மத்தேயு 28:1-10
மத்தேயு 28:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள். அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்தமழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள். தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரை பணிந்துகொண்டார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப்போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
மத்தேயு 28:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஓய்வுநாளின் மறுநாளான வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கும்படி சென்றார்கள். அப்பொழுது திடீரென ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. கர்த்தரின் தூதன் ஒருவன் பரலோகத்திலிருந்து இறங்கி கல்லறைக்குப் போய், அதன் வாசற்கல்லைப் புரட்டித் தள்ளி, அதன்மேல் உட்கார்ந்திருந்தான்: இதனால் பயங்கரமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அவனுடைய தோற்றம் மின்னலைப் போல இருந்தது. அவனுடைய உடைகள் உறைபனியைப்போல் வெண்மையாய் இருந்தன. காவல் செய்த அந்தக் காவலாளர்கள் மிகவும் பயமடைந்து நடுங்கிச் செத்தவர்கள் போலானார்கள். அப்பொழுது இறைத்தூதன் அந்தப் பெண்களிடம், “பயப்படவேண்டாம். நீங்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னதுபோலவே, அவர் உயிருடன் எழுந்துவிட்டார். அவர் கிடத்தப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள்” என்றான். “நீங்கள் விரைவாகப் போய், அவருடைய சீடர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘அவர் மரணத்திலிருந்து எழுந்துவிட்டார், உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போகிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள்.’ இதோ நான் உங்களுக்கு அறிவித்தேன்” என்றும் சொன்னான். எனவே, அந்தப் பெண்கள் பயமடைந்தவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் கல்லறையைவிட்டு விரைந்து, நடந்ததை சீடர்களிடம் சொல்லும்படி ஓடினார்கள். ஆனால் திடீரென இயேசு அவர்களைச் சந்தித்து வாழ்த்தினார். அவர்களும் அவரிடமாய் வந்து, அவருடைய பாதங்களைப் பற்றிப்பிடித்து, அவரை வழிபட்டார்கள். இயேசு அவர்களிடம், “பயப்படவேண்டாம். நீங்கள் போய், என் சகோதரரிடம் கலிலேயாவுக்குப் போகும்படி சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார்.
மத்தேயு 28:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் பொழுதுவிடிந்தபோது, மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். அவனுடைய தோற்றம் மின்னல்போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள். தூதன் அந்தப் பெண்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாமலிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்த்தரை வைத்த இடத்தை வந்துபாருங்கள்; சீக்கிரமாகப்போய், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்று அவருடைய சீடர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையைவிட்டுச் சீக்கிரமாகப் புறப்பட்டு, அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். அவர்கள் அவருடைய சீடர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாமலிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர்கள் கலிலேயாவிற்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
மத்தேயு 28:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
ஓய்வு நாளுக்குப் பிறகு மறுநாள் வாரத்தின் முதல் நாள் அன்று அதிகாலை மகதலேனா மரியாளும், மரியாள் எனப் பெயர் கொண்ட மற்றப் பெண்ணும் இயேசுவின் கல்லறையைக் காணச் சென்றார்கள். அப்பொழுது மிகத் தீவிரமான பூமி அதிர்ச்சி உண்டானது. வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு தூதன் கல்லறையை மூடியிருந்த பாறாங்கல்லை உருட்டிக் கீழே தள்ளினான். பின் அத்தூதன் அப்பாறாங்கல்லின் மீது அமர்ந்தான். மின்னலைப் போலப் பிரகாசித்த அந்தத் தூதனின் ஆடைகள் பனி போல வெண்மையாயிருந்தன. கல்லறைக்குக் காவலிருந்த போர்வீரர்கள் தூதனைக் கண்டு மிகவும் பயந்துபோனார்கள். பயத்தினால் நடுங்கிய போர்வீரர்கள் பிணத்தைப்போல பேச்சு மூச்சற்றவர்களானார்கள். தூதன் பெண்களைப் பார்த்து, “பயப்படாதீர்கள். சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசுவை நீங்கள் தேடுகின்றீர்கள் என்பதை நானறிவேன். ஆனால் இயேசு இங்கே இல்லை. அவர் சொன்னது போலவே மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார். அவரது சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்தைப் பாருங்கள். உடனே அவரது சீஷர்களிடம் விரைந்து சென்று சொல்லுங்கள். ‘இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார். அவர் கலிலேயாவிற்குச் சென்றுகொண்டிருக்கிறார். அவர் உங்களுக்கு முன்னரே அங்கிருப்பார்.’ அங்கே நீங்கள் இயேசுவைக் காணலாம். இதோ நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்” என்று கூறினான். ஆகவே, அப்பெண்கள் விரைந்து கல்லறையை விட்டுப் புறப்பட்டார்கள். அவர்கள் பயந்துபோனார்கள். அதே சமயம் மகிழ்ச்சியடைந்தார்கள். நடந்ததை சீஷர்களிடம் சொல்ல அவர்கள் ஓடினார்கள். அப்பொழுது இயேசு அவர்களின் முன்பு வந்து நின்றார். இயேசு அவர்களைப் பார்த்து, “வாழ்க” என்றார். இயேசுவின் அருகில் சென்ற பெண்கள் அவரது கால்களைத் தொட்டு வணங்கினார்கள். பின்னர் இயேசு அப்பெண்களிடம், “பயப்படாதீர்கள். என் சகோதரர்களிடம் (சீஷர்களிடம்) சென்று கலிலேயாவிற்கு வரச்சொல்லுங்கள். அவர்கள் என்னை அங்கே காண்பார்கள்” என்றார்.