லூக்கா 19:1-10

லூக்கா 19:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு எரிகோ பட்டணத்திற்கு வந்து, அதன் வழியாகப்போய்க் கொண்டிருந்தார். அங்கே சகேயு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் வரி வசூலிப்பவர்களின் தலைவனாகவும், செல்வந்தனாகவும் இருந்தான். அவன் இயேசு யார் என்று பார்க்க விரும்பினான். ஆனால், அவன் குள்ளனானபடியால், மக்கள் கூட்டத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை. எனவே, சகேயு அவரைப் பார்க்கும்படி முன்னே ஓடிப்போய், ஒரு காட்டத்தி மரத்தில் ஏறிக்கொண்டான். ஏனெனில், இயேசு அந்த வழியாகவே வந்துகொண்டிருந்தார். இயேசு அவ்விடத்திற்கு வந்தபொழுது, அவர் மேலே அண்ணார்ந்து பார்த்து, “சகேயுவே, உடனடியாய் கீழே இறங்கி வா. நான் இன்றைக்கு உன்னுடைய வீட்டில் தங்கவேண்டும்” என்று, அவனுக்குச் சொன்னார். அவன் உடனே இறங்கிவந்து, அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். இதைக் கண்ட யாவரும், “ஒரு ‘பாவியினுடைய’ வீட்டிற்கு இவர் விருந்தாளியாய் வந்திருக்கிறாரே” என்று, முறுமுறுக்கத் தொடங்கினார்கள். ஆனால் சகேயுவோ, எழுந்து நின்று கர்த்தரிடம், “ஆண்டவரே, இதோ நான் என்னுடைய சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். யாருக்காவது எதிலாவது மோசடி செய்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுப்பேன்” என்றான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து, “இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது. ஏனெனில், இவனும் ஆபிரகாமிற்கு மகனாயிருக்கிறானே. வழிதவறிப் போனவர்களைத் தேடி இரட்சிப்பதற்காகவே மானிடமகனாகிய நான் வந்திருக்கிறேன்” என்றார்.

லூக்கா 19:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு எரிகோவில் பிரவேசித்து, அதின்வழியாக நடந்துபோகும்போது, வரி வசூலிப்பவனும் செல்வந்தனுமாகவும் இருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனிதன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், மக்கள்கூட்டத்தில் அவரைப் பார்க்கமுடியாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனை நோக்கி: சகேயுவே, நீ சீக்கிரமாக இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். அவன் சீக்கிரமாக இறங்கி, சந்தோஷத்தோடு அவரை அழைத்துக்கொண்டுபோனான். அதைக் கண்ட அனைவரும்: இவர் பாவியான மனிதனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள். சகேயு நின்று, கர்த்த்தரைப் பார்த்து: ஆண்டவரே, என் சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாவது அநியாயமாக வாங்கினதுண்டானால், நாலுமடங்காகத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன் என்றான். இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாக இருக்கிறானே. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனிதகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

லூக்கா 19:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

எரிகோ பட்டணத்தின் வழியாக இயேசு சென்றுகொண்டிருந்தார். எரிகோவில் சகேயு என்னும் பெயருடைய மனிதன் இருந்தான். அவன் செல்வந்தனும், முக்கியமானவனுமான ஒரு வரி வசூலிப்பவனாவான். அவன் இயேசுவைக் காண விரும்பினான். இயேசுவைக் காண விரும்பிய இன்னும் பலரும் அங்கு இருந்தார்கள். மக்களுக்குப் பின்னே நின்றபடி இயேசுவைப் பார்க்க முடியாதபடி சகேயு குள்ளனாக இருந்தான். எனவே, அவன் இயேசு கடந்து செல்லும் இடத்தையடைய வேகமாக ஓடிச் சென்றான். இயேசுவைப் பார்க்கும்பொருட்டு ஓர் அத்தி மரத்தின்மீது சகேயு ஏறினான். இயேசு அவ்விடத்துக்கு வந்தபோது, மேலே ஏறிட்டுப் பார்த்து சகேயு மரத்தின்மீது இருப்பதைக் கண்டார். இயேசு அவனை நோக்கி, “சகேயுவே, விரைந்து வா. கீழே இறங்கு. இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்கவேண்டும்” என்றார். சகேயு விரைந்து கீழே இறங்கினான். தன் வீட்டில் இயேசுவை வரவேற்பதில் அவன் மிகவும் மகிழ்ந்தான். எல்லா மக்களும் இதைக் கண்டனர். அவர்கள், “எத்தகைய மனிதனோடு இயேசு தங்குகிறார் என்பதைப் பாருங்கள். சகேயு ஒரு பாவி” என்று புகார் கூறினார்கள். சகேயு கர்த்தரை நோக்கி, “நான் நல்லதைச் செய்ய விரும்புகிறேன். என் பணத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பேன். நான் யாரையாவது ஏமாற்றி இருந்தால் அவனுக்கு நான்கு மடங்கு பணத்தைத் திரும்பக் கொடுப்பேன்” என்றான். இயேசு, “இந்த மனிதன் நல்லவன். உண்மையில் ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவன். இன்றைக்கு சகேயு அவனது பாவங்களில் இருந்து மீட்கப்பட்டான். மனித குமாரன் இழந்துபோன மனிதர்களைக் கண்டு அவர்களை மீட்கவே வந்தார்” என்றார்.

லூக்கா 19:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில், ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டுபோனான். அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள். சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.