லூக்கா 1:68-79
லூக்கா 1:68-79 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக, அவர் வந்து தம்முடைய மக்களை மீட்டுக்கொண்டார். அவர் தமது தாசனாகிய தாவீதின் வம்சத்திலிருந்து, நாம் இரட்சிப்பு அடைவதற்கான இரட்சணியக்கொம்பை எழுப்பியிருக்கிறார். அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். நம்முடைய பகைவரிடமிருந்தும், நம்மை வெறுக்கும் எல்லோருடைய கைகளிலிருந்தும் நமக்கு விடுதலையை ஏற்படுத்துவேன் என்றும், அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, நம்முடைய தந்தையருக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருந்தார். அவர் நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டு: நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து, நமது நாட்களெல்லாம் பயமின்றிப் பணிசெய்யும்படி, பரிசுத்தத்திலும் நீதியிலும் அவருக்கு முன்பாக என்றும் வாக்குக் கொடுத்திருந்தார். “என் பிள்ளையே, நீயோ, உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி, அவருக்கு முன்பாகப் போவாய். நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தின் நிமித்தம் அவருடைய மக்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படுவதன் மூலமாய், இரட்சிப்பின் அறிவைக் கொடுப்பாய். இருளில் வாழ்கிறவர்களுக்கும் மரண இருளில் இருக்கிறவர்களுக்கும் ஒளியைத் தருவதற்கும், நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்துவதற்கும், பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.”
லூக்கா 1:68-79 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்; தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: உங்களுடைய சத்துருக்களின் கைகளில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியம் செய்யவும் கட்டளையிடுவேன் என்று, அவர் நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்றுவதற்கும்; ஆதிமுதல் கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தேவன் சொன்னபடியே, தமது மக்களைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களிடம் இருந்தும், நம்மைப் பகைக்கிற எல்லோருடைய கைகளில் இருந்தும், நம்மை இரட்சிப்பதற்காக, தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பினார். என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய மக்களுக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னே நடந்துபோவாய். இருளிலும், மரண பயத்திலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அந்த இரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய சூரியன் நம்மிடம் வந்திருக்கிறது” என்றான்.
லூக்கா 1:68-79 பரிசுத்த பைபிள் (TAERV)
“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் போற்றுவோம். தேவன் அவரது மக்களுக்கு உதவ வந்தார். அவர்களுக்கு விடுதலை தந்தார். தேவன் நமக்கு வல்லமை பொருந்திய இரட்சகரைத் தந்தார். அவர் தாவீது என்னும் தேவனுடைய பணிவிடைக்காரனின் குடும்பத்தைச் சார்ந்தவர். தேவன் இதைச் செய்வதாகக் கூறினார். பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவரது பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாக இதை அவர் கூறினார். நம் எதிரிகளிடம் இருந்து தேவன் நம்மைக் காப்பாற்றுவார். நம்மை வெறுக்கும் அனைவரின் கைகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுவார். நமது தந்தையருக்கு அருள்புரிவதாக தேவன் சொன்னார். தனது பரிசுத்த வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார். நமது தந்தையாகிய ஆபிரகாமுக்கு எதிரிகளின் சக்தியிலிருந்து. நம்மை விடுவிப்பதாக தேவன் வாக்குறுதி தந்தார். அதனால் பயமின்றி நாம் அவருக்குச் சேவை செய்வோம். நாம் நம் வாழ்நாள் முழுவதும் அவருடைய முன்னிலையில் நீதியும் பரிசுத்தமும் வாய்ந்தோராக வாழ்வோம். இப்போதும் சிறுவனே, நீ உன்னதமான தேவனின் ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய். கர்த்தருக்கு முன்பாக முன்னோடியாக நீ நடப்பாய். கர்த்தரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வாய். அவரது மக்கள் இரட்சிக்கப்படுவர் என்பதை அவர்களுக்கு உணர்த்துவாய். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் இரட்சிக்கப்படுவர். நம் தேவனின் அன்பான இரக்கத்தால் பரலோகத்திலிருந்து புதுநாள் ஒன்று நம்மீது பிரகாசிக்கும். இருளில் மரணப் பயத்திடையே வாழும் மக்களுக்கு தேவன் உதவி செய்வார். சமாதானத்தை நோக்கி அவர் நம்மை வழிநடத்துவார்.”
லூக்கா 1:68-79 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்; தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று, அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே, தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு, தம்முடைய தாசனாகிய தாவீதின்வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார். நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய். அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.