மாற்கு 8:11-38

மாற்கு 8:11-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அங்கு பரிசேயர்கள் வந்து இயேசுவிடம் வாதாடத் தொடங்கினார்கள். அவர்கள் அவரைச் சோதிக்கும்படியாக, வானத்திலிருந்து தங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்படி கேட்டார்கள். இயேசு ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு, “இந்தத் தலைமுறையினர் ஏன் அடையாளத்தைத் தேடுகிறார்கள்? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இவர்களுக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படுவதில்லை” என்றார். பின்பு இயேசு அவர்களைவிட்டுத் திரும்பவும் படகில் ஏறி, கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். சீடர்கள் அவ்வேளையில், தங்களுக்கு உணவைக் கொண்டுவர மறந்துபோனார்கள். படகிலே அவர்களிடம் ஒரு அப்பம் மட்டுமே இருந்தது. இயேசு அவர்களிடம், “கவனமாய் இருங்கள். புளிப்பூட்டும் பொருளாகிய பரிசேயர், ஏரோதியரைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்று அவர்களை எச்சரித்தார். அதற்கு சீடர்கள், “தங்களிடம் அப்பம் இல்லாததைக் குறித்தே இப்படிச் சொல்லுகிறார்” என்று சீடர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வதை அறிந்த இயேசு அவர்களிடம்: “உங்களிடம் அப்பம் இல்லாததைக் குறித்து ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? நீங்கள் இன்னும் காணாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறீர்களா? உங்களுடைய இருதயங்கள் கடினமாய் இருக்கின்றனவோ? உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேட்காதிருக்கிறீர்களா? ஏன், உங்களுக்கு ஞாபகம் இல்லையா? நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தபோது, மீதியான அப்பத்துண்டுகளை, எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?” என்றார். அவர்கள், “பன்னிரண்டு” என்றார்கள். “நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டுக் கொடுத்தபோது, மீதியான அப்பத்துண்டுகளை, எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?” என்றார். அதற்கு அவர்கள், “ஏழு” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “இன்னும் நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லையா?” என்றார். அவர்கள் பெத்சாயிதாவுக்கு வந்தபோது, சில மனிதர்கள் ஒரு குருடனைக் கொண்டுவந்து, இயேசு அவனைத் தொடவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டார்கள். அவர் அந்தக் குருடனுடைய கையைப் பிடித்து, கிராமத்துக்கு வெளியே கொண்டுபோனார். இயேசு அவனுடைய கண்களின்மேல் துப்பி, தமது கைகளை அவன்மேல் வைத்து, “நீ எதையாவது காண்கிறாயா?” என்று கேட்டார். அவன் நிமிர்ந்து பார்த்து, “நான் மனிதரைக் காண்கிறேன்; ஆனால் அவர்களோ நடந்து திரிகிற மரங்களைப்போல் காணப்படுகிறார்கள்” என்றான். இயேசு மீண்டும் ஒருமுறை தமது கைகளை அவனுடைய கண்களின்மேல் வைத்தார். அப்பொழுது அவனுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவன் திரும்பவும் தன்னுடைய பார்வையைப் பெற்று, எல்லாவற்றையும் தெளிவாய் கண்டான். இயேசு அவனிடம், கிராமத்துக்குப் போய் இதைப்பற்றிச் சொல்லவேண்டாம் என்று சொல்லி, அவனை அவனுடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார். இயேசுவும் அவருடைய சீடர்களும் செசரியா, பிலிப்பி பட்டணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்றார்கள். வழியிலே அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் இறைவாக்கினரில் ஒருவர் என்றும் சொல்கிறார்கள்” என்றார்கள். ஆனால், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். அதற்கு பேதுரு, “நீர் கிறிஸ்து” என்றான். அப்பொழுது இயேசு, “தம்மைக் குறித்து வேறுயாருக்கும் சொல்லவேண்டாம்” என எச்சரித்தார். மானிடமகனாகிய நான் அநேக பாடுகள் படவேண்டும் என்றும், யூதரின் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்படுவேன் என்றும், அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்; அத்துடன் தாம் கொல்லப்படவேண்டும் என்றும், மூன்று நாட்களுக்குபின் உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்றும் சொன்னார். இயேசு இவற்றை ஒளிவுமறைவின்றி சொன்னபோது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கொண்டுபோய், அவரைக் கண்டிக்கத் தொடங்கினான். இயேசு திரும்பி தமது சீடர்களை நோக்கிப்பார்த்து, பேதுருவைக் கண்டித்து, “சாத்தானே எனக்குப் பின்னாகப் போ! நீ இறைவனுடைய காரியங்களைச் சிந்திக்காமல் மனிதனுக்கேற்ற காரியங்களையே சிந்திக்கிறாய்” என்றார். அதற்குப் பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும், தமது சீடர்களையும் அழைத்துச் சொன்னதாவது: “யாராவது என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், தம்மையே வெறுத்து, தமது சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும். ஏனெனில், தம் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறவர்கள், அதை இழந்துபோவார்கள். எனக்காகவோ, நற்செய்திக்காகவோ தம் உயிரை இழக்கிறவர்கள், அதைக் காத்துக்கொள்வார்கள். யாராவது முழு உலகத்தையும் தமக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனால், அதனால் அவர்களுக்குப் பலன் என்ன? யாராவது தங்கள் ஆத்துமாவுக்கு ஈடாக எதைக் கொடுக்கமுடியும்? விபசாரமும் பாவமும் நிறைந்த இந்தத் தலைமுறையினர் மத்தியில், யாராவது என்னைக்குறித்தும், என் வார்த்தைகளைக்குறித்தும் வெட்கப்பட்டால், மானிடமகனாகிய நானும் பரிசுத்த தூதர்களுடன் என் பிதாவின் மகிமையில் வரும்போது, அவர்களைக்குறித்து வெட்கப்படுவேன்” என்றார்.

மாற்கு 8:11-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது பரிசேயர்கள் வந்து அவரோடு வாக்குவாதம் பண்ணத்தொடங்கி, அவரைச் சோதிப்பதற்காக, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார்கள் அடையாளம் தேடுகிறது ஏன்? இந்தச் சந்ததியார்களுக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவது இல்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களைவிட்டு மறுபடியும் படகில் ஏறி, அக்கரைக்குப் போனார். சீடர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படகிலே அவர்களிடம் ஒரு அப்பம்மட்டுமே இருந்தது. அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக்குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று கற்பித்தார். அதற்கு அவர்கள்: நம்மிடம் அப்பங்கள் இல்லாததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். இயேசு அதை அறிந்து, அவர்களைப் பார்த்து: உங்களிடம் அப்பங்கள் இல்லாததினால் நீங்கள் யோசனைபண்ணுகிறது ஏன்? இன்னும் சிந்திக்காமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்களுடைய இருதயம் கடினமாக இருக்கிறதா? உங்களுக்குக் கண்கள் இருந்தும் பார்க்காமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்காமல் இருக்கிறீர்களா? நினைத்துப்பார்க்காமல் இருக்கிறீர்களா? நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள். நான் ஏழு அப்பங்களை நான்காயிரம்பேருக்குப் பங்கிட்டுக்கொடுத்தபோது, மீதியான அப்பங்களை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். அப்படியானால், நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்றார். பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடம் கொண்டுவந்து, அவனைத் தொடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கரங்களை வைத்து: எதையாவது பார்க்கிறாயா? என்று கேட்டார். அவன் பார்த்து: மனிதர்களை நடக்கிற மரங்களைப்போலப் பார்க்கிறேன் என்றான். பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கரங்களை வைத்து, அவனைப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் பார்வைப்பெற்று, எல்லோரையும் தெளிவாகப் பார்த்தான். பின்பு அவர் அவனைப் பார்த்து: நீ கிராமத்திற்குள் செல்லாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் புறப்பட்டு, பிலிப்பு செசரியா நாட்டைச்சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் கிறிஸ்து என்றான். அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார். அவைகள் அல்லாமல், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார். இந்த வார்த்தையை அவர் தெளிவாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துபேசத் தொடங்கினான். அவர் திரும்பித் தம்முடைய சீடர்களைப் பார்த்து, பின்பு பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்குரிவைகளைச் சிந்திக்காமல் மனிதனுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்துபேசினார். பின்பு அவர் மக்களையும் தம்முடைய சீடர்களையும் தம்மிடம் அழைத்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றி வரவேண்டும். தன் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துபோவான், எனக்காகவும், நற்செய்திக்காகவும் தன் வாழ்வை இழந்துபோகிறவன் அதைக் காப்பாற்றிக்கொள்ளுவான். மனிதன் உலகம் முழுவதையும் சம்பாதித்துக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஆத்துமாவிற்கு பதிலாக எதைக் கொடுப்பான்? எனவே விபசாரமும் பாவமும் உள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தமது பிதாவின் மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது வெட்கப்படுவார் என்றார்.

மாற்கு 8:11-38 பரிசுத்த பைபிள் (TAERV)

பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து சில கேள்விகள் கேட்டனர். அவர்கள் அவரைச் சோதிக்க விரும்பினர். அவர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை நிரூபிக்க ஒரு அற்புதத்தைச் செய்யுமாறு அவர்கள் கேட்டனர். இயேசு வருத்தத்தோடு பெருமூச்சு விட்டார். அவர், “எதற்காக மக்கள் அற்புதங்களை ஒரு ஆதாரமாகப் பார்க்க விரும்புகிறார்கள்? நான் உண்மையைக் கூறுகிறேன். அத்தகைய எந்த ஆதாரமும் உங்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது” என்று கூறினார். பிறகு இயேசு பரிசேயர்களை விட்டு விலகி, படகில் ஏறி அக்கரைக்குப் போனார். அவர்கள் படகில் போகும்போது, சீஷர்களிடம் ஒரே ஒரு அப்பம் மட்டுமே இருந்தது, அவர்கள் போதுமான அப்பங்களைக் கொண்டுவர மறந்துவிட்டார்கள். அவர்களை இயேசு எச்சரித்தார். “கவனமாக இருங்கள். நீங்கள் பரிசேயருடைய புளித்த மாவைக் குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்றார். இயேசுவின் சீஷர்கள் இதன் பொருளைப்பற்றித் தங்களுக்குள் விவாதம் செய்தார்கள். அவர்கள், “நம்மிடம் அப்பம் இல்லாததால்தான் இயேசு இவ்வாறு கூறுகிறார்” என்று முடிவு செய்தனர். இதுபற்றி இயேசுவும் அறிந்து கொண்டார். எனவே, “அப்பம் இல்லாததைப்பற்றி ஏன் விவாதித்துக் கொள்கிறீர்கள்? உங்களால் இன்னும் உண்மையைப் பார்க்கவோ, புரிந்துகொள்ளவோ முடியவில்லையே! உங்களுக்குக் கண்கள் இருந்தும் காணமுடியாமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்கமுடியாமல் இருக்கிறீர்களா? நான் இதற்கு முன்னால் செய்தவற்றை நினைத்துப் பாருங்கள். நம்மிடம் போதுமான அப்பங்கள் இல்லாதபோது என்ன செய்தேன்? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் மக்களுக்கு நான் பங்கிட்டுக் கொடுக்கவில்லையா? உண்டு மீதியான அப்பங்களை எத்தனைக் கூடைகளில் நிறைத்தீர்கள் என்று நினைத்துப் பாருங்கள்” என்றார். அதற்குச் சீஷர்கள், “நாங்கள் மீதியான உணவுப்பொருள்களை பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினோம்” என்றார்கள். மேலும் இயேசு, “நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததை நினைத்துப் பாருங்கள். அப்போது எஞ்சிய உணவுப்பொருளை எத்தனைக் கூடைகளில் நிறைத்து வைத்தீர்கள்?” என்று கேட்டார். அதற்குச் சீஷர்கள், “அவற்றை ஏழு கூடைகளில் நிறைத்து வைத்தோம்” என்றனர். இயேசு அவர்களிடம், “நான் செய்தவற்றையெல்லாம் நினைவில் வைத்துள்ளீர்கள். ஆனால் இன்னமும் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?” என்றார். இயேசுவும் அவரது சீஷர்களும் பெத்சாயிதாவுக்கு வந்தனர். சிலர் இயேசுவிடம் ஒரு குருடனை அழைத்துக்கொண்டு வந்தனர். அவர்கள் குருடனைத் தொட்டுக் குணப்படுத்துமாறு கெஞ்சிக் கேட்டனர். ஆகையால் இயேசு குருடனின் கையைப் பிடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே அழைத்து வந்தார். பிறகு இயேசு அவனது கண்ணில் எச்சிலைத் துப்பினார். அவன் மீது தன் கையை வைத்து, “இப்போது உன்னால் கொஞ்சமாவது பார்க்க முடிகிறதா?” என்று கேட்டார். அக்குருடனால் பார்க்க முடிந்தது. எனவே அவன், “ஆமாம், நான் மக்களைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப்போல் நடமாடுவதைப் பார்க்கமுடிகிறது” என்றான். மேலும் இயேசு அவன் கண்மீது கையை வைத்தார். அவன் தன் கண்களை அகலமாகத் திறந்தான். அவனது கண்கள் குணம் பெற்றன. அவனால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இயேசு அவனை வீட்டுக்குப்போகச் சொன்னார். “நகரத்திற்குள் போகாதே” என்று இயேசு சொன்னார். இயேசுவும், அவரது சீஷர்களும் பிலிப்பு செசரியா நகரத்தைச் சார்ந்த ஊர்களுக்குச் சென்றனர். அவர்களின் பயணத்தின்போது “மக்கள் என்னை யார் என்று சொல்கிறர்கள்?” என்று இயேசு கேட்டார். அதற்குச் சீஷர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்கின்றனர். சிலர் உம்மைத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கின்றனர்” என்று சொன்னார்கள். பிறகு இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார் அதற்கு பேதுரு, “நீர்தான் கிறிஸ்து” என்று பதில் கூறினான். இயேசு சீஷர்களிடம், “நான் யார் என்று எவரிடமும் சொல்லவேண்டாம்” என்றார். பிறகு இயேசு தன் சீஷர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். மனிதகுமாரன் பல வகையில் கஷ்டப்படவேண்டும். அவர் யூதத் தலைவர்களால் ஒப்புக்கொள்ளப்படமாட்டார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மனித குமாரன் அவர்களால் கொல்லப்பட வேண்டும். இறந்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார். இவ்வாறு இயேசு நடக்கப்போவதையெல்லாம் எடுத்துக் கூறினார். எதையும் அவர் இரகசியமாய் வைக்கவில்லை. பேதுரு இயேசுவிடம் தனியே பேசினான். அவர் இவ்வாறு கூறுவது குறித்து பேதுரு கண்டித்துக் கூறினான். ஆனால் இயேசு மறுபக்கம் திரும்பி தன் சீஷர்களைப் பார்த்தார். பிறகு அவர் பேதுருவைக் கண்டித்தார். “சாத்தானே என்னை விட்டு விலகிப்போ! நீ தேவனுடைய காரியங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறாய். நீ மனிதர் முக்கியமாகக் கருதும் காரியங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருக்கிறாய்” என்றார். இயேசு மக்களைத் தம்மிடம் அழைத்தார். அவரது சீஷர்களும் அவரோடு இருந்தனர். பிறகு இயேசு “யாராவது என்னைப் பின்பற்ற விரும்பினால், அவனது விருப்பங்களையெல்லாம் வெறுத்து ஒதுக்க வேண்டும். அவனது சிலுவையைச் சுமந்து என்னைப் பின்தொடர வேண்டும். எவனொருவன் தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறானோ அவன் அதனை இழப்பவனாகிறான். எவன் ஒருவன் எனக்காகவும் நற்செய்திக்காகவும் தன்னை இழக்கிறானோ அவனது வாழ்க்கை பாதுகாக்கப்படுகிறது. ஒருவனுக்கு உலகம் முழுவதும் கிடைத்தாலும் நரகத்தில் ஒருவன் தன் ஆத்துமாவை இழந்து போவானேயானால் அதனால் அவனுக்கு என்ன லாபம்? ஒருவன் தன் ஆன்மாவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள எந்த விலையையும் கொடுக்க முடியாது. இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கேடுகளிலும், பாவங்களிலும் வாழ்கிறார்கள். எவனாவது என்னைக் குறித்தும், என் போதனையைக் குறித்தும் வெட்கப்படுவானேயானால், நானும் அவனைக் குறித்து வெட்கப்படுவேன். நான் என் பிதாவின் மகிமையோடும், தேவ தூதர்களோடும் வரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவேன்” என்றார்.

மாற்கு 8:11-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார். சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம் மாத்திரம் இருந்தது. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார். அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா? நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள். நான் ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார். அவன் ஏறிட்டுப் பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான். பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான். பின்பு அவர் அவனை நோக்கி: நீ கிராமத்தில் பிரவேசியாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்பு செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது, அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான். அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார். அல்லாமலும், மனுஷகுமாரன் பலபாடுகள்பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். இந்த வார்த்தையை அவர் தாராளமாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்து கொண்டார். பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமைபொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார்.