லூக்கா 1:11-20
லூக்கா 1:11-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான். சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டுப் பயந்தான். அந்தத் தூதனோ அவனைப் பார்த்து: “சகரியாவே, பயப்படாதே; உனது மன்றாட்டு கேட்கப்பட்டது. உனது மனைவி எலிசபெத் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், நீ அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும். அவன் உனக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்புமாய் இருப்பான். அவனுடைய பிறப்பின் நிமித்தம், அநேகர் பெருமகிழ்ச்சியடைவார்கள்; அவன் கர்த்தருடைய பார்வையில் பெரியவனாயிருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை இரசத்தையோ, மதுபானத்தையோ அருந்த மாட்டான், அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவான். அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பவும் கொண்டுவருவான். அவன் எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் கர்த்தருக்கு முன்பாகப் போவான்; தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகள் பக்கமாகத் திருப்புவான், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக முன்னேற்பாடு செய்திருக்கிற மக்களை அவன் ஆயத்தம் செய்வான்” என்றான். அப்பொழுது சகரியா அந்தத் தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எப்படி நம்பலாம்? நான் கிழவனாய் இருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாய் இருக்கிறாளே” என்றான். அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் சமுகத்தில் நிற்கின்ற காபிரியேல்; உன்னுடன் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உனக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். நீயோ எனது வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இவை நிகழும் நாள்வரைக்கும் நீ பேச முடியாமல் ஊமையாயிருப்பாய்; நான் சொன்னவையோ நியமித்த காலத்தில் நிறைவேறும்” என்றான்.
லூக்கா 1:11-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான். சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான். கர்த்தருடைய தூதன் அவனைப் பார்த்து: சகரியாவே, பயப்படாதே, உன் விண்ணப்பம் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவனுக்கு யோவான் என்று பெயர் இடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான மக்களை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்த, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உள்ளவனாக கர்த்தருக்கு முன்னே நடப்பான் என்றான். அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எப்படி அறிவேன்; நான் முதிர்வயதானவனாக இருக்கிறேன், என் மனைவியும் வயதானவளாக இருக்கிறாளே என்றான். தேவதூதன் அவனுக்கு மறுமொழியாக: நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்; இதோ, குறித்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசிக்காதபடியால் இவைகள் நிறைவேறும் நாள்வரை நீ பேசமுடியாமல் ஊமையாக இருப்பாய் என்றான்.
லூக்கா 1:11-20 பரிசுத்த பைபிள் (TAERV)
அப்போது புகை காட்டும் மேசையின் வலது புறத்தில் தேவதூதன் சகரியாவுக்கு முன்பாக வந்து நின்றான். தூதனைப் பார்த்தபோது சகரியா குழப்பமும் பயமும் அடைந்தான். ஆனால் தூதன் அவனைப் பார்த்து, “சகரியாவே, பயப்படாதே. உனது பிரார்த்தனையை தேவன் கேட்டார். உனது மனைவியாகிய எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக. நீ மிகவும் சந்தோஷமாக இருப்பாய். அவனது பிறப்பால் பல மக்கள் மகிழ்ச்சி அடைவர். கர்த்தருக்காகப் பெரிய மனிதனாக யோவான் விளங்குவான். அவன் திராட்சை இரசமோ, மதுபானமோ பருகுவதில்லை. பிறக்கிறபோதே பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக யோவான் காணப்படுவான். “நம் தேவனாகிய கர்த்தரிடம் பல யூதர்கள் திரும்புவதற்கு யோவான் உதவுபவன். கர்த்தருக்கு முன்பாக யோவான் முன்னோடியாகச் செல்வான். எலியாவைப் போல் யோவானும் வல்லமை வாய்ந்தவனாக இருப்பான். எலியாவின் ஆவியை உடையவனாக அவன் இருப்பான். தந்தையருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இடையே அமைதி நிலவும்படியாகச் செய்வான். பல மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்களை எல்லாம் மீண்டும் சரியானதென்று மக்கள் எண்ணவேண்டிய பாதைக்கு யோவான் அழைத்து வருவான். கர்த்தரின் வருகைக்கு மக்களை யோவான் தயார் செய்வான்” என்றான். சகரியா தூதனை நோக்கி, “நீங்கள் சொல்வது உண்மையென்று நான் எவ்வாறு அறிய முடியும்? நான் வயது முதிர்ந்தவன். என் மனைவியும் வயதானவள்” என்றான். தூதன் அவனுக்குப் பதிலாக, “நான் காபிரியேல். தேவனுக்கு முன்பாக நிற்பவன். உன்னிடம் பேசவும், இந்த நல்ல செய்தியை உன்னிடம் எடுத்துரைக்கவும் தேவன் என்னை அனுப்பினார். இப்போது கேட்பாயாக! இந்தக் காரியங்கள் நடக்கும் நாள்வரைக்கும் நீ பேச முடியாதிருப்பாய். உனது பேசும் சக்தியை நீ இழப்பாய், ஏன்? நான் கூறியதை நீ நம்பாததாலேயே இப்படி ஆகும். ஆனால் இவை அனைத்தும் அதனதன் சரியான சமயத்தில் உண்மையாகவே நடக்கும்” என்றான்.
லூக்கா 1:11-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான். சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான். தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத் திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான். அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்; தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன். இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.