபிள் (TAERV)

இஸ்ரவேலர் தாக்கியபோது அவர்கள் மிகுந்த குழப்பமடையும்படியாக கர்த்தர் செய்தார். எனவே இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி பெற்றனர். பெத்தொரோனுக்கு போகிற வழிவரைக்கும் இஸ்ரவேலர் பகைவர்களைக் கிபியோனிலிருந்து துரத்தினர். அசெக்கா, மக்கெதா வரைக்கும் இஸ்ரவேலர் அவர்களைக் கொன்றனர். அப்போது இஸ்ரவேல் படையினர் பகைவர்களை பெத்தொரோனிலிருந்து அசெக்கா வரைக்குமுள்ள வழியில் துரத்தினார்கள். அப்போது, கர்த்தர் வானத்திலிருந்து பெருங்கற்கள் விழும்படியாகச் செய்தார். அப்பெருங்கற்களால் பகைவர்கள் பலர் மரித்தனர். இஸ்ரவேல் வீரர்களின் வாளால் அழிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் கற்களால் கொல்லப்பட்டோரே அதிகம். கர்த்தர் அன்று இஸ்ரவேலர் எமோரியரை வெற்றிக்கொள்ளச் செய்தார். அந்த நாளில் யோசுவா இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக நின்று, கர்த்தரை நோக்கி: “சூரியன், கிபியோனின் மேல் நிற்கட்டும். ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல், சந்திரன் அசையாது நிற்கட்டும்” என்றான். எனவே சூரியனும், சந்திரனும் இஸ்ரவேலர் தங்கள் பகைவர்களை முறியடிக்கும் வரைக்கும் அசையாமல் நின்றன. இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. வானத்தின் நடுவில் சூரியன் அசையாமல் நின்றது. ஒரு நாள் முழுவதும் அது அசையவேயில்லை. அவ்வாறு முன்னர் நிகழ்ந்ததேயில்லை! அதன் பின் நிகழவுமில்லை. அந்நாளில் கர்த்தர் ஒரு மனிதனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார். உண்மையில் கர்த்தரே இஸ்ரவேலருக்காகப் போர் செய்தார்! அதன்பிறகு, யோசுவாவும் அவனது படையினரும் கில்காலில் முகாமிட்டிருந்த இடத்துக்கு திரும்பிப் போனார்கள். ஆனால் போரின்போது, ஐந்து ராஜாக்களும் ஓடிப் போய் மக்கெதாவிற்கு அருகிலுள்ள ஒரு குகையில் ஒளித்திருந்தனர். அவர்கள் குகைகளில் ஒளிந்திருந்ததைச் சிலர் பார்த்து யோசுவாவிற்கு தெரிவித்தார்கள். யோசுவா, “குகையின் நுழை வாசலைப் பெரிய கற்களைப் புரட்டி மூடிவிடுங்கள். அக்குகையைக் காவல் செய்வதற்குச் சிலரை நியமியுங்கள். ஆனால் நீங்கள் அங்கு நின்றுகொண்டிருக்க வேண்டாம். பின் தொடர்ந்து உங்கள் பகைவர்களைத் தாக்குங்கள். அவர்கள் தங்கள் நகரத்திற்குச் செல்லவிடாதீர்கள். அவர்கள் மீது வெற்றியை உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தந்துள்ளார்” என்றான். யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் பகைவர்களை வென்றனர். ஆனால் சில பகைவர்கள் அவர்கள் நகரங்களுக்குப் போய் ஒளிந்துகொண்டனர். அவர்கள் கொல்லப்படவில்லை. போர் முடிந்தபின், மக்கெதாவிற்கு யோசுவாவின் ஆட்கள் திரும்பி வந்தனர். இஸ்ரவேல் ஜனங்களுக்கெதிராக எதையும் கூறும் துணிவு அந்நாட்டு ஜனங்களுக்கு இருக்கவில்லை. யோசுவா, “குகையின் வாசலை மூடியுள்ள கற்களை அகற்றி, ஐந்து ராஜாக்களையும் என்முன் கொண்டு வாருங்கள்” என்றான். யோசுவாவின் ஆட்கள் அப்படியே செய்தனர். அவர்கள் எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகியவற்றின் ராஜாக்களாவார்கள். அவர்கள் அந்த ஐந்து ராஜாக்களையும் யோசுவாவிடம் அழைத்து வந்தனர். அவ்விடத்திற்கு வருமாறு யோசுவா தன் எல்லா ஆட்களையும் அழைத்தான். யோசுவா படையதிகாரிகளை நோக்கி, “இங்கே வாருங்கள்! உங்கள் பாதங்களை இந்த ராஜாக்களின் கழுத்தின் மீது வையுங்கள்” என்றான். அவ்வாறே யோசுவாவின் படை அதிகாரிகள் நெருங்கி வந்து அந்த ராஜாக்களின் கழுத்துக்களின் மீது தங்கள் பாதங்களை வைத்தனர். அப்போது யோசுவா தன் ஆட்களை நோக்கி, “வலிமையும் துணிவும் உடையவர்களாயிருங்கள், அஞ்சாதீர்கள். நீங்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளப் போகிற பகைவர்கள் எல்லோருக்கும் கர்த்தர் செய்யவிருப்பதை உங்களுக்குக் காட்டுவேன்” என்றான். யோசுவா அந்த ஐந்து ராஜாக்களையும் கொன்று, அவர்களின் உடல்களை ஐந்து மரங்களில் தொங்கவிட்டான். மாலைவரை யோசுவா அவர்களை மரத்திலேயே தொங்கவிட்டான். சூரியன் மறையும் வேளையில் யோசுவா அவனது ஆட்களிடம் அந்த உடல்களை மரங்களிலிருந்து கீழே இறக்குமாறு கூறினான். அவர்கள் அந்த உடல்களை இறக்கி முன்பு அந்த ராஜாக்கள் ஒளித்திருந்த குகைளில் போட்டு மூடி, அவற்றின் வாசல்களைப் பெரிய பாறைகளால் மூடினார்கள். அந்தப் பாறைகள் இன்றைக்கும் உள்ளன. அன்று யோசுவா மக்கெதா என்னும் நகரத்தை வென்றான். அந்நகரின் ராஜாவையும் ஜனங்களையும் கொன்றான். யாரும் உயிரோடு விடப்படவில்லை. எரிகோவின் ராஜாவுக்குச் செய்தபடியே மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான். பின் யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் மக்கெதாவிலிருந்து பயணம் செய்தனர். அவர்கள் லிப்னா என்னும் நகருக்குச் சென்று, அந்நகரத்தைத் தாக்கினார்கள். அந்நகரத்தையும் அதன் ராஜாவையும் தோற்கடிப்பதற்கு கர்த்தர் இஸ்ரவேலரை அனுமதித்தார். அந்நகரில் இருந்த ஒவ்வொருவரையும் இஸ்ரவேல் ஜனங்கள் கொன்றனர். யாரும் உயிரோடு விடப்படவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவின் ராஜாவுக்குச் செய்தபடியே லிப்னாவின் ராஜாவுக்கும் செய்தனர். பிறகு யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் லிப்னா நகரிலிருந்து லாகீசை நோக்கிச் சென்றனர். யோசுவாவும் அவனது படையும் லாகீசைச் சுற்றிலும் முகாமிட்டு அந்நகரத்தைத் தாக்கினார்கள். லாகீசு நகரத்தைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அவர்களை அனுமதித்தார். இரண்டாம் நாளில் அந்நகரைத் தோற்கடித்தார்கள். லிப்னாவில் செய்தபடியே, இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரிலிருந்த அனைவரையும் கொன்றார்கள். அப்போது கேசேரின் ராஜாவாகிய ஓராம், லாகீசுக்கு உதவியாக வந்தான். யோசுவா அவனையும் அவனது படையையும் கூட வென்றான். யாரும் உயிரோடு விடப்படவில்லை. பிறகு, யோசுவாவும் எல்லா இஸ்ரவேல் ஜனங்களும் லாகீஸ் நகரிலிருந்து எக்லோன் நகரை நோக்கிப் பயணம் செய்தார்கள். அவர்கள் எக்லோன் நகரைச் சூழ்ந்து அதைத் தாக்கினார்கள். அவர்கள் அன்றைக்கு அந்நகரைக் கைப்பற்றியதோடு அங்கு வசித்து வந்த ஜனங்களையும் கொன்றனர். லாகீஸ் நகரில் செய்தபடியே இந்த நகரிலும் செய்தனர். பின்பு யோசுவாவும் இஸ்ரவேலரும் எக்லோன் நகரத்திலிருந்து எபிரோன் என்னும் நகருக்குச் சென்று அதைத் தாக்கினார்கள். அவர்கள் அந்த நகரத்தையும் அதைச் சுற்றியிருந்த ஊர்களையும் கைப்பற்றினர். நகரத்தில் வாழ்ந்தவர்களை எல்லாம் இஸ்ரவேலர் கொன்றனர். யாரும் உயிரோடு விடப்படவில்லை. அவர்கள் எக்லோனிலும் அவ்வாறே செய்திருந்தனர். அவர்கள் நகரத்தை அழித்து, எல்லா ஜனங்களையும் கொன்றனர். பின்பு யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லோரும் தெபீருக்குத் திரும்பிச்சென்று, அந்நகரைத் தாக்கினார்கள். அவர்கள் நகரத்தையும், அதன் ராஜாவையும், நகரைச் சுற்றிலுமிருந்த சிறிய ஊர்களையும், கைப்பற்றினார்கள். அந்நகரில் வாழ்ந்த அனைவரையும் கொன்றனர். யாரும் உயிரோடுவிடப்படவில்லை. எபிரோனுக்கும் அதன் ராஜாவுக்கும் செய்ததையே இஸ்ரவேலர் தெபீருக்கும் அதன் ராஜாவுக்கும் செய்தனர். அவ்வாறே லிப்னாவிற்கும் அதன் ராஜாவுக்கும் செய்திருந்தனர். மலை நாடுகளிலும், பாலைவனங்களிலும், மேற்கு மற்றும் கிழக்கு மலையடிவாரங்களிலும், இருக்கிற நகரங்களையெல்லாம் ஆட்சி செய்த எல்லா ராஜாக்களையும் யோசுவா தோற்கடித்தான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எல்லா ஜனங்களையும் கொல்லும்படியாக யோசுவாவிற்குக் கூறினார். எனவே யோசுவா அந்த இடங்களில் யாரையும் உயிரோடு விட்டுவைக்கவில்லை. காதேஸ் பர்னேயாவிலிருந்து காத்சா வரைக்கும் இருந்த எல்லா நகரங்களையும் யோசுவா கைப்பற்றினான். எகிப்திலிருந்த கோசேன் நிலப் பகுதியிலிருந்து கிபியோன் வரையிலிருந்த எல்லா நகரங்களையும் கைப்பற்றினான். யோசுவா அந்த நகரங்கள் அனைத்தையும் அவற்றின் ராஜாக்களையும் ஒரே ராணுவ நடவடிக்கையில் கைப்பற்றினான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காகப் போராடியதால் யோசுவா இதை சாதித்தான். பின்பு யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் கில்கால் என்னும் நகரிலிருந்த தங்கள் முகாமிற்குத் திரும்பினார்கள்.

யோசுவா 10:10-43 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள். அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்கா மட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப்பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள். கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்து நில்லுங்கள் என்றான். அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும்மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது. இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார். பின்பு யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான். அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்துக்கொண்டார்கள். ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யோசுவா: பெரிய கற்களைக் கெபியின் வாயிலே புரட்டி, அவ்விடத்தில் அவர்களைக் காவல்காக்க மனுஷரை வையுங்கள். நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான். யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்கரித்தார்கள்; அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள். ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை. அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்திற்கு வெளியே கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள். அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்ட வந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள். அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலத்துத் திடமனதாயிருங்கள்; நீங்கள் யுத்தம்பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான். அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; சாயங்காலமட்டும் மரங்களில் தொங்கினார்கள். சூரியன் அஸ்தமிக்கிற வேளையிலே, யோசுவா அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளித்துக்கொண்டிருந்த கெபியிலே அவர்களைப் போட்டு; இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்களை கெபியின் வாயிலே அடைத்தார்கள். அந்நாளிலே யோசுவா மக்கெதாவைப் பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனுஷராகிய சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணி, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான். மக்கெதாவிலிருந்து யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூட லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணினான். கர்த்தர் அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான். லிப்னாவிலிருந்து யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடுங்கூட லாகீசுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினான். கர்த்தர் லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா நரஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்தான். அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்குத் துணைசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவன் ஜனத்தையும், ஒருவனும் மீதியாயிராதபடி, வெட்டிப்போட்டான். லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணி, அதை அந்நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான். பின்பு எக்லோனிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவருமாய் எபிரோனுக்குப் புறப்பட்டு, அதின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப் பட்டணங்களையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும் சங்காரம்பண்ணினான். பின்பு யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூடத் தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்பண்ணி, அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணினார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோல தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான். இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி, காதேஸ்பர்னேயா துவக்கிக் காத்சா மட்டும் இருக்கிறதையும் கிபியோன் மட்டும் இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான். அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார். பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.