லூக்கா 22:24-38

லூக்கா 22:24-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மேலும், தங்களுக்குள்ளே யார் பெரியவனாகக் கருதப்படுகிறான் என்பது பற்றி, ஒரு வாக்குவாதமும் மூண்டது. அப்பொழுது இயேசு அவர்களிடம், “யூதரல்லாத மக்களின் அரசர்கள், அவர்களை அடக்கி ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்கள், தாங்கள் கொடைவள்ளல்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால், நீங்கள் அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்கிறவன், சிறியவனைப்போல் இருக்கவேண்டும். ஆளுகை செய்கிறவனோ, பணிவிடை செய்கிறவனைப்போல் இருக்கவேண்டும். பந்தியில் உட்கார்ந்திருப்பவனா, அல்லது அதில் பணிசெய்கிறவனா, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? ஆனால் நானோ, உங்களிடையே பணிசெய்கிறவனைப்போல் இருக்கிறேன். நீங்களே எனது சோதனைகளில் என்னோடுகூட நின்றவர்கள். என் பிதா எனக்கு ஒரு அரசை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஒரு அரசை ஏற்படுத்துகிறேன். இதனால் நீங்களும் என்னுடைய அரசிலே, பந்தியில் சாப்பிட்டுக் குடிப்பீர்கள். இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய் அரியணையில் உட்காருவீர்கள். “சீமோனே, சீமோனே, கோதுமையைப் புடைப்பதுபோல் உங்களைப் புடைக்கும்படி, சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனாலும், உன் விசுவாசம் குறைந்து போகாதிருக்க, நான் உனக்காக மன்றாடியிருக்கிறேன். நீ மனந்திரும்பிய பின்பு, உன் சகோதரர்களையும் பெலப்படுத்து” என்றார். அப்பொழுது சீமோன் இயேசுவிடம், “ஆண்டவரே, நான் உம்முடனே சிறைக்குப் போகவும், சாகவும் ஆயத்தமாய் இருக்கிறேன்” என்றான். இயேசு அதற்குப் பதிலாக, “பேதுருவே, நான் உனக்குச் சொல்கிறேன், இன்று சேவல் கூவுவதற்கு முன்னதாகவே, என்னை உனக்குத் தெரியாது என்று, நீ மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்றார். பின்பு இயேசு அவர்களிடம், “உங்களை நான் பணப்பையோ, பயணப்பையோ, பாதரட்சைகளோ இல்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஒன்றும் குறைவுபடவில்லை” என்றார்கள். இயேசு அவர்களிடம், “இப்பொழுது, பணப்பை இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பயணப்பையையும் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் வாள் இல்லாவிட்டால், தனது மேலுடையை விற்று, ஒன்றை வாங்கிக்கொள்ளட்டும். ‘அவர் குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார்’ என்று எழுதியிருக்கிறதே; நான் உங்களுக்குச் சொல்கிறேன், இது என்னில் நிறைவேற வேண்டும். ஆம், என்னைக்குறித்து எழுதப்பட்டிருப்பது முழுமையாக நிறைவடையப்போகிறது” என்றார். அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, எங்களிடம் ஏற்கெனவே இரண்டு வாள்கள் இருக்கின்றன” என்றார்கள். அதற்கு அவர், “அதுபோதும்” என்றார்.

லூக்கா 22:24-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்றியும் தங்களில் எவன் பெரியவனாக இருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டானது. அவர் அவர்களைப் பார்த்து: யூதரல்லாத இனத்தாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் நற்பணியாளர்கள் என்று எண்ணப்படுகிறார்கள். உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் சேவைசெய்கிறவனைப்போலவும் இருக்கவேண்டும். பந்தியில் உட்கார்ந்திருக்கிறவனோ, சேவைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்களுடைய நடுவிலே சேவைசெய்கிறவனைப்போல இருக்கிறேன். மேலும் எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகவே, என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் சாப்பிட்டுக் குடித்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகச் சிங்காசனங்களின்மேல் அமருவீர்கள் என்றார். பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையை முறத்தினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு அனுமதி கேட்டுக்கொண்டான். நானோ உன் நம்பிக்கை இழந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரர்களைத் திடப்படுத்து என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாக இருக்கிறேன் என்றான். அவர் அவனைப் பார்த்து: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களைப் பணப்பையும் சாமான் பையும் காலணிகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாவது உங்களுக்குக் குறைவாக இருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாக இருந்ததில்லை என்றார்கள். அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான் பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்; பட்டயம் இல்லாதவன் தன் ஆடையை விற்று ஒரு பட்டயத்தை வாங்கவேண்டும். அக்கிரமக்காரர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் நிறைவேறும் காலம் வந்திருக்கிறது என்றார். அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.

லூக்கா 22:24-38 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னர் தங்களில் மிக முக்கியமானவன் யார் என்று அப்போஸ்தலர்கள் தமக்குள் விவாதிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் இயேசு அவர்களை நோக்கி, “உலகத்தில் (வேறுவேறு) தேசங்களின் ராஜாக்கள் மக்களை அரசாளுகிறார்கள். பிற மக்களின் மீது அதிகாரம் செலுத்துபவர்கள் ‘மக்களின் உதவியாளன்’ என தம்மை எல்லாரும் அழைக்கும்படிச் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் அவ்வாறு இருக்கலாகாது. உங்களுக்குள் மிகச் சிறந்தவன் சிறியவனைப்போன்று நடந்துகொள்ள வேண்டும். தலைவர்கள் வேலைக்காரனைப்போல இருக்கவேண்டும். யார் மிகவும் முக்கியமானவன்? மேசையின் அருகே உட்கார்ந்திருப்பவனா அல்லது அவனுக்குப் பரிமாறுகிறவனா? மேசையருகே உட்கார்ந்திருப்பவன் முக்கியமானவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உங்களில் நான் ஒரு வேலைக்காரனைப்போல இருக்கிறேன். “பெரும் சிக்கல்களின்போது நீங்கள் நம்பிக்கையோடு என்னருகில் தங்கி இருக்கிறீர்கள். எனது பிதா எனக்கு ஓர் இராஜ்யத்தைக் கொடுத்திருக்கிறார். என்னோடு அரசாளுகிற அதிகாரத்தை உங்களுக்கு நானும் கொடுக்கிறேன். என் அரசில் நீங்கள் மேசை அருகே என்னோடு உண்டு, பருகுவீர்கள். நீங்கள் சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு குலங்களையும் நியாயம்தீர்ப்பீர்கள். “ஓர் உழவன் கோதுமையைப் புடைப்பது போல சாத்தான் உங்களைச் சோதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளான். சீமோனே, சீமோனே (பேதுரு), நீ உன் நம்பிக்கையை இழக்காதிருக்கும்படியாக நான் பிரார்த்தனை செய்திருக்கிறேன். நீ என்னிடம் திரும்பி வரும்போது உன் சகோதரர்கள் வலிமையுறும்பொருட்டு உதவி செய்” என்றார். ஆனால் பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நான் உங்களுடன் சிறைக்கு வரத் தயாராக இருக்கிறேன். நான் உங்களோடு இறக்கவும் செய்வேன்” என்றான். ஆனால் இயேசு, “பேதுரு, நாளைக் காலையில் சேவல் கூவும் முன்பு என்னைப்பற்றி உனக்குத் தெரியாதென கூறுவாய். இதனை நீ மூன்று முறை சொல்வாய்” என்றார். பின்பு இயேசு சீஷர்களை நோக்கி, “மக்களுக்குப் போதிப்பதற்காக நான் உங்களை அனுப்பினேன். நான் உங்களை பணம், பை, காலணிகள் எதுவுமின்றி அனுப்பினேன். ஆனால் ஏதேனும் உங்களுக்குக் குறை இருந்ததா?” என்று கேட்டார். சீஷர்கள், “இல்லை” என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, “ஆனால், இப்போது பணமோ, பையோ உங்களிடம் இருந்தால் அதை உங்களோடு கொண்டு செல்லுங்கள். உங்களிடம் வாள் இல்லையென்றால் உங்கள் சட்டையை விற்று ஒரு வாள் வாங்குங்கள். வேதவாக்கியம் சொல்கிறது, “‘மக்கள் அவரைக் குற்றவாளி என்றார்கள்.’ இந்த வேதாகமக் கருத்து நிறைவேறவேண்டும். இது என்னைக் குறித்து எழுதப்பட்டது, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார். சீஷர்கள், “ஆண்டவரே, பாருங்கள், இங்கு இரண்டு வாள்கள் உள்ளன” என்றார்கள். இயேசு அவர்களிடம், “இரண்டு போதுமானவை” என்றார்.

லூக்கா 22:24-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று. அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள். உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன். பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன். மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார். பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான். அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள். அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன். அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார். அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.