மாற்கு 11:20-25
மாற்கு 11:20-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள். பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான். இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
மாற்கு 11:20-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மறுநாள் காலையில் அவர்கள் திரும்பி வரும்போது, அந்த அத்திமரம் வேரிலிருந்து காய்ந்து இருப்பதைச் சீடர்கள் கண்டார்கள். பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே, பாரும்! நீர் சபித்த அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று!” என்றான். அதற்கு இயேசு, “இறைவனில் விசுவாசம் கொண்டிருங்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது இந்த மலையைப் பார்த்து, ‘நீ போய் கடலில் விழு’ என்று சொல்லி, தமது இருதயத்தில் சந்தேகப்படாமல், தாம் சொல்வது நடக்கும் என்று விசுவாசித்தால், அது அவர்களுக்குச் செய்யப்படும். ஆகையால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் மன்றாட்டில் நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ, அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள்; அப்பொழுது அது உங்களுடையதாகும். நீங்கள் நின்று மன்றாடும்போது, யாராவது உங்களுக்குப் பிழை செய்ததினால், அவருக்கு விரோதமாக உங்கள் மனதில் ஏதாவது கசப்பு வைத்திருந்தால், அவரை மன்னியுங்கள்; அப்பொழுது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுங்கூட உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பார்.
மாற்கு 11:20-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அடுத்தநாள் காலையிலே அவர்கள் அந்தவழியாக போகும்போது, அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைப் பார்த்தார்கள். பேதுரு நினைத்துப்பார்த்து, இயேசுவிடம்: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போனது என்றான். இயேசு அவர்களைப் பார்த்து: தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாக இருங்கள். யாராவது இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, கடலில் தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே நடக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்மேல் உங்களுக்கு ஏதாவது குறை உண்டாயிருக்கும் என்றால், பரலோகத்தில் இருக்கிற உங்களுடைய பிதா உங்களுடைய தவறுகளை உங்களுக்கு மன்னிப்பதற்காக, அந்தக் குறையை நீங்கள் அவனுக்கு மன்னியுங்கள்.
மாற்கு 11:20-25 பரிசுத்த பைபிள் (TAERV)
மறுநாள் காலையில் இயேசு தனது சீஷர்களோடு நடந்துகொண்டிருந்தார். முந்தின நாள் இயேசு சபித்த அத்தி மரத்தை அவர்கள் பார்த்தனர். அம்மரம் செத்து, காய்ந்து, வேரும் உலர்ந்துபோய் இருந்தது. பேதுரு அம்மரத்தைப்பற்றி நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே! பாருங்கள். நேற்று இம்மரம் பட்டுப்போகுமாறு சொன்னீர்கள். இன்று இது உலர்ந்து இறந்துவிட்டது” என்றான். அதற்கு இயேசு, “தேவனிடம் விசுவாசம் வைத்திருங்கள். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ‘மலையே போ, போய்க் கடலில் விழு!’ என்று உங்களால் மலைக்கு ஆணையிட முடியும். உங்கள் மனதில் சந்தேகம் இல்லாதிருந்தால், நீங்கள் சொல்வது நடக்கும் என்கிற விசுவாசம் உங்களுக்கு இருக்குமானால், தேவன் உங்களுக்காக அவற்றைச் செய்வார். ஆகையால் உங்கள் பிரார்த்தனையின்போது தேவனிடம் காரியங்களைக் கேளுங்கள். அவற்றைக் கிடைக்கப்பெற்றோம் என்று நீங்கள் நம்பினால் அவை உங்களுக்கு உரியதாகும். நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது, ஏதாவது ஒன்றைக்குறித்து நீங்கள் யாரிடமாவது கோபம் கொண்டிருப்பது நினைவில் வந்தால் அவர்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவும் உங்களது தவறுகளை மன்னித்துவிடுவார்” என்றார்.