நெகேமியா 1:6-11

நெகேமியா 1:6-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம். நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம். நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும், நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும். தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே. ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.

நெகேமியா 1:6-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உமது அடியவர்களாகிய இஸ்ரயேல் மக்களுக்காக நான் உமக்கு முன்பாக இரவும் பகலும் மன்றாடுகிறேன். நானும் என் முற்பிதாக்களின் குடும்பமுமான இஸ்ரயேலராகிய நாங்கள் உமக்கு விரோதமாய் செய்த பாவங்களை நான் அறிக்கையிடுகிற உமது அடியவனான என் மன்றாட்டைக் கேட்க, உமது செவி கேட்டும், உமது கண்கள் திறந்தும் இருப்பதாக. உமக்கு முன்பாக நாங்கள் மிகவும் கொடியவர்களாய் நடந்தோம். நீர் உமது அடியவன் மோசேக்குக் கொடுத்த கட்டளைகளுக்கும், விதிமுறைகளுக்கும், சட்டங்களுக்கும் நாங்கள் கீழ்ப்படியவில்லை. “நீர் உமது அடியவனான மோசேக்குக் கொடுத்த வார்த்தைகளை நினைவில்கொள்ளும். நீர் மோசேயிடம், ‘நீங்கள் உண்மையற்றவர்களாயிருந்தால் பிற நாட்டு மக்களுக்குள்ளே நான் உங்களைச் சிதறடிப்பேன். ஆனால் நீங்கள் என்னிடம் திரும்பிவந்து என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், உங்கள் மக்களில் நாடு கடத்தப்பட்டவர்கள் அடிவானத்தின் தொலைதூரத்தில் இருந்தாலும்கூட, நான் அங்கிருந்தும் கொண்டுவருவேன்; நான் அவர்களைக் கூட்டிச்சேர்த்து என்னுடைய பெயருக்கென இருப்பிடமாக நான் தெரிந்துகொண்ட இவ்விடத்திற்குக் கொண்டுவருவேன்’ என்றீரே. “அவர்கள் உம்முடைய அடியவர்களும் உமது மக்களும், உமது மிகுந்த வல்லமையினாலும் பலத்த கரத்தினாலும் நீர் மீட்டுக்கொண்டவர்களும் ஆவர். யெகோவாவே, உமது அடியவனின் ஜெபத்தையும், உமது பெயரில் பயபக்தியாய் இருப்பதில் மகிழ்ச்சியடையும் உமது அடியார்களின் மன்றாட்டையும் செவிகொடுத்துக் கேளும்; இந்த மனிதனின் முன் எனக்கு தயவு கிடைக்கப்பண்ணி இன்று எனக்கு வெற்றியைத் தாரும்” என்று மன்றாடினேன். அந்நாட்களில் நான் அரசனுக்கு திராட்சை இரசம் பரிமாறுகிறவனாயிருந்தேன்.

நெகேமியா 1:6-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உமது அடியார்களாகிய இஸ்ரவேல் மக்களுக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் மக்களாகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவிகள் கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என்னுடைய தகப்பன் வீட்டார்களும் பாவம் செய்தோம். நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாக நடந்தோம்; நீர் உம்முடைய ஊழியனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாமற்போனோம். நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை தேசங்களுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும், நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என்னுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே சிதறுண்டுபோனவர்கள் வானத்தின் கடைசி முனையில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என்னுடைய நாமம் விளங்குவதற்காக நான் தெரிந்துகொண்ட இடத்திற்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய ஊழியனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும். தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியார்களும் உமது மக்களும் இவர்கள்தானே. ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்திற்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியார்களின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடிவரச்செய்து, இந்த மனிதனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கச்செய்தருளும் என்று ஜெபம் செய்தேன். நான் ராஜாவிற்குப் பானம் பரிமாறுகிறவனாக இருந்தேன்.

நெகேமியா 1:6-11 பரிசுத்த பைபிள் (TAERV)

“உமக்கு முன்னால் இரவும் பகலும் ஜெபம் செய்துக்கொண்டிருக்கிற உமது அடியானின் ஜெபத்தைக் கேட்கும்படி தயவுசெய்து உமது கண்களையும் காதுகளையும் திறவும். நான் இஸ்ரவேல் ஜனங்களான உமது அடியார்களுக்காக ஜெபம் செய்துக்கொண்டிருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களாகிய நாங்கள் உமக்கு எதிராகச் செய்த பாவங்களை நான் அறிக்கையிடுகின்றேன். நான் உமக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறேன் என்றும் என் தந்தையின் வீட்டார் உமக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறார்கள் என்றும் நான் அறிக்கையிட்டுக்கொண்டிருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களாகிய நாங்கள் உமக்கு மிகவும் தீயவர்களாக இருந்தோம். நீர் உமது அடியாரான மோசேக்குக் கொடுத்த கட்டளைகள், போதனைகள், சட்டங்கள் ஆகியவற்றிற்கு நாங்கள் அடி பணிந்திருக்கவில்லை. “உமது அடியாரான மோசேக்கு, நீர் கொடுத்த கட்டளையை தயவுசெய்து நினைவுக்கூரும். நீர் அவனிடம், ‘இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டால் நான் உங்களைப் பலவந்தமாக மற்ற நாடுகளுக்குள் சிதறடிப்பேன். நீங்கள் என்னிடம் திரும்பிவந்து எனது கட்டளைகளுக்கு அடிபணிவீர்களானால் பிறகு நான் சொல்லுகிற இது நடக்கும். ஜனங்கள் தம் வீடுகளிலிருந்து பலவந்தமாக வெளியே அனுப்பப்பட்டு பூமியின் கடைசி எல்லைகளில் இருந்தாலும் அங்கிருந்து அவர்களை நான் ஒன்றுசேர்ப்பேன். எனது நாமத்தை விளங்கும்படி நான் தேர்ந்தெடுத்த இடத்திற்கு நான் அவர்களைத் திரும்பக்கொண்டுவருவேன்’ என்று கூறினீர். “இஸ்ரவேலின் ஜனங்கள் உமது அடியவர்களாகவும் ஜனங்களாகவும் இருக்கின்றனர். நீர் உமது வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும் அந்த ஜனங்களை மீட்டீர். எனவே கர்த்தாவே, எனது ஜெபத்தைக் கேளும். நான் உமது அடியான். உமது நாமத்தில் மரியாதை வைத்திருக்கிற உமது அடியார்களின் ஜெபங்களைக்கேளும். கர்த்தாவே, நான் ராஜாவின் திராட்சைரசப் பணியாள் என்பது உமக்குத் தெரியும். எனவே இன்று எனக்கு உதவும். ராஜாவிடத்தில் உதவி கேட்கிறபோது நீர் எனக்கு உதவும். என் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணும்.”