லூக்கா 15:11-32
லூக்கா 15:11-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு தொடர்ந்து சொன்னதாவது: “ஒருவனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தனது தகப்பனிடம், ‘அப்பா, சொத்தில் எனக்குரிய பங்கைத் தாரும்’ என்று கேட்டான். எனவே தகப்பன், தனது சொத்தை இரண்டுபேர்களுக்கும் இடையில் பிரித்துக்கொடுத்தான். “சில நாட்களுக்குள்ளாகவே, இளையமகன் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரமாயுள்ள ஒரு நாட்டிற்குப் போனான். அவன் அங்கே, துன்மார்க்கமான வாழ்க்கையை வாழ்ந்து, தனது செல்வத்தையெல்லாம் வீணாக செலவுசெய்து அழித்துப்போட்டான். அவன் எல்லாவற்றையும் செலவுசெய்து முடித்தபின், அந்த நாடு முழுவதிலும் ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டது; அதனால், அவனுக்கு வறுமை ஏற்படத் தொடங்கியது. எனவே, அவன் அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவனிடம் போய், கூலிக்கு அமர்ந்தான். அங்கு அவன், பன்றிகளை மேய்க்கும்படி வயலுக்கு அனுப்பப்பட்டான். அப்பொழுது அவன், பன்றிகள் தின்கின்ற தவிட்டினாலேயே தனது வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டான். ஆனால், ஒருவரும் அவனுக்கு அதையும் கொடுக்கவில்லை. “அவனது புத்தி தெளிவடைந்தபோது, ‘எனது தகப்பனிடம் இருக்கும் கூலிக்காரர்களில் எத்தனையோ பேர், உணவைத் தாராளமாய்ப் பெற்றுக்கொள்கிறார்கள். நானோ, இங்கே பட்டினியில் சாகிறேன். நான் புறப்பட்டு என் தகப்பனிடத்திற்குத் திரும்பிப்போய், அவரிடம்: அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். நான் இனிமேலும் உம்முடைய மகன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவன் அல்ல; என்னை உமது கூலிக்காரர்களில் ஒருவனாக வைத்துக்கொள்ளும் எனச் சொல்வேன்’ என்று சொல்லிக்கொண்டான். எனவே, அவன் எழுந்து தன் தகப்பனிடத்திற்குப் போனான். “அவன் வெகுதூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருக்கம் கொண்டான்; தகப்பன் ஓடிப்போய், தனது மகனைக் கைகளால் கட்டிப்பிடித்து முத்தமிட்டான். “மகனோ தன் தகப்பனிடம், ‘அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். இனிமேலும், உமது மகன் என்று அழைக்கப்படுவதற்கு நான் தகுதியற்றவன்’ என்றான். “ஆனால் அவனுடைய தகப்பனோ, தனது வேலைக்காரரைப் பார்த்து, ‘விரைவாய் போங்கள், முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து, அதை இவனுக்கு உடுத்துங்கள். இவனுடைய கை விரலிலே மோதிரத்தையும் காலுக்கு பாதரட்சையையும் போடுங்கள். மிக சிறப்பான விருந்தை உடனே ஆயத்தப்படுத்துங்கள். நாம் விருந்துண்டு கொண்டாடுவோம். ஏனெனில், எனது மகனான இவன் இறந்து போயிருந்தான்; இப்பொழுதோ, மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறான். நான் இவனை இழந்து போயிருந்தேன்; இப்பொழுதோ, எனக்கு இவன் கிடைத்துவிட்டான்,’ என்றான். எனவே, அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள். “இவ்வேளையில், மூத்த மகன் வயலில் இருந்தான். அவன் வீட்டிற்கு திரும்பிவந்து கொண்டிருக்கையில், ஆடல் பாடலின் சத்தம் அவனுக்குக் கேட்டது. எனவே, அவன் வேலைக்காரரில் ஒருவனைக் கூப்பிட்டு, ‘என்ன நடக்கிறது?’ என்று விசாரித்தான். அதற்கு அவன், ‘உம் சகோதரன் வந்திருக்கிறார். அவர் சுகபெலத்துடன் தம்மிடம் மீண்டும் வந்து சேர்ந்ததால், உமது தந்தை மிக சிறப்பான விருந்தை ஆயத்தபடுத்தியிருக்கிறார்’ என்றான். “அப்பொழுது அந்த மூத்த சகோதரனோ கோபமடைந்து, உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தான். எனவே அவனது தந்தை வெளியே போய், அவனை உள்ளே வரும்படி கெஞ்சிக்கேட்டான். அவனோ தன் தந்தையிடம், ‘இதோ, இத்தனை வருடங்களாக நான் உங்களுக்கு அடிமையாய் வேலைசெய்துகொண்டு வருகிறேன், நான் ஒருபோதும் உங்கள் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல் போனதில்லை. அப்படியிருந்தும், நான் எனது நண்பர்களுடன் கொண்டாடும்படி, நீங்கள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைகூட கொடுக்கவில்லை. ஆனால் வேசிகளோடு உங்கள் சொத்தை வீணடித்த இந்த உங்கள் மகன் வீட்டிற்கு வந்த உடனே, இவனுக்காக நீங்கள் மிக சிறப்பான விருந்தை ஆயத்தப்படுத்தி இருக்கிறீர்கள்’ என்றான். “அப்பொழுது தந்தை, ‘என் மகனே! நீ எப்பொழுதும் என்னுடனே தான் இருக்கிறாய். எனக்குரியவை எல்லாம் உனக்குரியவைகளே. ஆனால் உம் சகோதரனான இவன் இறந்து போயிருந்தான்; இப்பொழுது மீண்டும் உயிர்பெற்றிருக்கிறான். காணாமல் போயிருந்தான்; மீண்டும் நமக்குக் கிடைத்திருக்கிறான். அதனால், நாம் சந்தோஷத்தோடே கொண்டாடுவது முறையானதே’ என்றான்.”
லூக்கா 15:11-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்னும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான். சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான், அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில்போய் வேலையில் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள். அவனுடைய மூத்தகுமாரன் வயலில் இருந்தான். அவன் திரும்பி வீட்டிற்கு அருகில் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு; வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்தக் கன்றை அடித்திருக்கிறார் என்றான். அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக விருப்பமில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தான். அவன் தகப்பனுக்கு மறுமொழியாக: இதோ, இத்தனை வருடகாலமாக நான் உமக்கு வேலைச்செய்து, எப்பொழுதுமே எல்லாவற்றிலும் உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தும், என் நண்பர்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கும்படி நீர் ஒருபோதும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான். அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாக இருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.
லூக்கா 15:11-32 பரிசுத்த பைபிள் (TAERV)
அப்போது இயேசு, “ஒரு மனிதனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இளைய குமாரன் தந்தையை நோக்கி, ‘நமக்குச் சொந்தமான எல்லாப் பொருட்களிலும் எனது பங்கை எனக்குத் தாருங்கள்’ என்று கூறினான். எனவே தந்தை செல்வத்தை இரண்டு பிள்ளைகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தான். “சில நாட்களுக்குப் பிறகு இளைய குமாரன் தனக்குரிய எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுப் போனான். வேறொரு தூர தேசத்துக்கு அவன் பிரயாணம் செய்தான். அங்கு அவன் பணத்தை மூடனைப்போல் வீணாகச் செலவழித்தான். அவன் தன்னிடமிருந்த பணம் அனைத்தையும் செலவு செய்தான். அதற்குப் பின்னர், அந்நாட்டில் வறட்சி நிலவியது. மழை பெய்யவில்லை. அந்நாட்டில் எல்லாருக்கும் தேவையான அளவுக்கு உணவு கிடைக்கவில்லை. அந்த குமாரன் பசியாலும், பணமின்மையாலும் துன்பப்பட்டான். எனவே அந்த நாட்டில் வாழ்ந்த ஒருவனிடம் அவன் வேலைக்கு அமர்ந்தான். பன்றிகளுக்குத் தீவனமிடுமாறு அந்த குமாரனை அம்மனிதன் அனுப்பினான். அந்த குமாரன் பசிமிகுதியால் பன்றிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவையாகிலும் உண்ண வேண்டுமென விரும்பினான். ஆனால் அவனுக்கு ஒருவரும் எந்த உணவையும் கொடுக்கவில்லை. “இளைஞன் தன் மூடத்தனத்தை உணர்ந்தான். அவன், ‘என் தந்தையின் எல்லா வேலைக்காரர்களுக்கும் மிகுதியான உணவு கிடைக்கும். நானோ உணவின்றி இங்கு இறக்கும் நிலையில் இருக்கிறேன். நான் இங்கிருந்து என் தந்தையிடம் போய்: தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களிடமும் தவறு செய்தேன். உங்கள் குமாரன் என்று அழைக்கப்படும் அளவுக்கு நான் தகுதியுள்ளவன் அல்லன். நான் உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாக வாழ அனுமதியுங்கள் என்று சொல்லுவேன்’ என்று எண்ணினான். எனவே அந்த குமாரன் அங்கிருந்து தன் தந்தையிடம் சென்றான். “அந்த குமாரன் தொலைவில் வரும்போதே அவனது தந்தை பார்த்துவிட்டார். அந்த குமாரனின் நிலையைக் கண்டு தந்தை வருந்தினார். எனவே தந்தை மகனிடம் ஓடினார். குமாரனை அரவணைத்து முத்தமிட்டார். குமாரன், ‘தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களுக்கும் தவறு இழைத்தேன். உங்கள் குமாரன் என்று அழைக்கப்படுவதற்கேற்ற தகுதி எனக்குக் கிடையாது’ என்றான். “ஆனால் தந்தை வேலைக்காரரை நோக்கி, ‘விரைந்து செல்லுங்கள். விலையுயர்ந்த ஆடைகளைக் கொண்டுவந்து அவனுக்கு உடுத்துங்கள். அவன் விரலுக்கு மோதிரம் அணிவித்துக் காலுக்கு நல்ல பாதரட்சைகளை அணியச் செய்யுங்கள். நம் கொழுத்த கன்றை கொண்டுவாருங்கள். அதைச் சமைத்து திருப்தியாகச் சாப்பிடுவோம். ஒரு விருந்து வைப்போம். என்னுடைய இந்த குமாரன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிரோடு வந்துள்ளான். அவன் காணாமல் போயிருந்தான், இப்போது மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டான்’ என்று கூறினார். எனவே விருந்து ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். “மூத்த குமாரன் வயலில் இருந்தான். அவன் வீட்டுக்கு அருகாமையில் திரும்பி வந்து கொண்டிருந்தான். இசை, ஆடல் ஆகியவற்றின் சத்தத்தைக் கேட்டான். எனவே மூத்த குமாரன் வேலைக்காரச் சிறுவர்களில் ஒருவனை அழைத்து, ‘இவையெல்லாம் எதற்காக நடைபெறுகின்றன?’ என்று கேட்டான். வேலைக்காரன், ‘உங்கள் சகோதரன் திரும்பி வந்துள்ளார். உங்கள் தந்தை கொழுத்த கன்றை உண்பதற்காகக் கொன்றுள்ளார். உங்கள் சகோதரன் பாதுகாப்பாகவும் நல்ல முறையிலும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி இருப்பதால் உங்கள் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்றான். “மூத்த குமாரன் கோபமுற்று விருந்துக்குச் செல்லவில்லை. எனவே தந்தை வெளியே வந்து அவனிடம் வற்புறுத்தினார். உள்ளே வருமாறு அழைத்தார். குமாரன் தந்தையை நோக்கி, ‘நான் உங்களுக்கு ஓர் அடிமையைப் போல் பல ஆண்டுகள் உழைத்தேன்! உங்கள் கட்டளைக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடந்தேன். ஆனால் ஒரு வெள்ளாட்டையாகிலும் நீங்கள் எனக்காகக் கொன்றதில்லை. எனக்கும் என் நண்பர்களுக்கும் நீங்கள் விருந்தளித்ததில்லை. ஆனால் உங்கள் இன்னொரு குமாரன் பணத்தை எல்லாம் வேசிகளிடம் செலவழித்தான். பின்னர் வீடு திரும்பியதும் அவனுக்காகக் கொழுத்த கன்றுக் குட்டியை கொன்றீர்கள்’ என்றான். “ஆனால் தந்தை அவனை நோக்கி, ‘மகனே! நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். எனக்குரியவை அனைத்தும் உனக்கு உரியவை. நாம் சந்தோஷமாக விருந்துண்ண வேண்டும். ஏனெனில் உன் சகோதரன் இறந்து போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துள்ளான். காணாமல் போயிருந்தான், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்’ என்றார்” என்று கூறினார்.
லூக்கா 15:11-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு; ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான். அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான். அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான். அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.