மத்தேயு 6:1-18
மத்தேயு 6:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
மத்தேயு 6:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“நீங்கள் உங்கள் நற்செயல்களை மனிதர் முன்பாக அவர்கள் காணவேண்டுமென்று செய்யாதபடி கவனமாய் இருங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவிடமிருந்து உங்களுக்கு வெகுமதி கிடைக்காது. “ஆகவே நீங்கள் ஏழைகளுக்கு கொடுக்கும்போது, தம்பட்டம் அடித்து அறிவிக்க வேண்டாம். மனிதர்களால் மதிப்பைப் பெறும்படி, வேஷக்காரர்கள் ஜெப ஆலயங்களிலும், வீதிகளிலும் செய்வதுபோல் செய்யவேண்டாம். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை முழுமையாய் பெற்றுவிட்டார்கள். ஆனால் நீங்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது, உங்கள் வலதுகை செய்வதை உங்கள் இடதுகை அறியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் கொடுப்பது இரகசியமாய் இருக்கும். நீங்கள் இரகசியமாய் செய்வதைக் காண்கிற உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதி அளிப்பார். “நீங்கள் மன்றாடும்போது, வேஷக்காரர்களைப்போல் இருக்கவேண்டாம், ஏனெனில் அவர்கள் மனிதர் காணும்படி ஜெப ஆலயங்களிலும், வீதிகளின் சந்திகளிலும் நின்று மன்றாடுவதை விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாய்ப் பெற்றுவிட்டார்கள். ஆனால் நீங்கள் மன்றாடும்போது, உங்கள் அறைக்குள் போய், கதவை மூடி கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவிடம் மன்றாடுங்கள். அப்பொழுது மறைவில் செய்யப்படுவதைக் காணும் உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதியளிப்பார். நீங்கள் மன்றாடும்போது, இறைவனை அறியாதவர்களைப்போல் வீண் வார்த்தைகளைப் பேசாதிருங்கள், ஏனெனில் தங்களின் அதிக வார்த்தைகளின் நிமித்தம், தங்கள் மன்றாட்டு கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போலிருக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் பிதா அறிந்திருக்கிறார். “ஆகவே, நீங்கள் மன்றாட வேண்டிய விதம் இதுவே: “ ‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உமது பெயர் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படப்பண்ணாமல், எங்களைத் தீமையிலிருந்து இரட்சித்துக்கொள்ளும். இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்.’ ஏனெனில், மனிதர் உங்களுக்கெதிராகக் குற்றம் செய்யும்போது நீங்கள் அவர்களை மன்னித்தால், உங்கள் பரலோகப் பிதாவும் உங்களை மன்னிப்பார். ஆனால் மனிதருடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாவிட்டால், உங்கள் பிதாவும் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிக்கமாட்டார். “நீங்கள் உபவாசிக்கும்போது, வேஷக்காரர் செய்வதுபோல் வாடிய முகத்துடன் காணப்பட வேண்டாம். ஏனெனில் அவர்கள் தாங்கள் உபவாசிப்பதை மனிதர்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள் தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாகப் பெற்றுவிட்டார்கள் என்று நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனால் நீங்கள் உபவாசிக்கும்போது, உங்கள் தலைக்கு எண்ணெய் வைத்து, உங்கள் முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் உபவாசிப்பது மனிதருக்கு வெளிப்படையாகத் தெரியாதிருக்கும். ஆனால் கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவுக்கு மட்டும் தெரிந்திருக்கும்; மறைவில் செய்பவற்றை காண்கிற உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதி அளிப்பார்.
மத்தேயு 6:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“மனிதர்கள் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நல்ல செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. ஆகவே, நீ தர்மம் செய்யும்போது, மனிதர்களால் புகழப்படுவதற்கு, மாயக்காரர்கள் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதாதே; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்தார்களென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ தர்மம் செய்யும்போது, உன் தர்மம் மறைமுகமாக இருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா தாமே, உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார். அன்றியும் நீ ஜெபம்செய்யும்போது மாயக்காரர்களைப்போல இருக்கவேண்டாம்; மனிதர்கள் பார்க்கும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் முற்சந்திகளிலும் நின்று ஜெபம்செய்ய விரும்புகிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்செய்யும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, மறைவிடத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் செய்; அப்பொழுது மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாக உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்செய்யும்போது, தேவனை அறியாதவர்களைப்போல வீண்வார்த்தைகளைத் திரும்பத்திரும்ப பேசாதிருங்கள்; அவர்கள், அதிக வார்த்தைகளினால் தங்களுடைய ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாமலிருங்கள்; நீங்கள், உங்களுடைய பிதாவை நோக்கி வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு என்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜெபம் செய்யவேண்டிய விதமாவது: “பரலோகத்திலிருக்கிற எங்களுடைய பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய விருப்பம் பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுடைய எதிராளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்’ என்பதே. மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்களுடைய பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனிதர்களுடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காதிருந்தால், உங்களுடைய பிதா உங்களுடைய குற்றங்களையும் மன்னிக்காதிருப்பார். நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரர்களைப்போல முகவாடலாக இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனிதர்கள் பார்க்கும்படிக்கு, தங்களுடைய முகங்களை வாடச்செய்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, உன் உபவாசம் மனிதர்களுக்குக் காணப்படாமல், மறைவிடத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார்.
மத்தேயு 6:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)
“நீங்கள் நற்செயல்களைச் செய்யும்பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! மக்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது. “நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது, நீங்கள் உதவுவதை விளம்பரம் செய்யாதீர்கள். நல்லவர்களைப் போல நடிக்கும் மனிதர்களைப் போல் நீங்கள் செய்யாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் பிறருக்கு உதவுவதற்கு முன்னர் குழல் ஊதி அறிவிப்பார்கள். அவர்கள் யூத ஆலயங்களிலும் தெருக்களிலும் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். எனவே, நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது மிக இரகசியமாக உதவுங்கள். மற்றவர் எவரும் அறியாதவாறு உதவுங்கள். உங்கள் உதவி இரகசியமாகச் செய்யப்படவேண்டும். உங்கள் பிதாவாகிய தேவன் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். எனவே அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார். “நீங்கள் பிரார்த்தனை செய்யும்பொழுது, நல்லவர்களைப்போல நடிக்கும் தீயவர்களைப் போல் நடக்காதீர்கள். போலியான மனிதர்கள் ஜெப ஆலயங்களிலும் தெரு முனைகளிலும் நின்று உரத்த குரலில் பிராத்தனை செய்ய விரும்புகிறார்கள். தாம் பிரார்த்தனை செய்வதை மற்றவர்கள் காண அவர்கள் விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் ஏற்கெனவே அதற்குரிய பலனை அடைந்துவிட்டார்கள். நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது உங்கள் அறைக்குச் சென்று கதவை மூடிவிட வேண்டும். பின்னர், உங்கள் கண்களுக்குப் புலப்படாத உங்கள் பிதாவிடம் பிரார்த்தியுங்கள். இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர் உங்கள் தந்தை. அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார். “நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது, தேவனை அறியாதவர்களைப் போல நடந்து கொள்ளாதீர்கள். பொருளற்ற வார்த்தைகளை அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். அவ்வாறு பிரார்த்திக்காதீர்கள். பலவற்றையும் அவர்கள் சொல்வதனால் தேவன் அவர்களைக் கவனிப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களைப் போல இருக்காதீர்கள். உங்கள் பிதா நீங்கள் கேட்பதற்கு முன்னரே உங்களின் தேவைகளை அறிவார். நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது கீழ்க்கண்டவாறு பிரார்த்திக்க வேண்டும்: “‘பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே, உமது பெயர் என்றென்றும் புனிதமாயிருக்கப் பிரார்த்திக்கிறோம். உமது இராஜ்யம் வரவும் பரலோகத்தில் உள்ளது போலவே பூமியிலும் நீர் விரும்பியவை செய்யப்படவும் பிரார்த்திக்கிறோம். ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவையான உணவை எங்களுக்கு அளிப்பீராக. மற்றவர் செய்த தீமைகளை நாங்கள் மன்னித்தது போலவே எங்கள் குற்றங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படப் பண்ணாமல் பிசாசினிடமிருந்து காப்பாற்றும்.’ நீங்கள் மற்றவர் செய்யும் தீயவைகளை மன்னித்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவானவரும் உங்கள் தீயசெயல்களையும் மன்னிப்பார். ஆனால், மற்றவர்கள் உங்களுக்குச் செய்யும் தீமைகளை நீங்கள் மன்னிக்காவிட்டால் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவும் நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும் தீமைகளை மன்னிக்கமாட்டார். “நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, சோகமாகக் காட்சியளிக்காதீர்கள். மாயக்காரர்கள் மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள். நீங்களும் அவர்களைப்போல நடிக்காதீர்கள். தாங்கள் உபவாசம் இருப்பதை மற்றவர்கள் காண்பதற்காகத் தங்கள் முகத்தை விநோதமாக வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் முழு பலனை அடைந்துவிட்டார்கள். எனவே, நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, மகிழ்ச்சியாகக் காணப்படுங்கள். முகம் கழுவிக்கொள்ளுங்கள். எனவே, நீங்கள் உபவாசம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் காண முடியாத உங்கள் பிதாவானவர் உங்களைக் காண்பார். உங்கள் பிதாவானவர் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். மேலும் அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.