மத்தேயு 23:1-39
மத்தேயு 23:1-39 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தையும் தமது சீடரையும் பார்த்துச் சொன்னதாவது: “மோசேயின் சட்ட ஆசிரியர்களும் பரிசேயரும் மோசேயின் இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆகவே நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்கள் உங்களுக்குச் சொல்லும் ஒவ்வொன்றையும் செய்யுங்கள். ஆனால் அவர்கள் செய்வதை நீங்கள் செய்யவேண்டாம். ஏனெனில் அவர்கள் தாங்கள் பிரசங்கிப்பதைத் தாங்களே செய்வதில்லை. அவர்கள் பாரமான சுமைகளைக் கட்டி மக்களின் தோள்கள்மேல் வைக்கிறார்கள். ஆனால் அவர்களோ, அவற்றை நகர்த்துவதற்குத் தங்களது ஒரு விரலைக்கூட நீட்டவும் மனதற்றவர்களாக இருக்கிறார்கள். “மோசேயின் சட்ட ஆசிரியர்களும் பரிசேயர்களும் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டுமென்றே செய்யப்படுகின்றன: வேதவசனம் பொறித்த இடைப்பட்டிகளை அகலமாக்கி, தங்கள் உடைகளின் தொங்கல்களை நீளமாக்குகிறார்கள்; அவர்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள். சந்தைவெளிகளில் வாழ்த்துக்களைப் பெறவும், மக்கள் தங்களை ‘போதகர்’ என்று அழைப்பதையும் விரும்புகிறார்கள். “நீங்களோ ‘போதகர்’ என்று அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு ஒரு போதகர் மட்டுமே இருக்கிறார். நீங்கள் எல்லோரும் சகோதரராய் இருக்கிறீர்கள். பூமியிலுள்ள யாரையும் ‘பிதா’ என்று அழைக்காதிருங்கள். ஏனெனில், உங்களுக்கு ஒரு பிதாவே இருக்கிறார், அவர் பரலோகத்தில் இருக்கிறார். நீங்கள் ‘குருக்கள்’ என்றும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு ஒரு குருவே இருக்கிறார், அவர் கிறிஸ்துவே. உங்களில் பெரியவர், உங்களுக்குப் பணிசெய்கிறவராய் இருக்கவேண்டும். ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் பரலோக அரசின் கதவுகளை மனிதரின் முகத்திலடித்தாற்போல் மூடிவிடுகிறீர்கள். நீங்களும் அதற்குள் செல்வதில்லை. செல்ல விரும்புகிறவர்களையும் அனுமதிக்காமல் இருக்கிறீர்கள். மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, வேஷக்காரர்களாகிய உங்களுக்கு ஐயோ, நீங்கள் விதவைகளின் வீடுகளை அபகரிக்கிறீர்கள். ஆனால் மக்கள் காணவேண்டும் என்பதற்காக நீண்டநேரம் மன்றாடுகிறீர்கள். இதனால் நீங்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படுவீர்கள். “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்திற்கு மாற்றுவதற்கு தரையிலும் கடலிலும் தூரப்பயணம் செய்கிறீர்கள். ஆனால் அவன் உங்கள் மார்க்கத்திற்கு மாறிய பின்போ, உங்களைப் பார்க்கிலும் அவனை இருமடங்காக நரகத்தின் பிள்ளையாக்குகிறீர்கள். “குருடான வழிகாட்டிகளே, உங்களுக்கு ஐயோ! ‘யாராவது ஆலயத்தின்பேரில் சத்தியம் பண்ணினால், அது பரவாயில்லை என்கிறீர்கள்; ஆனால் யாராவது ஆலயத்திலுள்ள தங்கத்தின்மேல் சத்தியம் பண்ணினால், அதைச் செலுத்தியே தீரவேண்டும்’ என்கிறீர்கள். குருடான முட்டாள்களே! தங்கமா, தங்கத்தைப் புனிதமாக்கும் ஆலயமா, எது பெரியது? மேலும் நீங்கள், ‘யாராவது பலிபீடத்தைக் கொண்டு சத்தியம் செய்தால், அது பரவாயில்லை; ஆனால் யாராவது பலிபீடத்தின் மேலுள்ள காணிக்கையின் பேரில் சத்தியம் பண்ணினால், அவர்கள் அதைச் செலுத்தியே ஆகவேண்டும்’ என்கிறீர்கள். குருட்டு மனிதரே! காணிக்கையா, காணிக்கையைப் புனிதமாக்கும் பலிபீடமா, எது பெரியது? எனவே பலிபீடத்தைக் கொண்டு சத்தியம் செய்பவர்கள் பலிபீடத்தைக் கொண்டு மட்டுமல்ல, அதன்மீதுள்ள எல்லாவற்றையும் கொண்டு சத்தியம் செய்கிறார்கள். ஆலயத்தின்பேரில் சத்தியம் செய்பவர்கள் ஆலயத்தைக் கொண்டு மட்டுமல்ல, ஆலயத்தில் குடிகொண்டிருப்பவரைக் கொண்டே சத்தியம் செய்கிறார்கள். வானத்தின் பேரில் சத்தியம் செய்கிறவர்கள் இறைவனின் அரியணையைக் கொண்டும், அதில் அமர்ந்திருக்கும் அவரைக் கொண்டும் சத்தியம் செய்கிறார்கள். “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினா, வெந்தயம், சீரகம் ஆகிய வாசனைச் பொருட்களிலிருந்து பத்திலொன்றை காணிக்கையாகக் கொடுக்கிறீர்கள். ஆனால் மோசேயின் சட்டத்தின் மிக முக்கிய காரியங்களான நீதி, இரக்கம், உண்மைத்தனம் ஆகியவற்றை உதாசீனம் செய்துவிட்டீர்கள். உண்மையாய் இவற்றை நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் அவற்றையும் கைவிடாதிருக்க வேண்டும். குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் கொசுவை வடிகட்டி எடுக்கிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்குகிறீர்கள். “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, உணவு பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்கிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ, நீங்கள் உங்கள் கொள்ளையினாலும் சுய ஆசைகளினாலும் நிரம்பியிருக்கிறீர்கள். குருடான பரிசேயரே! முதலில் உணவு பாத்திரங்களின் உட்புறத்தைச் சுத்தம் செய்யுங்கள். அப்பொழுது அவற்றின் வெளிப்புறமும் சுத்தமாயிருக்கும். “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போல் இருக்கிறீர்கள், அவை வெளியே அழகாகக் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் உட்புறமோ இறந்தவர்களின் எலும்புகளினாலும், அசுத்தமான எல்லாவற்றினாலும் நிறைந்திருக்கின்றன. அதுபோலவே, வெளித்தோற்றத்திற்கு மனிதர் பார்வையில் நீங்கள் நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள். ஆனால் உள்ளத்திலோ கபடத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். “மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, வேஷக்காரர்களாகிய உங்களுக்கு ஐயோ! நீங்கள் இறைவாக்கினர்களுக்காக, கல்லறைகளைக் கட்டி நீதிமான்களின் நினைவுச் சின்னங்களை அலங்கரிக்கிறீர்கள். ‘எங்கள் முற்பிதாக்களின் காலத்தில் நாங்கள் வாழ்ந்திருந்தால், இறைவாக்கினரின் இரத்தத்தைச் சிந்துவதற்கு, நாங்கள் அவர்களுடன் பங்காளிகளாய் இருந்திருக்கமாட்டோம்’ என்றும் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் இறைவாக்கினரைக் கொலைசெய்தவர்களின் தலைமுறையினர் என்பதற்கு நீங்களே சாட்சியாயிருக்கிறீர்கள். ஆகவே, நீங்களும் உங்கள் முற்பிதாக்கள் தொடங்கிய பாவத்தைச் செய்து முடியுங்கள். “பாம்புகளே! விரியன் பாம்புக் குட்டிகளே! நரகத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் எப்படித் தப்புவீர்கள்? ஆகவே நான் இறைவாக்கினரையும், ஞானமுள்ளவர்களையும், ஆசிரியர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். அவர்களில் சிலரை நீங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்வீர்கள்; மற்றவர்களை உங்கள் ஜெப ஆலயங்களில் சவுக்கினால் அடித்து, பட்டணங்கள்தோறும் துரத்திச்சென்று துன்பப்படுத்துவீர்கள். அப்படியே பூமியில் சிந்தப்பட்ட நீதிமான்கள் எல்லோரின் இரத்தப்பழியும் உங்கள்மேல் வரும்; நீதிமானான ஆபேலின் இரத்தம் தொடங்கி, ஆலயத்தின் பரிசுத்த இடத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நீங்கள் கொலைசெய்த, பரக்கியாவின் மகன் சகரியாவின் இரத்தம் வரைக்கும், எல்லாம் உங்கள்மேல் வரும். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இவை எல்லாம் இந்தத் தலைமுறையினர்மேல் வந்தே தீரும். “எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொலைசெய்து உன்னிடம் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிற பட்டணமே, ஒரு கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழ் கூட்டிச் சேர்ப்பதுபோல் எத்தனையோமுறை நானும் உன் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள ஏக்கமாய் இருந்தேன், உனக்கோ விருப்பமில்லாமல் போயிற்றே. இதோ பார், உன் வீடு உனக்குப் பாழாய் விடப்பட்டிருக்கிறது. நான் உனக்குச் சொல்கிறேன், ‘கர்த்தருடைய பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்று நீ சொல்லும்வரைக்கும், இனிமேல் என்னைக் காணமாட்டாய்” என்றார்.
மத்தேயு 23:1-39 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு இயேசு மக்களையும் தம்முடைய சீடர்களையும் பார்த்து: வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் மோசேயினுடைய இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகவே, நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற எல்லாவற்றையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்களுடைய செய்கையின்படி செய்யாமலிருங்கள்; ஏனென்றால், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். சுமக்கமுடியாத பாரமான சுமைகளைக் கட்டி மனிதர்களுடைய தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். தங்களுடைய செயல்களையெல்லாம் மனிதர்கள் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்களுடைய காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்களுடைய ஆடைகளின் தொங்கல்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், சந்தைவெளிகளில் வணக்கங்களையும், மனிதர்களால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார், நீங்கள் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்களுடைய பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார். நீங்கள் போதகர் என்றும் அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார். உங்களில் பெரியவனாக இருக்கிறவன் உங்களுக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, மனிதர்கள் பிரவேசிக்கமுடியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களை பிரவேசிக்கவிடுகிறதுமில்லை. மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்செய்து, விதவைகளின் வீடுகளை அழித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக தண்டனையை அடைவீர்கள். மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள். குருடர்களான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாவது தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்செய்தால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? மேலும், எவனாவது பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்செய்தால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? ஆகவே, பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்செய்கிறான். தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான். பரலோகத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான். மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினாவிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாமலிருக்கவேண்டுமே. குருடர்களான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாக இருக்கிறீர்கள். மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாக இருக்கிறீர்கள், அவைகள் வெளியே அலங்காரமாகக் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் எல்லா அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் வெளியே மனிதர்களுக்கு நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளை அலங்கரித்து: எங்களுடைய பிதாக்களின் நாட்களில் இருந்திருந்தோமானால், அவர்களோடு நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். ஆகவே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள். நீங்களும் உங்களுடைய பிதாக்களின் அக்கிரமத்தின் அளவை நிறைவாக்குங்கள். சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? ஆகவே, இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபண்டிதர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்களுடைய ஜெப ஆலயங்களில் சாட்டையினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்; நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள். இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச்சேர்த்துக்கொள்ளுவதுபோல நான் எத்தனைமுறையோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமல்போனது. இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் போற்றப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும்வரை, இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 23:1-39 பரிசுத்த பைபிள் (TAERV)
பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார். “வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவர்கள் செய்யச் சொல்கிறவற்றை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், அவர்களின் வாழ்க்கை நீங்கள் பின்பற்றத் தக்கதல்ல. அவர்கள் உங்களுக்கு உபதேசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதன்படி நடப்பதில்லை. மக்கள் பின்பற்றி நடப்பதற்குக் கடினமான சட்டங்களை ஏற்படுத்துகிறார்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றுமாறு மிகவும் வற்புறுத்துகின்றனர். ஆனால் அச்சட்டங்களில் யாதொன்றையும் தாங்கள் பின்பற்ற முயலுவதில்லை. “அவர்கள் நற்செயல்களைச் செய்வதற்கான ஒரே காரணம் மற்றவர்கள் அவற்றைக் காண வேண்டும் என்பதே. அவர்கள் வேத வாக்கியங்களில் வாசகங்களைக் கொண்ட தோல் பைகளை அணிந்து செல்கிறார்கள். அவற்றை மேலும், மேலும் பெரிதாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். மேலும் மக்கள் காணும்படியாகப் பிரார்த்தனைக்கான சிறப்பு உடையை மிக நீண்டதாக அணிகிறார்கள். அத்தகைய பரிசேயர்களும் வேதபாரகர்களும் விருந்துகளின்போது முக்கியமான இருக்கைகளில் அமர விரும்புகிறார்கள். மேலும் ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கைகளில் அமர விரும்புகிறார்கள். கடைவீதிகளில் மக்கள் தங்களுக்கு மரியாதை செய்யவும் மக்கள் தங்களை ‘போதகரே’ என அழைக்கவும் விரும்புகிறார்கள். “ஆனால் நீங்கள் ‘போதகர்’ என அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள். உங்களுக்கு ஒரு போதகரே உண்டு. மேலும், பூமியில் உள்ள எவரையும் ‘தந்தையே’ என அழைக்காதீர்கள். உங்களுக்கு ஒருவரே தந்தை. அவர் பரலோகத்தில் உள்ளார். நீங்கள் ‘எஜமானே’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால், உங்கள் எஜமான் ஒருவர் மட்டுமே. அவர் தான் கிறிஸ்து. உங்களுக்கு வேலைக்காரனைப்போல ஊழியம் செய்கிறவனே உங்களில் பெரியவன். தன்னை மற்றவரிலும் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். “வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடுகாலம். நீங்கள் மாயமானவர்கள். பரலோக இராஜ்யத்தின் நுழைவாயிலை நீங்கள் அடைக்கிறீர்கள். நீங்களும் நுழைவதில்லை, நுழைய முயற்சிக்கும் மற்றவர்களையும் தடுக்கிறீர்கள். “வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். கடல் கடந்தும் பல நாடுகளில் பயணம் செய்தும் உங்களுக்கு ஒரு சீஷனைத் தேடுகிறீர்கள். நீங்கள் அவனைக் கண்டடைந்து அவனை உங்களை விட மோசமானவனாக மாற்றுகிறீர்கள். மேலும் நரகத்திற்கு உரிய நீங்கள் மிகவும் பொல்லாதவர்களே. “வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். மற்றவர்களை வழி நடத்தும் நீங்கள் குருடர்கள். நீங்கள் கூறுகிறீர்கள், ‘ஒருவன் தேவாலயத்தின் பெயரால் சத்தியம் செய்தால் அதனால் ஒன்றுமில்லை ஆனால், தேவாலயத்தில் உள்ள தங்கத்தின் பெயராலே சத்தியம் செய்தால், அவன் அதைக் காப்பாற்ற வேண்டும்!’ நீங்கள் அறிவற்ற குருடர்கள். தங்கம் பெரிதா தேவாலயம் பெரிதா? தங்கத்தைப் பரிசுத்தமாக்குவது தேவாலயமே! எனவே, தேவாலயமே பெரியது. “மேலும், நீங்கள் கூறுகிறீர்கள், ‘ஒருவன் தேவாலயத்திலுள்ள பலிபீடத்தின் பெயரால் சத்தியம் செய்தால் அதனால் ஒன்றுமில்லை. ஆனால், ஒருவன் பலிபீடத்திலுள்ள பலிப்பொருளின் பெயரால் சத்தியம் செய்தால், அவன் அதைக் காப்பாற்ற வேண்டும்!’ நீங்கள் குருடர்கள், உங்களுக்கு எதுவும் புரிவதில்லை. படைத்த பொருள் பெரிதா? பலிபீடம் பெரிதா? படைத்த பொருளை பரிசுத்தப்படுத்துவது பலிபீடமே. ஆகவே பலிபீடமே பெரியது. பலிபீடத்தின் பெயராலே சத்தியம் செய்கிறவன் உண்மையில் பலிபீடத்தையும் அதில் உள்ள அனைத்துப் பொருளையும் பயன்படுத்துகிறான். மேலும் தேவாலயத்தின் பெயரால் சத்தியம் செய்கிறவன், உண்மையில் தேவாலயத்தையும் அதில் வாசம் செய்பவரையும் பயன்படுத்துகிறான். பரலோகத்தின் பெயரால் சத்தியம் செய்கிறவன் தேவனின் அரியாசனத்தின் பெயராலும் அதில் அமர்கிறவரின் பெயராலும் சத்தியம் செய்கிறான். “வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். உங்கள் உடமைகள் அனைத்திலும் பத்தில் ஒரு பாகம் கர்த்தருக்குக் காணிக்கையாக்குகிறீர்கள். புதினா, வெந்தயம் மற்றும் சீரகத்திலும் கூட. ஆனால் கட்டளைகளில் மிக முக்கியமானவற்றை நீங்கள் பின்பற்றுவதில்லை. அதாவது, நியாயமாகவும் கருணையுடனும் நேர்மையாகவும் விளங்கவேண்டும் என்பதை விட்டுவிடுகிறீர்கள். இவைகளே நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல்கள். மேலும் மற்ற நற்செயல்களையும் தொடர்ந்து செய்து வர வேண்டும். நீங்கள் மற்றவர்களை வழிநடத்துகிறீர்கள். ஆனால், நீங்களோ குருடர்கள். பானத்திலிருந்து ஒரு சிறு ஈயை எடுத்து எறிந்துவிட்டு, ஒட்டகத்தை விழுங்குகிறவனைப் போன்றவர்கள் நீங்கள். “வேதபாரகர்களே! பரிசேயர்களே! நீங்கள் மாயமானவர்கள். உங்கள் கோப்பைகளையும் பாத்திரங்களையும் வெளிப்புறம் நன்கு கழுவுகிறீர்கள். (சுத்தம் செய்கிறீர்கள்) ஆனால் அவற்றின் உள்ளே நீங்கள் மற்றவர்களை ஏமாற்றி உங்கள் விருப்பத்தின்படி சேர்த்த பொருட்களால் நிரம்பியுள்ளது. பரிசேயர்களே, நீங்கள் குருடர்கள். முதலில் கோப்பையின் உள்ளே சுத்தம் செய்யுங்கள், பின், கோப்பையின் வெளிப்புறம் உண்மையிலேயே சுத்தமாகும். “வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போன்றவர்கள். அக்கல்லறைகளின் வெளிப்புறம் நன்றாக இருக்கிறது. ஆனால், உள்ளே முழுவதும், இறந்தவர்களின் எலும்புகளும், அசுத்தங்கள் பலவும் இருக்கின்றன. அதே போலத்தான் நீங்களும், உங்களைக் காண்கிறவர்கள் உங்களை நல்லவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உள்ளுக்குள் நீங்கள் (முழுக்கவும்) மாயமும் தீமையும் நிறைந்தவர்கள். “வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மிகவும் மாயமானவர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள். நல்லவர்களின் கல்லறைகளுக்கு பெருமை சேர்க்கிறீர்கள். மேலும் நீங்கள், ‘நாங்கள் எங்கள் முன்னோர்களின் காலத்தில் வாழ்ந்திருந்தால், இத்தீர்க்கதரிசிகளைக் கொல்ல அவர்களுக்குத் துணை போயிருக்க மாட்டோம்’ என்று கூறுகிறீர்கள். அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்களின் வழிவந்தவர்கள் நீங்கள் என்பதை நிரூபணம் செய்கிறீர்கள். உங்கள் முன்னோர்கள் தொடங்கி வைத்த பாவத்தை நீங்கள் முடித்து வைப்பீர்கள். “நீங்கள் பாம்புகள். கொடிய விஷம் கொண்ட பாம்புக் கூட்டத்தில் தோன்றியவர்கள் நீங்கள்! தேவனிடமிருந்து நீங்கள் தப்ப முடியாது. நீங்கள் அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு நரகத்திற்குச் செல்வீர்கள். ஆகவே, நான் உங்களுக்கு இதைச் சொல்லிக் கொள்கிறேன். தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் போதகர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். நீங்கள் அவர்களில் சிலரைச் சாகடிப்பீர்கள். சிலரைச் சிலுவையில் அறைவீர்கள். சிலரை ஜெப ஆலயங்களில் கட்டிவைத்து அடிப்பீர்கள். அவர்களை நகருக்கு நகர் துரத்திச் செல்வீர்கள். “ஆகவே, நேர்மையான வாழ்வை நடத்திய சிலரைக் கொன்ற குற்றத்திற்கு நீங்கள் ஆளாவீர்கள். நல்லவனான ஆபேல் முதல் சகரியா ஆகியோரைக் கொன்ற பழிக்கும் உட்படுவீர்கள். ஆபேல் முதல் பரகியாவின் குமாரனும் ஆலயத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் கொல்லப்பட்டவனான சகரியா வரையில் வாழ்ந்த நல்லவர்களைக் கொன்ற பழிக்கும் ஆளாவீர்கள். நான் உண்மையைச் சொல்கிறேன், இவை அனைத்தும் தற்பொழுது வாழும் உங்களுக்கு உண்டாகும். “எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொல்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பியவர்களைக் கற்களால் அடித்துக் கொல்கிறாய். பற்பலமுறை உன் மக்களுக்கு உதவ நான் விரும்பினேன். ஒரு (தாய்க்) கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைகளுக்குக் கீழே சேர்த்துக் கொள்வதைப்போல நானும் உன் மக்களை ஒன்று சேர்க்க நினைத்தேன். ஆனால், நீயோ அதைச் செய்ய என்னை விடவில்லை. இப்பொழுதோ, உன் வீடு முற்றிலும் வெறுமையடையும். நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், ‘கர்த்தரின் பெயராலே வருகிறவருக்கு தேவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்! அவர் வரவு நல்வரவு!’ என்று நீ கூறுகிறவரைக்கும் நீ என்னைக் காணமாட்டாய்” என்று இயேசு கூறினார்.
மத்தேயு 23:1-39 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? மேலும், எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள். நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள். சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்? ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்; நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள். இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.