மத்தேயு 22:34-46
மத்தேயு 22:34-46 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர் சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி: கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
மத்தேயு 22:34-46 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு சதுசேயர்களை வாயடைத்துப் போகச் செய்தார் என்று கேள்விப்பட்டபோது, பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தார்கள். அவர்களில் மோசேயின் சட்டத்தில் தேறின ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்டு அவரைச் சோதித்தான்: “போதகரே, மோசேயின் சட்டத்தில் மிகப்பெரிய கட்டளை எது?” என்றான். இயேசு அவனுக்குப் பதிலாக, “உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக. இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை. இரண்டாவதும் இதைப் போன்றதே: நீ உன்னில் அன்பாய் இருப்பதுபோல, உன் அயலானிலும் அன்பாய் இரு. முழு மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் இந்த இரண்டு கட்டளைகளிலும் அடங்கி இருக்கின்றன” என்றார். பரிசேயர் ஒன்றுகூடியபோது, இயேசு அவர்களிடம், “நீங்கள் கிறிஸ்துவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அவர் தாவீதின் மகன்” என்று பதிலளித்தார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “அப்படியானால் தாவீது பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு பேசுகையில், அவரைக், ‘கர்த்தர்’ என்று அழைத்தது எப்படி?” ஏனெனில் தாவீது, “ ‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது பாதபடியாக்கும்வரை, எனது வலதுபக்கத்தில் உட்காரும்” ’ என்று சொல்லியிருக்கிறாரே. தாவீது அவரைக் ‘கர்த்தர்,’ என்று அழைத்தான். அப்படியிருக்க கிறிஸ்து எப்படி அவனுக்கு மகனாய் இருக்கமுடியும்?” என்று கேட்டார். அவருக்கு யாராலும், ஒரு வார்த்தையும் பதிலாகச் சொல்ல முடியவில்லை. அன்றிலிருந்து, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
மத்தேயு 22:34-46 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர் சதுசேயர்களைப் பேசவிடாமல் வாயடைத்தார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கட்டளை முதன்மையானது என்று கேட்டான். இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக; இது முதலாம் பெரிய கட்டளை. இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே. இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். பரிசேயர்கள் கூடியிருக்கும்போது, இயேசு அவர்களைப் பார்த்து: கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியானவராலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார். அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லமுடியாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
மத்தேயு 22:34-46 பரிசுத்த பைபிள் (TAERV)
சதுசேயர்களால் வாதிட இயலாதபடி இயேசு பதில் அளித்தார் என்று பரிசேயர்கள் அறிந்தனர். எனவே, பரிசேயர்கள் ஒன்று கூடினார்கள். ஒரு பரிசேயன் மோசேயின் சட்டத்தை நன்கு கற்றவன். அவன் இயேசுவைச் சோதிக்க ஒரு கேள்வி கேட்டான், “மோசேயின் சட்டங்களில் எது மிக முக்கியமானது?” என்று அந்தப் பரிசேயன் கேட்டான். இயேசு அதற்கு, “‘உன் தேவனாகிய கர்த்தரை நேசிக்க வேண்டும். முழு இதயத்தோடும் ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்.’ இது தான் முதலாவது மிக முக்கியமானதுமான கட்டளை. இரண்டாவது கட்டளையும் முதலாவது கட்டளைப் போன்றதே ‘நீ உன்னை நேசிப்பதைப்போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.’ எல்லா கட்டளைகளும், தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களும் இந்த இரண்டு கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டவைதான்” என்றார். பரிசேயர்கள் ஒன்றாய் கூடியிருந்த பொழுது, இயேசு அவர்களை ஒரு கேள்வி கேட்டார். “கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய குமாரன்?” என்றார். அதற்குப் பரிசேயர்கள், “கிறிஸ்து தாவீதின் குமாரன்.” என்றனர். பின் இயேசு பரிசேயர்களிடம் கூறினார், “பின் எதற்காக தாவீது அவரை ‘ஆண்டவரே’ என்றழைத்தார்? தாவீது பரிசுத்த ஆவியின் வல்லமையாலே பேசினார். தாவீது சொன்னது இதுவே: “‘கர்த்தர் (தேவன்) எனது ஆண்டவரிடம் (கிறிஸ்து) கூறினார்: எனது வலது பக்கத்தின் அருகில் உட்காரும்; உம் எதிரிகளை உம் கட்டுக்குள் வைப்பேன்!’ தாவீது ‘ஆண்டவர்’ என கிறிஸ்துவை அழைக்கிறார். எனவே கிறிஸ்து எப்படி தாவீதின் குமாரனாக முடியும்?” என்று கேட்டார் இயேசு. பரிசேயர்கள் ஒருவராலும் இயேசுவின் கேள்விகளுக்குப் பதில் கூற முடியவில்லை. அந்த நாளிலிருந்து இயேசுவை ஏமாற்றி கேள்வி கேட்க முயற்சி செய்யும் துணிவு யாருக்கும் வரவில்லை.