மாற்கு 1:1-8

மாற்கு 1:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்; யோவான் வனாந்தரத்தில் ஞான ஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞான ஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான். அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். யோவான் ஒட்டகமயிர் உடையைத்தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான். அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல. நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்.

மாற்கு 1:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவனுடைய மகன் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம். இது ஏசாயா என்ற இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது: “நான் என்னுடைய தூதனை உமக்கு முன்பாக அனுப்புவேன்; அவன் உமது வழியை ஆயத்தப்படுத்துவான்” “ ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்காகப் பாதைகளை நேராக்குங்கள்’ என்று ஒருவனுடைய குரல் பாலைவனத்திலே சத்தமிட்டது.” அவ்வாறே யோவான் ஸ்நானகன் பாலைவனப் பகுதியில் வந்து, திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பிப் பெறவேண்டிய திருமுழுக்கைக் குறித்துப் பிரசங்கித்தான். யூதேயா மாகாணத்தின் எல்லா நாட்டுப்புறங்களிலும் எருசலேம் நகரத்திலுமிருந்து எல்லாரும் அவனிடம் சென்றார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்குப் பெற்றார்கள். யோவானின் உடைகள் ஒட்டக முடியினால் செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது. அவன் அறிவித்த செய்தி என்னவென்றால், “என்னைப் பார்க்கிலும் அதிக வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார். நானோ அவருடைய பாதரட்சைகளின் வாரையும் குனிந்து அவிழ்ப்பதற்குத் தகுதியற்றவன். நான் உங்களுக்குத் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன்; ஆனால் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுப்பார்.”

மாற்கு 1:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியின் ஆரம்பம். “இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பேபோய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி; யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான். அப்பொழுது யூதேயா தேசத்தார் மற்றும் எருசலேம் நகரத்தார் அனைவரும், யோவானிடம்போய், தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பில் தோல் கச்சையைக் கட்டிக்கொண்டு, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் சாப்பிடுகிறவனாகவும் இருந்தான். அவன்: என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின்பு வருகிறார், அவருடைய காலணிகளின் வாரைக் குனிந்து அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை. நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கம்பண்ணினான்.

மாற்கு 1:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியின் துவக்கம். ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடி அது நடைபெற்றது. ஏசாயா எழுதினான்: “கேளுங்கள்! நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு வழியை ஆயத்தம் செய்வான்.” “வானாந்தரத்தில் ஒரு மனிதன் கூவுகிறான். ‘கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள். அவரது பாதையை நேரானதாக்குங்கள்.’” ஆகையால் யோவான் வந்தான். அவன் வானாந்தரப் பகுதியில் மக்களுக்கு ஞானஸ்நானம் வழங்கினான். அவன் மக்களிடம் மனம் மாறியதைக் காட்டும்படியான ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி சொன்னான். அப்பொழுது அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றான். யூதேயா நாட்டினரும் எருசலேமில் வாழ்கின்ற அனைத்து மக்களும் அவனிடம் வந்தனர். அவர்கள் செய்த பாவங்களை அறிக்கையிட்டனர். யோர்தான் ஆற்றின் கரையில் யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். ஒட்டக மயிரால் ஆன ஆடையை யோவான் அணிந்திருந்தான். தனது இடுப்பில் தோல் வாரால் ஆன கச்சையைக் கட்டியிருந்தான். அவன் வெட்டுக்கிளியையும். காட்டுத் தேனையும் உண்டு வந்தான். “என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப் பின்னால் வருகிறார். அவருக்கு முன்னால், நான் குனிந்து அவரது கால் செருப்புகளின் வாரை அவிழ்க்கவும் தகுதி இல்லாதவன். நான் தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்குகிறேன். அவரோ உங்களுக்குப் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் வழங்குவார்” என்று யோவான் அவர்களுக்கு உபதேசம் செய்தான்.