மாற்கு 10:13-16

மாற்கு 10:13-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள். இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.

மாற்கு 10:13-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிறகு சிலர் சிறுபிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைக்கவேண்டும் என்று அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடரோ அவர்களைக் கண்டித்தார்கள். இயேசு இதைக் கண்டபோது, கோபமடைந்தார். அவர் அவர்களிடம், “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், சிறுபிள்ளையைப்போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன், அதற்குள் ஒருபோதும் செல்லமாட்டான்” என்றார். இயேசு அந்தப் பிள்ளைகளைத் தமது கைகளால் அணைத்துக்கொண்டு, தமது கைகளை அவர்கள்மேல் வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.

மாற்கு 10:13-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடுவதற்காக அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள். இயேசு அதைப் பார்த்து கோபப்பட்டு: சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடம்கொடுங்கள்; அவர்களைத் தடைப்பண்ணவேண்டாம்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. யாராவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.

மாற்கு 10:13-16 பரிசுத்த பைபிள் (TAERV)

மக்கள் தம் சிறு குழந்தைகளை இயேசு தொடுவதற்காகக் கொண்டு வந்தனர். ஆனால் இயேசுவின் சீஷர்கள் குழந்தைகளைக் கொண்டு வர வேண்டாம் என்று தடுத்தனர். இதனை இயேசு கவனித்தார். சிறுவர் தம்மிடம் வருகிறதை சீஷர்கள் தடை செய்தது அவருக்கு பிரியமில்லை. எனவே அவர்களிடம், “குழந்தைகள் என்னிடம் வருவதை அனுமதியுங்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தாதீர்கள். ஏனென்றால் தேவனுடைய இராஜ்யம் குழந்தைகளைப் போன்றவர்களுக்குரியது. நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். குழந்தைகள் எதையும் ஏற்றுக்கொள்வதைப் போன்று நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் அதற்குள் நுழைய முடியாது” என்றார். பிறகு இயேசு, குழந்தைகளைக் கைகளால் அணைத்துக்கொண்டார். இயேசு அவர்கள்மீது கைகளை வைத்து ஆசீர்வாதமும் செய்தார்.