லூக்கா 11:14-54
லூக்கா 11:14-54 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு அவர் ஊமையாயிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள். அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போகும்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோகும். சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே. நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள். நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக்காக்கிறபோது, அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும். அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான். என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிகக் கேடுள்ளதாயிருக்கும் என்றார். அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார். ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல, மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாளமாயிருப்பார். தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது, மரக்காலின் கீழேயாவது வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம்காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான். கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார். அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் தன்னுடனேகூட அவர் பகற்போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய்ப் பந்தியிருந்தார். அவர் போஜனம்பண்ணுகிறதற்கு முன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப்பட்டான். கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது. மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ? உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும். பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது என்றார். அப்பொழுது நியாயசாஸ்திரிகளில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் நிந்திக்கிறீரே என்றான். அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள். உங்களுக்கு ஐயோ, உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். ஆகையால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள். ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. நிச்சயமாகவே இந்தச் சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார். இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும், அநேகக் காரியங்களைக் குறித்துப் பேசும்படி அவரை ஏவவும் தொடங்கினார்கள்.
லூக்கா 11:14-54 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஒரு நாள், ஊமையாய் இருந்த ஒருவனிடமிருந்து இயேசு பிசாசை துரத்தினார். பிசாசு பிடித்தவனிலிருந்து பிசாசு வெளியேறியபோது, ஊமையாயிருந்தவன் பேசத் தொடங்கினான். கூடியிருந்த மக்கள் அதைக்கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் அவர்களில் சிலர், “பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலேயே இவன் பிசாசுகளைத் துரத்துகிறான்” என்றார்கள். வேறுசிலர் வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று கேட்டு, அவரைச் சோதித்தார்கள். இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களுக்குச் சொன்னதாவது: “தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கிற எந்த அரசும் பாழாய்ப்போகும். தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கிற எந்தக் குடும்பமும் விழுந்துபோகும். சாத்தான் தனக்குத்தானே விரோதமாய்ப் பிளவுபட்டால், எப்படி அவனுடைய அரசு நிலைநிற்கும்? நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறேன் என்று நீங்கள் சொல்வதனாலேயே நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன். நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தினால், உங்களைப் பின்பற்றுகிறவர்கள் யாரைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறார்கள்? அப்படியானால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாய் இருப்பார்கள். ஆனால், நான் பிசாசுகளை இறைவனுடைய விரலினால் துரத்துகிறேன் என்றால், இறைவனுடைய அரசு உங்களிடம் வந்துள்ளது. “ஒரு பலமுள்ளவன் ஆயுதம் தாங்கியவனாய் தன் வீட்டைக் காவல் காக்கும்போது, அவனுடைய உடைமைகள் பாதுகாப்பாய் இருக்கும். இவனைப் பார்க்கிலும் பலமுள்ள வேறொருவன் வந்து இவனைத் தாக்கி மேற்கொள்ளும்போது, அவன் சார்ந்திருந்த எல்லா ஆயுதங்களையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருட்களையும் பங்கிட்டுக் கொள்வான். “என்னோடே இராதவன் எனக்கு எதிராக இருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். “தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அது வறண்ட இடங்களில் ஓய்வைத் தேடிப்போகிறது, ஆனாலும் அது அந்த ஓய்வைக் கண்டடையாததால், ‘நான் முன்பு விட்டுவந்த வீட்டிற்கே திரும்பவும் போவேன்’ என்று சொல்லும். அது அந்த வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது, அந்த வீடு கூட்டிச் சுத்தப்படுத்தப்பட்டு, ஒழுங்காக இருப்பதைக் காணும். அப்பொழுது அந்தத் தீய ஆவி போய், தன்னைப் பார்க்கிலும் பொல்லாத ஏழு தீய ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து அவை அங்கேபோய் வசிக்கின்றன. அதனால் அந்த மனிதனின் இறுதி நிலைமை ஆரம்ப நிலைமையைவிட மோசமானதாகும்.” இயேசு இந்தக் காரியங்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து ஒரு பெண் குரலெழுப்பி, “உம்மைப் பெற்றெடுத்துப் பாலூட்டிய தாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றாள். அவர் அதற்குப் பதிலாக, “ஆம்; ஆனால், இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படிகிறவர்களே, அதிலும் மேலாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார். மக்கள் இன்னும் அதிகமாய்க் கூடிவந்தபோது, இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “இவர்கள் ஒரு கொடிய தலைமுறையினர். இவர்கள் ஒரு அற்புத அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர, வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை. நினிவே பட்டணத்தைச் சேர்ந்தவர்களுக்கு யோனா அடையாளமாய் இருந்ததுபோல, இந்தத் தலைமுறையினருக்கு மானிடமகனாகிய நானும் அடையாளமாய் இருப்பேன். நியாயத்தீர்ப்பின்போது, தென்நாட்டு அரசியும்கூட இந்தத் தலைமுறை மக்களோடே எழுந்து, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். ஏனெனில், அவள் பூமியின் கடைமுனையிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படி வந்தாளே. ஆனால் சாலொமோனைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார். நியாயத்தீர்ப்பின்போது நினிவே பட்டணத்து மனிதரும், இந்தத் தலைமுறையினரோடு எழுந்து, இவர்கள்மீது குற்றம் சுமத்துவார்கள்; ஏனெனில், அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினார்கள். ஆனால் இப்பொழுதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” என்றார். “யாரும் விளக்கைக் கொளுத்தி, அதை மறைந்திருக்கும்படி ஒரு இடத்திலோ, அல்லது ஒரு பாத்திரத்தால் மூடியோ வைப்பதில்லை. ஆனால் உள்ளே வருகிறவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி, அதை விளக்குத்தண்டின் மேல் வைப்பார்கள். உன்னுடைய கண் உன் உடலின் விளக்காய் இருக்கிறது. உனது கண்கள் நல்லதாய் இருக்கும்போது, உன் முழு உடலும் வெளிச்சம் நிறைந்ததாய் இருக்கும். ஆனால் அவை கெட்டதாய் இருந்தால், உன் உடலும் இருள் நிறைந்ததாய் இருக்கும். ஆகவே, உனக்குள்ளே இருக்கும் வெளிச்சம் இருள் அடையாதபடி பார்த்துக்கொள். உன் முழு உடலும் வெளிச்சம் நிறைந்ததாய் இருந்து, அதன் ஒரு பகுதியும் இருள் அடையாதிருக்குமானால், விளக்கின் வெளிச்சம் உங்களில் பிரகாசிப்பது போல், உனது முழு உடலும் வெளிச்சம் உடையதாய் இருக்கும்” என்றார். இயேசு பேசி முடித்தபோது, பரிசேயன் ஒருவன் இயேசுவைத் தன்னுடன் உணவு சாப்பிடவரும்படி அழைத்தான்; அப்படியே அவர் அவனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பாட்டுப் பந்தியில் உட்கார்ந்தார். சாப்பிடுவதற்கு முன்பு, இயேசு தன் கையைக் கழுவாததைக் கவனித்த பரிசேயன் ஆச்சரியம் அடைந்தான். அப்பொழுது கர்த்தர் அவனிடம் சொன்னதாவது, “பரிசேயரே, நீங்களோ போஜனபாத்திரத்தின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்கிறீர்கள். ஆனால், உங்களுடைய உட்புறமோ பேராசைகளினாலும், கொடுமைகளினாலும் நிறைந்திருக்கிறது. மூடர்களே! வெளிப்புறத்தை உண்டாக்கியவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ? பாத்திரத்தின் உள்ளே இருப்பதை ஏழைகளுக்குக் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு எல்லாம் சுத்தமாயிருக்கும். “பரிசேயரே உங்களுக்கு ஐயோ, ஏனெனில் நீங்கள் உங்களுடைய புதினா கீரையிலும், கறிவேப்பிலையிலும், தோட்டத்தின் மரக்கறிவகையிலும் பத்திலொன்றை இறைவனுக்குக் கொடுக்கிறீர்கள். ஆனால் நீதி செய்வதையும், இறைவனிடம் அன்பு கூறுவதையும், அலட்சியம் செய்கிறீர்கள். இதையே, நீங்கள் முதலில் செய்திருக்கவேண்டும். முன்பு செய்ததையும் கைவிடக்கூடாது. “பரிசேயரே உங்களுக்கு ஐயோ! ஏனெனில், நீங்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், சந்தைகூடும் இடங்களில் வாழ்த்துக்களையும் பெற விரும்புகிறீர்கள். “உங்களுக்கு ஐயோ! ஏனெனில், நீங்கள் அடையாளச்சின்னம் இல்லாமலே, மூடப்பட்ட சவக்குழிகளைப் போல் இருக்கிறீர்கள். அதனால், மனிதர்கள் அது என்ன என்பதை அறியாமல், அதன்மேல் நடந்து போகிறார்கள்.” மோசேயின் சட்ட அறிஞரில் ஒருவன் அவரிடம், “போதகரே, நீர் இவற்றைச் சொல்லுகிறபோது, எங்களையும் அவமானப்படுத்துகிறீர்” என்றான். அதற்கு இயேசு, “மோசேயின் சட்ட அறிஞர்களே, உங்களுக்கு ஐயோ! ஏனெனில், மக்களால் சுமக்க முடியாத சமயச்சடங்குகளை நீங்கள் அவர்கள்மேல் சுமத்துகிறீர்கள். நீங்களோ, அவர்களுக்கு உதவி செய்வதற்காக உங்கள் ஒரு விரலைக்கூட அசைப்பதில்லை. “உங்களுக்கு ஐயோ! ஏனெனில், நீங்கள் இறைவாக்கினர்களுக்காக கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். அவர்களைக் கொலைசெய்தவர்கள், உங்கள் முற்பிதாக்களே. உங்கள் முற்பிதாக்கள் செய்ததை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று இவ்விதமாய்ச் சாட்சி கொடுக்கிறீர்கள்; அவர்களோ, இறைவாக்கினரைக் கொன்றார்கள். நீங்களோ, அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். இதன் காரணமாகவே, இறைவன் தம்முடைய ஞானத்தின்படி சொன்னதாவது, ‘நான் அவர்களிடம் இறைவாக்கினரையும், அப்போஸ்தலரையும் அனுப்புவேன். அவர்களில் சிலரை, இவர்கள் கொலைசெய்வார்கள். மற்றவர்களையோ இவர்கள் துன்புறுத்துவார்கள்’ என்றார். ஆகையால், உலகம் தொடங்கியதிலிருந்து இறைவாக்கினர் அனைவருடைய சிந்தப்பட்ட இரத்தத்திற்கும், இந்தத் தலைமுறையினரிடமே கணக்குக் கேட்கப்படும். ஆபேலுடைய இரத்தம் முதல், ஆலயத்தில் பலிபீடத்திற்கும் பரிசுத்த இடத்திற்கும் இடையே கொலைசெய்யப்பட்ட சகரியாவின் இரத்தம் வரைக்கும், இவர்களிடமே கணக்குக் கேட்கப்படும். ஆம், இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தத் தலைமுறையினரிடமே இவையெல்லாவற்றிற்கும் கணக்குக் கேட்கப்படும். “மோசேயின் சட்ட அறிஞரே உங்களுக்கு ஐயோ, அறிவிற்குரிய சாவியை மக்களிடமிருந்து நீங்கள் எடுத்துப்போட்டீர்கள். அதற்குள் நீங்களும் செல்வதில்லை. செல்கிறவர்களையும் தடைசெய்து விடுகிறீர்கள்” என்றார். இயேசு அங்கிருந்து புறப்படும்போது பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியரும் அவரைக் கடுமையாக எதிர்க்கவும், பல கேள்விகளைக் கேட்டுத் தாக்கவும் தொடங்கினார்கள். அவருடைய வார்த்தைகளிலிருந்தே, இயேசுவைக் குற்றம் கண்டுபிடிப்பதற்குத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
லூக்கா 11:14-54 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு இயேசு ஊமையாக இருந்தவனிடத்திலிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். வேறுசிலர் இயேசுவை சோதிப்பதற்காக வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள். அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் அழிந்துபோகும்; தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தக் குடும்பமும் நிலைத்திருக்காது. சாத்தானும் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்கும்போது, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே. நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள். நான் தேவனுடைய வல்லமையினால் பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே. ஆயுதம் அணிந்த பலசாலி தன் அரண்மனையை காவல்காக்கும்போது, அவனுடைய பொருள்கள் பாதுகாப்பாக இருக்கும். அவனைவிட பலசாலி வந்து, அவனைத் தோற்கடித்து, அவன் நம்பியிருந்த எல்லா ஆயுதங்களையும் பறித்துக்கொண்டு, அவனுடைய பொருட்களை கொள்ளையிடுவான். என்னோடு இல்லாதவன் எனக்கு பகைவனாக இருக்கிறான், மக்களை என்னிடம் சேர்க்காதவன், அவர்களை சிதறடிக்கிறான். அசுத்தஆவி ஒரு மனிதனைவிட்டுப் போகும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாற இடம் தேடியும் கிடைக்காமல்: நான் விட்டுவந்த என் வீட்டிற்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, திரும்பிவரும்போது, அது சுத்தப்படுத்தி ஜோடிக்கப்பட்டிருக்கிறதைக் கண்டு, திரும்பிப்போய், தன்னைவிட பொல்லாத மற்ற ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உள்ளே புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனிதனுடைய முன் நிலைமையை விட அவனுடைய பின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்றார். இயேசு இவைகளைச் சொல்லும்பொழுது, மக்கள் கூட்டத்திலிருந்த ஒரு பெண் அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகள் என்று சத்தமிட்டுச் சொன்னாள். அதற்கு அவர்: அதைவிட, தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் கடைபிடிப்பவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார். மக்கள் கூட்டமாக கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்த வம்சத்தார் பொல்லாதவர்களாக இருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்தவிர வேறு எந்த அடையாளமும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா நினிவே பட்டணத்தார்களுக்கு அடையாளமாக இருந்ததுபோல, மனிதகுமாரனும் இந்த வம்சத்திற்கு அடையாளமாக இருப்பார். தெற்கு தேசத்து ராணி சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லையிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனைவிட பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராணி இந்த வம்சத்தாரோடு எழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனம் மாறினார்கள்; இதோ, யோனாவைவிட பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளில் நினிவே பட்டணத்தார் இந்த வம்சத்தாரோடு எழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவாகவோ, பாத்திரத்தின் கீழேயோ வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம்காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான். கண்ணானது சரீரத்திற்கு விளக்காக இருக்கிறது; உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும்; உன் கண் கெட்டதாக இருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும். எனவே உனக்குள் உள்ள வெளிச்சம் இருளாகாதபடி எச்சரிக்கையாக இரு. உன் சரீரத்தின் எந்தவொரு பகுதியும் இருளடையாமல், சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும் என்றார். இயேசு இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பரிசேயன் ஒருவன், அவர் தன்னோடு உணவு உண்ணவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய் அவனோடுகூட பந்தி உட்கார்ந்தார். அவர் உணவு உண்பதற்கு முன்பு கைகழுவாமல் இருந்ததைப் பரிசேயன் பார்த்து, ஆச்சரியப்பட்டான். கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயர்களாகிய நீங்கள் உணவுப் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்களுடைய உள்ளங்களோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது. மதிகெட்டவர்களே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உள்புறத்தையும் உண்டாக்கவில்லையா? உங்களிடம் இருப்பதை ஏழைகளுக்குக் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குள் எல்லாம் சுத்தமாக இருக்கும். பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினா, மறிக்கொழுந்து ஆகிய எல்லாவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாமல் இருக்கவேண்டும். பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், சந்தைகளில் வணக்கங்களையும் விரும்புகிறீர்கள். வேதபண்டிதர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற சவக்குழிகளைப்போல இருக்கிறீர்கள், அதின்மேல் நடக்கிற மனிதர்களுக்கு அவைகள் தெரியாதிருக்கிறது. அப்பொழுது நியாயப்பண்டிதர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் அவமதிக்கிறீர் என்றான். அதற்கு இயேசு: நியாயப்பண்டிதர்களே, உங்களுக்கு ஐயோ, சுமக்க இயலாத சுமைகளை மனிதர்கள்மேல் சுமத்துகிறீர்கள்; ஆனால், நீங்களோ உங்களுடைய விரல்களினால்கூட அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள். உங்களுக்கு ஐயோ, உங்களுடைய முற்பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். ஆகவே, உங்களுடைய முற்பிதாக்களுடைய செயல்களுக்கு நீங்களும் உடன்பட்டவர்கள் என்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்களுடைய முற்பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்; ஆபேலின் இரத்தத்திலிருந்து பலிபீடத்திற்கும் தேவ ஆலயத்திற்கும் நடுவே கொலை செய்யப்பட்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றத்திலிருந்து சிந்தப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்த வம்சத்தாரிடம் கேட்கப்படுவதற்காக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. நிச்சயமாகவே இந்த வம்சத்தாரிடம் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். நியாயப்பண்டிதர்களே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் உள்ளே செல்வதில்லை, உள்ளே செல்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார். இவைகளை இயேசு அவர்களுக்குச் சொல்லும்போது, வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டுவதற்காக, அவர் வார்த்தைகளில் ஏதாவது பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று முயற்சிசெய்து அவரை மிகவும் நெருக்கவும், அநேக விஷயங்களைக்குறித்துப் பேச அவரைத் தூண்டவும் தொடங்கினார்கள்.
லூக்கா 11:14-54 பரிசுத்த பைபிள் (TAERV)
ஊமையான ஒரு மனிதனிடமிருந்து ஒரு பிசாசை ஒருமுறை இயேசு துரத்திக்கொண்டிருந்தார். பிசாசு வெளிவந்தபோது, அந்த மனிதனால் பேசமுடிந்தது. மக்கள் வியப்படைந்தனர். ஆனால் சிலர் “பெயல்செபூலின் (பிசாசின்) ஆற்றலை இயேசு பயன்படுத்தி, பிசாசுகளைத் துரத்திவிடுகிறார். அசுத்த ஆவிகளுக்குத் தலைவன் பெயல்செபூல்” என்றனர். பிறரும் இயேசுவைச் சோதிக்க விரும்பினர். வானத்திருலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்டும்படியாக இயேசுவைக் கேட்டனர். அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த நினைவுகளை இயேசு அறிந்திருந்தார். எனவே இயேசு மக்களை நோக்கி, “தனக்குள் ஒன்றுக்கொன்று எதிர்த்துக்கொண்டிருக்கிற எந்த இராஜ்யமும் உடைந்து சிதறும். தனக்குள் சண்டை இடுகிற எந்தக் குடும்பமும் பிரிந்து போகும். எனவே சாத்தான் தனக்குள் சண்டையிட்டால், அவனது இராஜ்யம் எப்படி நிலைபெறும்? இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்கு நான் பெயல்செபூலின் ஆற்றலைப் பயன்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள். நான் அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்குப் பெயல்செபூலின் ஆற்றலைப் பயன்படுத்தினால், உங்களைச் சார்ந்தவர்கள் அசுத்த ஆவிகளை வெளியேற்ற எந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள்? எனவே, உங்களைச் சார்ந்தவர்களே நீங்கள் கூறுவது தவறு என்பதை நிரூபிக்கிறார்கள். அசுத்த ஆவிகளைத் துரத்த நான் தேவனுடைய வல்லமையைப் பயன்படுத்துகிறேன். தேவனுடைய இராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது. “பல ஆயுதங்கள் ஏந்திய ஒரு வலிய மனிதன் தன் சொந்த வீட்டைக் காவல் காக்கும்போது அவன் வீட்டில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும். அவனைக் காட்டிலும் வலிய மனிதன் ஒருவன் வந்து அவனைத் தோற்கடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். தனது வீட்டைக் காக்கும் பொருட்டு முதல் மனிதன் வைத்திருந்த ஆயுதங்களை வலிய மனிதன் எடுத்துக்கொள்வான். முதல் மனிதனின் பொருட்களைக்கொண்டே வலிய மனிதன் தான் செய்ய நினைப்பதைச் செய்வான். “ஒருவன் என்னோடு இருக்கவில்லை என்றால், அவன் எனக்கு எதிரானவன். என்னோடு வேலை செய்யாதவன் எனக்கு எதிராகச் செயல் புரிகின்றான். “பிசாசுக்குரிய அசுத்த ஆவியானது ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அந்த ஆவியானது வனாந்தரத்திற்குச் சென்று ஓய்வெடுக்க ஓர் இடம் தேடும். ஆனால் அதற்கு எந்த இடமும் அகப்படுவதில்லை. எனவே ஆவியானது, ‘நான் விட்டு வந்த மனிதனிடம் திரும்பிச் செல்வேன்’ என்று கூறும். ஆவியானது மீண்டும் அவனிடம் வரும்போது, தனது வீடு சுத்தமானதாகவும் அழகானதாகவும் இருப்பதைக் காணும். அப்போது அந்த அசுத்த ஆவியானது வெளியேபோய் தன்னைக் காட்டிலும் அசுத்த குணம்கொண்ட மேலும் ஏழு ஆவிகளைக் கூடவே அழைத்து வரும். பின்பு எல்லா அசுத்த ஆவிகளும் அவனுள்ளே சென்று வசிக்கும். முன்னே இருந்ததைக் காட்டிலும் அம்மனிதனுக்கு மிகுந்த தொல்லை உண்டாகும்” என்றார். இயேசு இக்காரியங்களைக் கூறியபோது, மக்களிடையே இருந்த ஒரு பெண் பேச ஆரம்பித்தாள். அவள் இயேசுவை நோக்கி, “உங்களைப் பெற்றெடுத்து தன் மார்பில் பால் ஊட்டிய உங்கள் தாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றாள். ஆனால் இயேசு, “தேவனுடைய போதனைகளைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிகிற மக்களே உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்கள்” என்றார். மக்களின் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது. இயேசு சொல்லத் தொடங்கினார், “இன்று வாழும் மக்கள் தீயவர்கள். அவர்கள் தேவனிடமிருந்து அடையாளமாக அற்புதங்களைச் செய்யும்படி கேட்கிறார்கள். யோனாவுக்கு நடந்த அதிசயமே அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஒரே அடையாளமாகும். நினிவேயில் வாழ்ந்த மக்களுக்கு யோனா ஓர் அடையாளமாக இருந்தான். மனித குமாரனுக்கும் அதுவே பொருந்தும். இக்காலத்தில் வாழும் மக்களுக்கு மனித குமாரனே ஓர் அடையாளமானவர். “நியாயம் தீர்க்கின்ற நாளில் இன்று வாழும் மக்களோடு தெற்கு தேசங்களின் இராணி எழுந்து நின்று, அவர்கள் செய்வது தவறு எனச் சுட்டிக்காட்டுவாள். ஏனெனில் அந்த இராணி சாலமோனின் ஞானமான போதனைகளைக் கேட்பதற்காகத் தொலை தூரத்தில் இருந்து வந்தவள். ஆனால், நான் சாலமோனைக் காட்டிலும் மேலானவர் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். “நியாயம் தீர்க்கிற நாளில் இன்று வாழும் மக்களோடு நினிவேயின் மக்கள் எழுந்து நின்று, நீங்கள் தவறுடையவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவார்கள். ஏனெனில் அம்மக்களுக்கு யோனா போதித்தபோது, அவர்கள் தம் இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றிக்கொண்டார்கள். ஆனால் நான் யோனாவைக் காட்டிலும் மேலானவர் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். “யாரும் பாத்திரத்தை விளக்கின் மேல் கவிழ்த்து வைப்பதோ, விளக்கை மறைத்து வைப்பதோ இல்லை. அதற்குப் பதிலாக விளக்கை விளக்குத் தண்டின்மீது வைத்து உள்ளே வருபவர் பார்க்கும்படியாக ஏற்றி வைப்பார்கள். உங்கள் சரீரத்திற்கு உங்கள் கண்ணே விளக்காக இருக்கிறது. உங்கள் கண்கள் நன்றாக இருந்தால், உங்கள் சரீரமும் ஒளி உடையதாக இருக்கும். உங்கள் கண்கள் கெட்டவையாக இருந்தால், உங்கள் சரீரமும் இருள் நிரம்பிக் காணப்படும். எனவே கவனமாக இருங்கள். உங்களில் இருக்கும் ஒளி இருளாகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முழு சரீரமும் ஒளி வீசி எந்தப் பகுதியும் இருளாகாதபடி இருந்தால் நீங்கள் மின்னலைப்போல் ஒளி வீசுவீர்கள்” என்றார். இயேசு இவற்றையெல்லாம் கூறி முடித்த பின்பு, பரிசேயர்களில் ஒருவன் அவனோடு சாப்பிடுமாறு இயேசுவை அழைத்தான். எனவே இயேசு வந்து மேசையருகே அமர்ந்தார். இயேசு உணவு உண்பதற்கு முன்னே கைகளைக் கழுவாது வந்து அமர்ந்ததைக் கண்ட பரிசேயன் வியப்படைந்தான். இயேசு அவனை நோக்கி, “பரிசேயர்களாகிய நீங்கள் பாத்திரத்தையும், குவளையையும் வெளிப்புறத்தில் சுத்தமாகக் கழுவுகின்றீர்கள். ஆனால் உட்புறத்தில் பிறரை ஏமாற்றித் தீமை செய்யும் காரியங்களால் நிரம்பி இருக்கின்றீர்கள். நீங்கள் மூடர்கள். வெளிப்புறத்தை உண்டாக்கியவரே (தேவனே) உள்புறத்தையும் உண்டாக்கி உள்ளார். உங்கள் பாத்திரங்களிலும் குவளைகளிலும் இருப்பவற்றை தேவைப்படுகின்ற மக்களுக்குக் கொடுங்கள். அப்போது நீங்கள் முற்றிலும் சுத்தமானவர்களாக இருப்பீர்கள். “பரிசேயரே, உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். உங்களுக்குச் சொந்தமானவற்றில், உங்கள் தோட்டத்தின் சகல விளை பொருட்களில் புதினா, மரிக்கொழுந்து முதலானவற்றில்கூட பத்தில் ஒரு பாகத்தை தேவனுக்குக் கொடுக்கின்றீர்கள். ஆனால் பிறரிடம் நியாயமாக நடந்துகொள்வதையும் தேவனை நேசிப்பதையும் மறந்துவிடுகின்றீர்கள். இவற்றை நீங்கள் கண்டிப்பாகச் செய்தல் வேண்டும். கூடவே, பத்தில் ஒரு பாகம் கொடுப்பது போன்ற காரியங்களையும் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும். “பரிசேயரே, உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இடத்தில் வீற்றிருப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள். சந்தை இடங்களில் மக்கள் உங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென விரும்புகிறீர்கள். நீங்கள் மறைக்கப்பட்ட கல்லறைகளைப் போல் இருந்தால் அது உங்களுக்கு மோசமானதாக இருக்கும். அதை அறியாமல் மக்கள் அவற்றின் மீது நடந்து செல்வார்கள்” என்றார். வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவை நோக்கி, “போதகரே, பரிசேயரைக் குறித்து இக்காரியங்களை நீங்கள் சொல்லும்போது, எங்களையும் விமர்சிக்கிறீரே” என்றான். அவனுக்குப் பதிலாக இயேசு, “வேதபாரகரே, உங்கள் நிலைமை மோசமானதாக இருக்கும். மக்கள் கீழ்ப்படிய இயலாத வகையில் கடுமையான விதிகளை விதிக்கிறீர்கள். மற்ற மக்கள் அவ்விதிகளுக்குக் கட்டுப்படுமாறு அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றீர்கள். ஆனால் நீங்களோ அவ்விதிகளைப் பின்பற்றுவதற்கு முயன்றுகூடப் பார்ப்பதில்லை. தீர்க்கதரிசிகளுக்கு நினைவுச்சின்னங்களைக் கட்டுவதால் உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். அதே தீர்க்கதரிசிகளை உங்கள் முன்னோர்கள் கொன்றார்களே. உங்கள் முன்னோர் செய்ததை நீங்கள் ஏற்றுக்கொள்வதாக எல்லா மக்களிடமும் காட்டிக் கொள்கிறீர்கள். அவர்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள், அவர்களுக்கு நீங்கள் நினைவுச் சின்னங்களை எழுப்புகின்றீர்கள்! எனவே தேவனின் ஞானமானது, ‘நான் தீர்க்கதரிசிகளையும், சீஷர்களையும், அவர்களிடம் அனுப்புவேன். தீய மனிதரால் தீர்க்கதரிசிகளிலும் சீஷர்களிலும் சிலர் கொல்லப்படுவார்கள். வேறு சிலர் துன்புறுத்தப்படுவார்கள்’” என்று உரைத்தார். “உலகம் தோன்றிய காலம் தொடங்கி கொல்லப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளின் மரணத்திற்காகவும், இன்று வாழும் மக்களாகிய நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். ஆபேலின் மரணத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். சகரியாவின் கொலைக்காக நீங்கள் தண்டனை பெறுவீர்கள். பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் நடுவில் சகரியா கொல்லப்பட்டான். அவர்கள் எல்லாருக்காகவும் இன்று வாழும் மக்களாகிய நீங்கள் தண்டனை பெறுவீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். “வேதபாரகரே, உங்களுக்குத் தீமை வரும். தேவனைப்பற்றி அறிவதற்குரிய திறவுகோலை ஒளித்து வைத்திருக்கிறீர்கள். நீங்களும் அறிந்துகொள்வதில்லை. பிறர் அறிந்துகொள்வதையும் தடைசெய்கிறீர்கள்” என்றார். இயேசு அங்கிருந்து கிளம்பும்போது, வேதபாரகர்களும் பரிசேயர்களும் அவரைத் தொல்லைப்படுத்த ஆரம்பித்தார்கள். பலவற்றைக் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு இயேசுவை வற்புறுத்தினார்கள். இயேசு தவறாக ஏதேனும் சொல்ல நேர்ந்தால் அவரைப் பிடிக்கலாம் என வழிகாண முயன்றுகொண்டிருந்தார்கள்.