நெகேமியா 4:6-23

நெகேமியா 4:6-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம்; அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள். எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டு வருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலாகி, எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும், வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணினார்கள். ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம். அப்பொழுது யூதா மனிதர்: சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது; மண்மேடு மிச்சமாயிருக்கிறது; நாங்கள் அலங்கத்தைக் கட்டக்கூடாது என்றார்கள். எங்கள் சத்துருக்களோவென்றால்; நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடுமட்டும், அவர்கள் அதை அறியாமலும் பாராமலும் இருக்கவேண்டும்; இவ்விதமாய் அந்த வேலையை ஓயப்பண்ணுவோம் என்றார்கள். அதை அவர்களண்டையிலே குடியிருக்கிற யூதரும், பல இடங்களிலுமிருந்து எங்களிடத்துக்கு வந்து, பத்துவிசை எங்களுக்குச் சொன்னார்கள். அப்பொழுது நான்: அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும், பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங்குடும்பமாக நிறுத்தினேன். அதை நான் பார்த்து எழும்பி, பிரபுக்களையும், அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணுங்கள் என்றேன். எங்களுக்குச் செய்தி தெரியவந்ததென்றும், தேவன் அவர்கள் ஆலோசனையை அபத்தமாக்கினாரென்றும், எங்கள் பகைஞர் கேட்டபோது, நாங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய அலங்கத்துக்குத் திரும்பினோம். அன்றுமுதற்கொண்டு என் வேலைக்காரரில் பாதிப்பேர் வேலை செய்தார்கள், பாதிப்பேர் ஈட்டிகளையும் பரிசைகளையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள்; அதிகாரிகள் யூதா வம்சத்தார் எல்லாருக்கும் பின்னாக நின்றார்கள். அலங்கத்திலே கட்டுகிறவர்களும், சுமைசுமைக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையினாலே வேலைசெய்து, மறுகையினாலே ஆயுதம் பிடித்திருந்தார்கள். கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என்னண்டையிலே நின்றான். நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது; நாம் அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருக்கிறோம். நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைக் கேட்கிறீர்களோ அவ்விடத்திலே வந்து, எங்களோடே கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார் என்றேன். இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதிப்பேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள். அக்காலத்திலே நான் ஜனங்களைப் பார்த்து: இராமாறு நமக்குக் காவலுக்கும் பகல்மாறு வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரரோடுங்கூட எருசலேமுக்குள்ளே இராத்தங்கக்கடவர்கள் என்று சொல்லி, நானாகிலும், என் சகோதரராகிலும், என் வேலைக்காரராகிலும், என்னைப் பின்பற்றி காவல்காக்கிற சேவகராகிலும் எங்கள் வஸ்திரங்களைக் களைந்துபோடாதிருந்தோம்; அவரவருக்கு ஆயுதமும் தண்ணீரும் இருந்தது.

நெகேமியா 4:6-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மக்கள் முழு இருதயத்துடன் வேலைசெய்தபடியால் நாங்கள் மதிலை அதன் பாதி உயரத்திற்குக் கட்டி முடித்தோம். ஆனால் எருசலேம் மதிலின் திருத்த வேலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்றும், அதன் பிளவுகள் திருத்தப்படுகின்றன என்றும் சன்பல்லாத்து, தொபியா, அரபியர், அம்மோனியர், அஸ்தோத்தியர் ஆகியோர் கேள்விப்பட்டபோது கோபம் கொண்டார்கள். எருசலேமுக்கு விரோதமாக வந்து சண்டையிடவும், அதற்கு எதிராகக் கலகம் உண்டுபண்ணவும் அவர்கள் ஒன்றுகூடி சதி செய்தார்கள். ஆனால் நாங்களோ எங்கள் இறைவனிடம் ஜெபம்பண்ணி, இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள இரவும் பகலும் ஒரு காவலை ஏற்படுத்தினோம். இதற்கிடையில் யூதாவின் மக்களோ, “வேலையாட்களின் பெலன் குறைந்திருக்கிறது, இடிபாட்டுக் குவியலோ அதிகமாயிருக்கிறது; அதனால் மதிலைக் கட்ட எங்களால் முடியாது” என்றார்கள். அதேவேளையில் எங்கள் பகைவர்கள், “அவர்கள் எங்கள் திட்டத்தை அறியவோ, எங்களைக் காணவோ முன்பதாக நாங்கள் அவர்களுக்குள்ளே இருந்து அவர்களைக் கொன்று அந்த வேலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்” என்றார்கள். அந்த வார்த்தைகளை எங்கள் பகைவர்கள் மத்தியில் வாழ்ந்த யூதர்கள் கேள்விப்பட்டு, எங்களிடம் வந்து, “நீங்கள் எங்கு திரும்பினாலும் அவர்கள் உங்களைத் தாக்குவார்கள்” என்று கிட்டத்தட்ட பத்து தடவைகள் சொன்னார்கள். அதனால் நான்: மதிலின் பின்னே மிகத் தாழ்வான இடங்களில் திறந்தவெளியில் மக்களைக் குடும்பம் குடும்பமாக அவர்களின் வாள்கள், ஈட்டிகள், வில்லுகள் ஆகியவற்றுடன் காவல் செய்யும்படி நிறுத்தி வைத்தேன். அப்பொழுது ஏற்பட்டிருந்த சூழ்நிலையைக் கண்ட நான் எழுந்து நின்று, உயர்குடி மனிதர்களிடமும், அதிகாரிகளிடமும், மீதியாயிருந்த மக்களிடமும், “அவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். மகத்துவமுள்ளவரும், பயபக்திக்குரியவருமாயிருக்கிற யெகோவாவை நினைத்து, உங்கள் சகோதரர், மகன்கள், மகள்கள், மனைவிகள் ஆகியோருக்காகவும் உங்கள் குடும்பங்களுக்காகவும் போராடுங்கள்” என்றேன். எங்கள் பகைவர்களின் திட்டம் எங்களுக்குத் தெரியவந்ததென்றும், இறைவன் அதை முறியடித்துவிட்டார் என்றும் அவர்கள் கேள்விப்பட்டார்கள்; நாங்களோ யாவரும் மீண்டும் அவரவர் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம். அன்றிலிருந்து எனது வேலைக்காரர்களில் பாதிப்பேர் வேலையைத் தொடர்ந்து செய்தார்கள், மற்ற பாதிப்பேர் காவல் செய்யும்படி ஈட்டிகள், கேடயங்கள், வில்லுகள், கவசம் ஆகியவற்றைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். அதிகாரிகளோ யூதா நாட்டு மக்களுக்குப் பின்னாக நின்று மேற்பார்வையிட்டனர். கட்டடப் பொருட்களைத் தூக்குபவர்கள் ஒரு கையால் வேலைசெய்தார்கள். ஆனால் மற்றக் கையில் ஆயுதம் பிடித்திருந்தார்கள். கட்டுகிறவர்களில் ஒவ்வொருவனும் தான் வேலை செய்கையில் தனது இடுப்பில் வாளை சொருகியிருந்தான். தேவையானபோது எச்சரிக்கை செய்வதற்கு, எக்காளம் ஊதுகிறவர்கள் என்னோடு நின்றார்கள். அப்பொழுது நான் உயர்குடி மக்களிடமும், அதிகாரிகளிடமும், மற்ற மக்களிடமும், “எங்கள் வேலை பெரிதும் விசாலமானதாய் இருக்கிறது, நாங்களும் சுவர் நெடுகிலும் ஒருவரைவிட்டு ஒருவர் தூரமாய் பிரிந்திருக்கிறோம். நீங்கள் எங்கே எக்காள சத்தத்தைக் கேட்டாலும், அங்கே எங்களுடன் வந்துசேருங்கள். நம்முடைய இறைவன் நமக்காக யுத்தம் செய்வார்” என்று கூறினேன். அதன்படி அதிகாலை வெளிச்சத்திலிருந்து நட்சத்திரங்கள் வானில் தோன்றும்வரை எங்களில் பாதிப்பேர் ஈட்டியைப் பிடித்தவர்களாக நிற்க, நாங்கள் வேலையைத் தொடர்ந்து செய்தோம். மேலும் நான் மக்களிடம், “ஒவ்வொரு மனிதனும் அவனுடைய உதவியாளனும் எருசலேமுக்குள்ளேயே இரவைக் கழிக்கும்படி செய்யுங்கள்; அப்பொழுது அவர்கள் இரவில் காவலர்களாகவும், பகலில் வேலையாட்களாகவும் நமக்கு வேலை செய்யலாம்” என்றேன். அப்படியே நானோ, என்னுடன் இருந்த சகோதரரோ, எனது மனிதரோ, எனது காவலரோ எங்கள் உடைகளை மாற்றிக்கொள்ளவில்லை. ஒவ்வொருவனும் தண்ணீருக்கு போனபோதும்கூட, எங்கள் வலதுகையில் ஆயுதம் தாங்கியபடியே இருந்தோம்.

நெகேமியா 4:6-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நாங்கள் மதிலைக் கட்டிவந்தோம்; மதில்கள் எல்லாம் பாதிவரை ஒன்றாக இணைந்து உயர்ந்தது; மக்கள் வேலைசெய்வதற்கு ஆவலாக இருந்தார்கள். எருசலேமின் மதிலைக் கட்டுகிற வேலை முன்னேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டுவருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியர்களும், அம்மோனியர்களும், அஸ்தோத்தியர்களும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலடைந்து, எருசலேமின்மேல் போர்செய்ய எல்லோரும் ஒன்றாக வரவும், வேலையைத் தடுக்கவும் முடிவு செய்தார்கள். ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்செய்து, அவர்களுக்காக இரவும்பகலும் காவல் காக்கிறவர்களை வைத்தோம். அப்பொழுது யூதா மனிதர்கள்: சுமைகாரர்களின் பெலன் குறைந்துபோகிறது; மண்மேடு மிச்சமாக இருக்கிறது; நாங்கள் மதிலைக் கட்டக்கூடாது என்றார்கள். எங்களுடைய எதிரிகளோவென்றால்; நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடும்வரை, அவர்கள் அதை அறியாமலும் பார்க்காமலும் இருக்கவேண்டும்; இவ்விதமாக அந்த வேலையை நிறுத்துவோம் என்றார்கள். அதை அவர்களருகில் குடியிருக்கிற யூதர்களும், பல இடங்களிலுமிருந்து எங்களிடம் வந்து, பத்துமுறை எங்களுக்குச் சொன்னார்கள். அப்பொழுது நான்: மதிலுக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும், பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற மக்களைக் குடும்பம் குடும்பமாக நிறுத்தினேன். அதை நான் பார்த்து எழுந்து, பிரபுக்களையும், அதிகாரிகளையும் மற்ற மக்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரர்களுக்காகவும், மகன்களுக்காகவும், மகள்களுக்காகவும், மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்செய்யுங்கள் என்றேன். எங்களுக்குச் செய்தி தெரியவந்தது என்றும், தேவன் அவர்களுடைய ஆலோசனையை பொய்யாக்கினார் என்றும், எங்கள் எதிரிகள் கேட்டபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம். அன்றுமுதற்கொண்டு என்னுடைய வேலைக்காரர்களில் பாதி ஆட்கள் வேலை செய்தார்கள், பாதி ஆட்கள் ஈட்டிகளையும் கேடகங்களையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள்; அதிகாரிகள் யூதாவின் மக்கள் எல்லோருக்கும் பின்புறமாக நின்றார்கள். மதிலை கட்டுகிறவர்களும், சுமைசுமைக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையிலே வேலைசெய்து, மறுகையிலே ஆயுதம் பிடித்திருந்தார்கள். கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாக வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என் அருகில் நின்றான். நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற மக்களையும் நோக்கி: வேலை பெரிதும் விரிவானதுமாக இருக்கிறது; நாம் மதிலின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாக இருக்கிறோம். நீங்கள் எந்த இடத்தில் எக்காளச் சத்தத்தைத் கேட்கிறீர்களோ அந்த இடத்தில் வந்து, எங்களோடு கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்செய்வார் என்றேன். இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதி ஆட்கள் கிழக்கு வெளுக்கும் நேரம்முதல் நட்சத்திரங்களை காணும்வரை ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள். அந்தச் சமயத்திலே நான் மக்களைப் பார்த்து: இரவில் நமக்குக் காவலுக்கும் பகலில் வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரர்களோடு எருசலேமுக்குள்ளே இரவு தங்கவேண்டும் என்று சொல்லி, நானோ, என்னுடைய சகோதரர்களோ, என்னுடைய வேலைக்காரர்களோ, என்னைப் பின்பற்றி காவல்காக்கிற வீரர்களோ எங்கள் உடைகளை மாற்றிக் கொள்ளாதிருந்தோம்; ஒவ்வொருவரும் தங்களிடத்தில் ஆயுதங்களையும் தண்ணீரையும் வைத்திருந்தார்கள்.

நெகேமியா 4:6-23 பரிசுத்த பைபிள் (TAERV)

நாங்கள் எருசலேமின் சுவரைக் கட்டினோம். ஆனால் இச்சுவர்கள் இருக்கவேண்டிய உயரத்திற்கு பாதி உயரம்தான் உள்ளது. நாங்கள் இதுவரை செய்தோம். ஏனென்றால் ஜனங்கள் தங்கள் முழுமனதோடு வேலைச் செய்தனர். ஆனால் சன்பல்லாத், தொபியா, அரபியர்கள், அம்மோனியர்கள் மற்றும் அஸ்தோத்தியரும் மிகவும் எரிச்சல் அடைந்தனர். அவர்கள், எருசலேம் சுவர்களில் ஜனங்கள் தொடர்ந்து வேலைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டனர். சுவர்களில் உள்ள துவாரங்களை ஜனங்கள் அடைக்கின்றனர் என்றும் அவர்கள் கேள்விப்பட்டனர். எனவே, அம்மனிதர்கள் கூடி எருசலேமிற்கு எதிராகத் திட்டங்கள் தீட்டினர். அவர்கள் எருசலேமிற்கு எதிராகத் தூண்டிவிட திட்டமிட்டனர். அவர்கள் வந்து நகரத்திற்கு எதிராகச் சண்டையிடவும் திட்டமிட்டனர். ஆனால் நாங்கள் எங்கள் தேவனிடம் ஜெபம் செய்தோம். நாங்கள் சுவர்களில் இரவும் பகலும் கண்காணிக்க காவலர்களை ஏற்பாடு செய்தோம். நாங்கள் அவர்களை எதிர்கொள்ள தயாராக இருந்தோம். எனவே அந்த நேரத்தில் யூதாவின் ஜனங்கள், “வேலைக்காரர்கள் சோர்வாக இருக்கிறார்கள். வழியில் எல்லாம் மண்ணும் மேடுமாயும் இருக்கிறது. எங்களால் தொடர்ந்து சுவரைக் கட்ட முடியாது. எங்கள் பகைவர்கள், ‘யூதா ஜனங்கள் அறிந்துக் கொள்வதற்கும் எங்களைப் பார்ப்பதற்கும் முன்னால் நாங்கள் அவர்கள் மத்தியில் இருப்போம். நாங்கள் அவர்களைக் கொல்வோம். அது வேலையை நிறுத்தும்’ என்கிறார்கள்” என்று கூறினர். பிறகு எங்கள் பகைவர்களின் மத்தியில் வாழும் யூதர்கள் வந்து எங்களிடம் பத்துமுறை, “எங்களைச் சுற்றிலும் எங்கள் பகைவர்கள் உள்ளனர். நாங்கள் திரும்பினாலும், அங்கேயும் இருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். எனவே நாம் கொஞ்சம் பேரைச் சுவரோடுள்ள பள்ளமான இடங்களில்விட்டேன். சுவர்களில் உள்ள துவாரங்களில் அவர்களை நிற்க வைத்தேன். நான் அவர்களைக், அவர்களது குடும்பங்களோடு அருகில் வாள்கள், ஈட்டிகள், மற்றும் வில்லுகளோடு நிறுத்தினேன். நான் மொத்த சூழ்நிலையையும் பார்த்தேன். பிறகு நான் எழுந்து நின்று முக்கியமான குடும்பங்களிடமும், அதிகாரிகளிடமும் மற்ற ஜனங்களிடமும் பேசினேன். நான் அவர்களிடம், “நமது பகைவர்களுக்குப் பயப்படவேண்டாம். நமது ஆண்டவரை நினைவு கொள்ளுங்கள். கர்த்தர் பெரியவராயும் வல்லமை உடையவராயும் இருக்கிறார். நீங்கள் உங்கள் சகோதரர்கள், குமாரர்கள், குமாரத்திகள் ஆகியோருக்காகச் சண்டையிடவேண்டும். உங்கள் மனைவிகளுக்காகவும் வீடுகளுக்காகவும் போரிடவேண்டும்” என்று கூறினேன். பிறகு நாங்கள் அவர்களின் திட்டங்களை அறிந்துகொண்டதை எங்கள் பகைவர்கள் கேள்விப்பட்டனர். அவர்களது திட்டங்களைத் தேவன் அழித்துவிட்டதை அவர்கள் அறிந்தனர். எனவே நாங்கள் அனைவரும் சுவரில் வேலை செய்வதற்குத் திரும்பிப்போனோம். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்பிப்போய் தங்கள் வேலையைச் செய்தனர். அந்த நாளில் இருந்து, எனது பாதி ஜனங்கள் சுவர்வேலை செய்தனர். மீதி பாதி ஜனங்கள் ஈட்டிகள், கேடயங்கள், வில்லுகள் மற்றும் கவசங்கள் ஆகியவற்றோடு காவல் காத்தனர். படை அதிகாரிகள் சுவரைக்கட்டும் யூதாவின் ஜனங்களுக்குப் பின்னால் நின்றனர். கட்டிடம் கட்டுவோரும் அவர்களது உதவியாளர்களும் ஒரு கையில் கருவியையும், இன்னொரு கையில் ஆயுதத்தையும் வைத்திருந்தனர். கட்டிடம் கட்டும் ஒவ்வொருவரும் வேலை செய்யும்போது தன் இடுப்பில் வாளை அணிந்திருந்தனர். எனக்கு அடுத்திருந்தவன் எச்சரிக்கை செய்வதற்கு எக்காளம் ஊதுபவனாக இருந்தான். பிறகு நான் பிரதான குடும்பங்களிடமும், அதிகாரிகளிடமும், மற்ற ஜனங்களிடமும் பேசினேன். நான் அவர்களிடம், “இது மிகப் பெரிய வேலை. நாம் சுவர் முழுவதும் பரவியிருக்க வேண்டும். நாம் ஒருவருக்கு ஒருவர் தூரமாக இருக்கிறோம். எனவே, நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்டால் அந்த இடத்திற்கு ஓடிப்போங்கள். அங்கே நாம் அனைவரும் கூடுவோம். தேவன் நமக்காக போரிடுவார்” என்று சொன்னேன். எனவே, நாங்கள் எருசலேம் சுவரில் தொடர்ந்து வேலைச் செய்துகொண்டிருந்தோம். பாதிபேர் ஈட்டிகளை வைத்திருந்தார்கள். நாங்கள் காலை வெளிச்சம் வந்தது முதல் இரவில் நட்சத்திரம் வரும்வரை வேலைச் செய்தோம். அந்த நேரத்தில் நானும் ஜனங்களிடம், “கட்டிடம் கட்டுகிற ஒவ்வொருவரும் தங்கள் உதவியாளர்களோடு இரவில் எருசலேமிற்குள்ளே தங்க வேண்டும். பிறகு அவர்கள் இரவில் காவல் செய்யவும் பகலில் வேலை செய்யவும் முடியும்” என்று சொன்னேன். எனவே நானாகிலும் எனது சகோதரராகிலும் எனது வேலைக்காரராகிலும் என்னைப் பின்பற்றி காவல் காக்கிற சேவகராகிலும் எங்கள் ஆடைகளைக் கழற்றிபோடாமல் இருந்தோம். எல்லா நேரமும் எங்களிடம் ஆயுதம் தயாராக இருந்தது. நாங்கள் தண்ணீர் எடுக்கப் போகும்போது கூட ஆயுதம் தயாராக இருந்தது.