மத்தேயு 27:57-66
மத்தேயு 27:57-66 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மாலை வேளையானபோது, அரிமத்தியா பட்டணத்திலிருந்து யோசேப்பு என்னும் பெயருடைய ஒரு செல்வந்தன் வந்தான். இவனும் இயேசுவுக்கு சீடனாயிருந்தான். அவன் பிலாத்துவினிடம் போய், இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான். பிலாத்துவும் அதை அவனுக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டான். யோசேப்பு அந்த உடலை எடுத்து, சுத்தமான மென்பட்டுத் துணியினால் சுற்றி, அதைத் தனக்குச் சொந்தமான கற்பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் வைத்தான்; பின்பு அவன் கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனான். அப்பொழுது மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தார்கள். மறுநாள் பஸ்கா என்ற பண்டிகையின் முதல் நாளாகிய ஆயத்த நாளிலே, தலைமை ஆசாரியர்களும், பரிசேயர்களும் பிலாத்துவிடம் போனார்கள். அவர்கள் அவனிடம், “ஐயா அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, ‘மூன்று நாட்களுக்குபின் நான் உயிரோடு எழுந்திருப்பேன்’ என்று சொன்னது எங்களுக்கு நினைவிருக்கிறது. ஆகவே அந்தக் கல்லறை மூன்றாம் நாள்வரைக்கும் பத்திரமாய் பாதுகாக்கப்படும்படி உத்தரவு கொடுக்கவேண்டும். இல்லையெனில் அவனது சீடர்கள் ஒருவேளை வந்து அந்த உடலைத் திருடிச் சென்றுவிட்டு, இறந்தோரில் இருந்து உயிரோடு எழுந்துவிட்டான் என்று மக்களுக்குச் சொல்லுவார்கள். அப்படி நடந்தால் முந்தின ஏமாற்று வேலையைவிட பிந்தினது மோசமானதாயிருக்கும்” என்றார்கள். அதற்குப் பிலாத்து அவர்களிடம், “காவல் வீரர்களைக் கூட்டிக்கொண்டுபோய் உங்களுக்குத் தெரிந்தபடி கல்லறையைப் பத்திரமாய்க் காவல் செய்யுங்கள்” என்றான். எனவே அவர்கள் போய், கல்லறை வாசற்கல்லின்மேல் முத்திரையிட்டு, காவலாளிகளை வைத்து பத்திரமாய் கல்லறையைக் காவல் செய்தார்கள்.
மத்தேயு 27:57-66 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மாலைநேரமானபோது, இயேசுவிற்குச் சீடனும் செல்வந்தனுமாகவும் இருந்த யோசேப்பு என்னும் பேருடைய அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனிதன் வந்து, பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான். யோசேப்பு அந்த சரீரத்தை எடுத்து, தூய்மையான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டி வைத்துப்போனான். அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள். ஆயத்தநாளுக்கு அடுத்த மறுநாளிலே பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: ஆண்டவனே, அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. ஆகவே, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் தந்திரமாகக் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தானென்று மக்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின வஞ்சனையைவிட பிந்தின வஞ்சனை கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாட்கள்வரை கல்லறையைப் பாதுகாக்கும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் வீரர்கள் உண்டே; போய், உங்களால் முடிந்தவரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றான். அவர்கள்போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பாதுகாத்தார்கள்.
மத்தேயு 27:57-66 பரிசுத்த பைபிள் (TAERV)
அன்று மாலை அரிமத்தியாவிலிருந்து இயேசுவின் சீஷனும், செல்வந்தனும், அரிமத்தியா ஊரானுமாகிய யோசேப்பு எருசலேமுக்கு வந்தான் யோசேப்பு பிலாத்துவிடம் சென்று இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். பிலாத்து இயேசுவின் சரீரத்தை யோசேப்பிடம் கொடுக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான். பின்பு யோசேப்பு இயேசுவின் சரீரத்தைப் பெற்றுக்கொண்டு அதைப் புதிய மென்மையான துணியில் சுற்றினான். இயேசுவின் சரீரத்தை ஒரு பாறையில் தோண்டிய புதிய கல்லறையில் யோசேப்பு அடக்கம் செய்தான். ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு கல்லறை வாயிலை மூடினான். இவற்றைச் செய்தபின் யோசேப்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். மகதலேனா மரியாளும், மரியாள் என்னும் பெயர் கொண்ட மற்றொரு பெண்ணும் கல்லறைக்கு அருகில் அமர்ந்திருந்தனர். ஆயத்தநாளுக்கு மறுநாள், தலைமை ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவிடம் சென்று, “ஐயா, தான் உயிருடன் இருந்தபொழுது அப்பொய்யன், ‘நான் மூன்று நாட்களுக்குப் பின் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன்’ என்று கூறினான். ஆகவே மூன்று நாட்களாகிறவரையிலும் கல்லறையை நன்கு காவல் காக்க உத்தரவிடுங்கள். அவனது சீஷர்கள் வந்து சரீரத்தை திருட முயற்சிக்கலாம். பின், மக்களிடம் சென்று அவன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டதாகக் கூறக்கூடும். அவனைப் பற்றி அவர்கள் முன்னர் கூறிய பொய்களைக் காட்டிலும் இது அதிக மோசமானதாக இருக்கும்” என்றார்கள். அதற்கு பிலாத்து, “சில போர் வீரர்களை அழைத்துச் சென்று உங்களால் முடிந்த அளவு கல்லறையைக் காவல் செய்யுங்கள்” என்று கூறினான். ஆகவே அவர்கள் அனைவரும் சென்று சரீரத்தை யாரும் திருடாதவாறு பாதுகாத்தார்கள். கல்லறையை மூடிய கல்லுக்கு முத்திரை வைத்தும், போர் வீரர்களைக் காவலுக்கு வைத்தும் இதைச் செய்தார்கள்.
மத்தேயு 27:57-66 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து, பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான். யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான். அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள். ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதானஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான். அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.