மத்தேயு 15:21-28
மத்தேயு 15:21-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார். அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லவென்றார். அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள். அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.
மத்தேயு 15:21-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு அவ்விடம் விட்டு தீரு, சீதோன் பகுதிக்குச் சென்றார். அப்பகுதியிலிருந்த ஒரு கானானியப் பெண் அவரிடத்தில் வந்து, “ஆண்டவரே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்! எனது மகளுக்குப் பிசாசு பிடித்திருப்பதினால் மிகவும் வேதனைப்படுகிறாள்” என்று கதறினாள். ஆனால் இயேசு அதற்குப் பதிலாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. எனவே அவரது சீடர்கள் அவரிடம் வந்து, “இவளை அனுப்பிவிடும் இவள் நமக்குப் பின்னால் கதறிக் கொண்டே வருகிறாளே!” என வேண்டிக்கொண்டார்கள். அப்பொழுது இயேசு, “நான் இஸ்ரயேலில் வழிதவறிப்போன ஆடுகளுக்காக மட்டுமே அனுப்பப்பட்டேன்” என்று சொன்னார். அந்தப் பெண் வந்து, இயேசுவின்முன் முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே எனக்கு உதவிசெய்யும்!” என்றாள். இயேசு அவளைப் பார்த்து, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்றார். அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, ஆனால் நாய்க்குட்டிகள் எஜமானின் மேஜையில் இருந்து விழும் அப்பத்துண்டுகளைத் தின்னுமே” என்றாள். அப்பொழுது இயேசு, “பெண்ணே, உன் விசுவாசம் பெரியது! நீ வேண்டியது கொடுக்கப்பட்டது” என்றார். அந்நேரமே, அவளுடைய மகள் சுகமடைந்தாள்.
மத்தேயு 15:21-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு, இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார். அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேதவிர, மற்றவர்களுக்கல்ல என்றார். அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள். அவர் அவளைப் பார்த்து: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள். இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள்.
மத்தேயு 15:21-28 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு அவ்விடத்தை விட்டு தீரு மற்றும் சீதோன் பிரதேசங்களுக்குச் சென்றார். அப்பிரதேசத்தைச் சேர்ந்த கானான் ஊர் பெண் ஒருத்தி இயேசுவிடம் வந்தாள். அவள் இயேசுவிடம் கதறியழுது, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு உதவும்! என் மகளைப் பிசாசு பிடித்திருக்கிறது. அவள் மிகவும் துன்பப்படுகிறாள்” என்றாள். ஆனால் இயேசு அவளுக்கு மறுமொழி கூறவில்லை. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “அந்தப் பெண்ணைப் போகச் சொல்லும். நம்மைத் தொடந்து வந்து கதறுகிறாள்” என்று கெஞ்சினார்கள். இயேசு, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்று கூறினார். அப்போது அப்பெண் இயேசுவின் முன்னர் வந்து மண்டியிட்டு, “ஆண்டவரே, எனக்கு உதவும்” எனக் கூறினாள். இயேசு, “குழந்தைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குக் கொடுப்பது சரியல்ல” என்று பதில் சொன்னார். அதற்கு அப்பெண், “ஆம் ஆண்டவரே! ஆனால் எஜமானனின் மேஜையிலிருந்து சிதறும் அப்பத்துண்டுகளை நாய்கள் உண்ணுகின்றனவே” என்றாள். பின்னர் இயேசு அவளை நோக்கி, “பெண்ணே, உனக்கு மிகுந்த விசுவாசம் இருக்கின்றது! நான் செய்ய வேண்டுமென்று நீ விரும்பியதை நான் செய்கின்றேன்” என்று கூறினார். அதே நேரத்தில் அப்பெண்ணின் குமாரத்தி குணப்படுத்தப்பட்டாள்.