யோசுவா 8:1-7
யோசுவா 8:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதன்பின் யெகோவா யோசுவாவிடம், “நீ பயப்படாதே; மனந்தளர்ந்து விடாதே. முழு இராணுவத்துடனும் சென்று ஆயிபட்டணத்தைத் தாக்கு. ஆயி அரசனையும், அவன் மக்களையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் நான் உன் கைகளில் கொடுத்துவிட்டேன். எரிகோ பட்டணத்திற்கும் அதன் அரசனுக்கும் செய்ததுபோலவே ஆயிபட்டணத்திற்கும் அதன் அரசனுக்கும் செய்யுங்கள். ஆனால் சூறையாடி கைப்பற்றும் பொருட்களையும், ஆடுமாடுகளையும் நீங்கள் உங்களுக்காக எடுத்துக்கொள்ளலாம். பட்டணத்தின் பின்புறத்தில் பதுங்கியிருந்து தாக்குவதற்கென எல்லா ஆயத்தமும் செய்” என்றார். அவ்வாறே யோசுவா முழு இராணுவத்துடனும் ஆயிபட்டணத்தைத் தாக்குவதற்குப் புறப்பட்டான். யோசுவா தங்களுடைய வீரருள் மிகச்சிறந்த முப்பதாயிரம்பேரைத் தெரிந்தெடுத்து அன்று இரவில் அனுப்பினான். அவன் அவர்களிடம், “நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள். நீங்கள் நகருக்குப் பின்னே பதுங்கியிருந்து பட்டணத்தைத் தாக்குவதற்கு ஆயத்தமாய் இருங்கள். அங்கிருந்து அதிக தூரம் போகவேண்டாம். நீங்கள் எல்லோரும் விழிப்புடன் இருங்கள். நானும் என்னுடன் இருக்கும் அனைவரும் பட்டணத்தை நோக்கி முன்னேறுவோம். எம்மை எதிர்த்து ஆயி மனிதர் முன்போலவே வெளியே வருகிறபோது, நாம் அவர்களிடமிருந்து தப்பி ஓடுவோம். இஸ்ரயேலர் முன்போலவே நமக்குப் பயந்து ஓடுகிறார்களென நினைத்து நம்மைப் பின்தொடருவார்கள். நாங்களோ அவர்களை இவ்விதமாய் ஏமாற்றி பட்டணத்திற்கு வெளியே கொண்டுவருவோம். எனவே நாம் அவர்களிடமிருந்து தப்பி ஓடுகிறபோது, நீங்கள் உங்கள் மறைவிடத்திலிருந்து எழுந்து, பட்டணத்தை தாக்கிக் கைப்பற்றுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா அதை உங்கள் கைகளில் கொடுப்பார்.
யோசுவா 8:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது யெகோவா யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த மக்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயீ பட்டணம்வரைக்கும் போ, இதோ, ஆயீயின் ராஜாவையும். அவனுடைய மக்களையும் அவனுடைய பட்டணத்தையும் அவனுடைய நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். நீ எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததுபோல, ஆயீக்கும் அதின் ராஜாவுக்கும் செய்யக்கடவாய்; அதில் கொள்ளையிட்டப் பொருட்களையும் மிருகஜீவன்களையும் உங்களுக்குக் கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம், பட்டணத்திற்குப் பின்புறத்திலே இரகசியப்படையை வை என்றார். அப்பொழுது ஆயீயின் மீது படையெடுத்துப் போக, யோசுவாவும் எல்லா யுத்தமனிதர்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரர்களான முப்பதாயிரம்பேரைத் தேர்ந்தெடுத்து, இரவிலே அவர்களை அனுப்பி, அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: நீங்கள் பட்டணத்தின் பின்புறத்திலே ஒளிந்திருக்கவேண்டும்; பட்டணத்தைவிட்டு வெகுதூரம் போகாமல், எல்லோரும் ஆயத்தமாக இருங்கள். நானும் என்னோடு இருக்கிற எல்லா மக்களும் பட்டணத்திற்கு அருகில் நெருங்கி வருவோம்; அவர்கள் முன்புபோல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம். அப்பொழுது அவர்கள்; முன்பு போலவே நமக்கு முன்பாக தோற்று ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி, எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு வெளியே வரப்பண்ணும்வரைக்கும், அவர்களுக்கு முன்பாக ஓடுவோம். அப்பொழுது நீங்கள் மறைவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்களுடைய தேவனாகிய யெகோவா அதை உங்களுடைய கைகளில் ஒப்புக்கொடுப்பார்.
யோசுவா 8:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் யோசுவாவை நோக்கி, “அஞ்சாதே, முயற்சியைக் கைவிடாதே. போர் செய்யும் ஆண்களை ஆயீக்கு வழிநடத்து. ஆயீயின் ராஜாவை அழிக்க நான் உதவுவேன். அவன் ஜனங்கள், நகரம், தேசம் ஆகியவற்றை உனக்குத் தருகிறேன். எரிகோவுக்கும் அதன் ராஜாவுக்கும் செய்தவற்றை நீ ஆயீக்கும், அதன் ராஜாவுக்கும் செய்வாய். இம்முறை எல்லா செல்வத்தையும், கால் நடைகளையும் உங்களுக்காக வைத்துக் கொண்டு உனது ஜனங்களோடு செல்வத்தைப் பங்கிட்டுக்கொள்வாய். இப்போது, நகரத்தின் பின்னே உன் வீரர்களில் சிலரை மறைந்துகொள்ளச் சொல்” என்றார். யோசுவா தனது சேனையை ஆயீக்கு நேராக வழி நடத்தினான். பின் 30,000 சிறந்த போர்வீரரைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரவில் அனுப்பினான். யோசுவா அவர்களுக்குப் பின் வருமாறு கட்டளையிட்டு: “நான் உங்களுக்கு சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நகரத்திற்குப் பின்னாலுள்ள பகுதியில் நீங்கள் ஒளிந்திருக்க வேண்டும். தாக்குவதற்கேற்ற நேரத்துக்காக காத்திருங்கள். நகரத்திலிருந்து வெகு தூரம் செல்லாதீர்கள். தொடர்ந்து கவனித்தபடி தயாராக இருங்கள். நகரத்திற்கு நேராக அணிவகுத்துச் செல்வதற்கு நான் என்னுடன் உள்ளவர்களை வழி நடத்துவேன். நகரத்தின் ஜனங்கள் எங்களை எதிர்த்து சண்டையிட வெளியில் வருவார்கள். நாம் முன்னர் செய்தபடியே, திரும்பி ஓடுவோம். அம்மனிதர்கள் எங்களை நகரத்திற்கு வெளியே துரத்துவார்கள். முன்பைப் போல் நாம் நகரத்திற்கு வெளியே ஓடுகிறோம் என்று அவர்கள் நினைப்பார்கள். இவ்வாறு நாங்கள் ஓடிவிடுவோர்களைப் போலக் காண்பிப்போம். அப்போது நீங்கள் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்து நகரத்தைக் கைப்பற்ற வேண்டும். வெற்றி பெறும் வல்லமையைத் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருவார்.
யோசுவா 8:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும். அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். நீ எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததுபோல, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்யக்கடவாய்; அதில் கொள்ளையிட்ட பொருள்களையும் மிருகஜீவன்களையும் உங்களுக்குக் கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம், பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வை என்றார். அப்பொழுது ஆயியின்மேல் போக, யோசுவாவும் சகல யுத்தஜனங்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரரான முப்பதினாயிரம்பேரைத் தெரிந்தெடுத்து, இராத்திரியிலே அவர்களை அனுப்பி, அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் பட்டணத்தின் பின்னாலே பதிவிருக்கவேண்டும்; பட்டணத்துக்கு வெகுதூரமாய்ப் போகாமல், எல்லாரும் ஆயத்தமாயிருங்கள். நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டிச் சேருவோம்; அவர்கள் முன்போல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம். அப்பொழுது அவர்கள்; முன்போல நமக்கு முன்னாக முறிந்து ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி, எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு இப்பாலே வரப்பண்ணுமட்டும், அவர்களுக்கு முன்னாக ஓடுவோம். அப்பொழுது நீங்கள் பதிவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அதை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுப்பார்.