மல்கியா 1:8-11
மல்கியா 1:8-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார். இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்; இது உங்களாலே வந்த காரியம்; அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார். உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள் பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல. சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மல்கியா 1:8-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீங்கள் குருடான மிருகங்களை பலிக்காகக் கொண்டு வருகிறீர்களே, அது தவறில்லையா? ஊனமானதும் நோயுற்றதுமான மிருகங்களைப் பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா? அவற்றை உங்கள் ஆளுநருக்குக் கொடுத்துப் பாருங்கள். உங்களிடம் அவன் பிரியமாய் இருப்பானோ? அல்லது உங்களை அவன் ஏற்றுக்கொள்வானோ? என சேனைகளின் யெகோவா கேட்கிறார். “அப்படியிருந்தும் இப்போது உங்களில் கிருபையாய் இருக்கும்படி, இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறீர்கள். உங்கள் கைகளில் இப்படியான காணிக்கைகளை அவரிடம் கொண்டுவந்தால், ஏன் அவர் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்?” என சேனைகளின் யெகோவா கேட்கிறார். “என் பலிபீடத்தில் பயனற்ற நெருப்பை மூட்டாதபடி, உங்களில் ஒருவனாகிலும் ஆலயக் கதவை அடைக்கமாட்டானோ, உங்களில் எனக்குப் பிரியமில்லை. உங்கள் கைகளிலிருந்து நான் எந்த ஒரு காணிக்கையையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என சேனைகளின் யெகோவா சொல்கிறார். நாடுகளுக்குள்ளே என் பெயர் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து, அது மறையும் திசை வரையும், மேன்மையுள்ளதாய் விளங்கும். அதனால் எல்லா இடத்திலேயும் என் பெயருக்கு தூபமும், தூய்மையான காணிக்கையும் செலுத்தப்படும். ஏனெனில் நாடுகளிடையே, என் பெயர் மேன்மையுள்ளதாயிருக்கும்” என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
மல்கியா 1:8-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும், வியாதியுள்ளதையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிகாரிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் யெகோவா கேட்கிறார். இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்; இது உங்களாலே வந்த காரியம்; அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் யெகோவா கேட்கிறார். உங்களில் எவன் கூலிவாங்காமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் நெருப்பைக் கூலிவாங்காமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள்மேல் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல. சூரியன் உதிக்கும் திசை தொடங்கி, அது மறையும் திசைவரைக்கும், என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்திற்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
மல்கியா 1:8-11 பரிசுத்த பைபிள் (TAERV)
நீங்கள் குருட்டு விலங்குகளைப் பலியாக கொண்டு வருகிறீர்கள். அது தவறு. நீங்கள் நோயுற்றதும் நொண்டியானதுமான விலங்குகளை பலியாக கொண்டுவருகிறீர்கள். அது தவறு. அந்நோயுற்ற விங்குகளை உங்கள் ஆளுநருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முயலுங்கள். அவன் நோயுற்ற விலங்குகளை அன்பளிப்பாக ஏற்றுக்கொள்வானா? இல்லை. அவன் அந்த அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டான்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார். “ஆசாரியர்களே, நீங்கள் எங்களிடம் நல்லவராக இருக்கும்படி கர்த்தரிடம் கேளுங்கள். ஆனால் அவர் நீங்கள் சொல்வதைக் கேட்கமாட்டார். இது எல்லாம் உங்களுடைய தவறு” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார். “உறுதியாக, ஆசாரியர்களுள் சிலர் ஆலய கதவுகளை அடைத்து சரியாக நெருப்பைக் கொளுத்த முடியும். நான் உங்களிடம் மகிழ்ச்சியாக இருக்கமாட்டேன். நான் உங்கள் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டேன்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார். “உலகைச் சுற்றிலும் உள்ள ஜனங்கள் எனது நாமத்தை மதிக்கிறார்கள். உலகைச் சுற்றிலும் உள்ள ஜனங்கள் எனக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொண்டு வருவார்கள். அவர்கள் எனக்கு நறுமணப் பொருட்களை அன்பளிப்பாக எரிக்கிறார்கள். ஏனென்றால் எனது நாமம் அந்த ஜனங்கள் அனைவருக்கும் மிக முக்கியமானது” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.