நெகேமியா 5:6-19

நெகேமியா 5:6-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் கூக்குரலையும், இந்த வார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு, என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபை கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள். பின்னும் நான் அவர்களை நோக்கி: நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய பகைஞராகிய புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா? நானும் என் சகோதரரும் என் வேலைக்காரரும் இவ்விதமாகவா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன் கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக. நீங்கள் இன்றைக்கு அவர்கள் நிலங்களையும், அவர்கள் திராட்சத்தோட்டங்களையும், அவர்கள் ஒலிவத்தோப்புகளையும், அவர்கள் வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக் கொடுத்துவிடுங்கள் என்றேன். அதற்கு அவர்கள்: நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள்; அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிடுவித்துக்கொண்டேன். நான் என் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர்; இந்தப் பிரகாரமாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக என்றேன்; அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி, கர்த்தரைத் துதித்தார்கள்; பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள். நான் யூதா தேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம் வரைக்குமிருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை. எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை. ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை; அந்த அலங்கத்தின் வேலையிலே முயன்று நின்றேன்; என் வேலைக்காரரனைவரும் கூட்டமாய் அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள். யூதரும் மூப்பருமான நூற்றைம்பதுபேரும், எங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்தவர்களும் என் பந்தியில் சாப்பிட்டார்கள். நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல்தரமான ஆறு ஆடும் சமைக்கப்பட்டது; பட்சிகளும் சமைக்கப்பட்டது; பத்துநாளைக்கு ஒருதரம் நானாவிதத் திராட்சரசமும் செலவழிந்தது; இப்படியெல்லாம் இருந்தபோதும், இந்த ஜனங்கள் பட்டபாடு கடினமாயிருந்தபடியால், அதிபதிகள் வாங்குகிற படியை நான் வாங்கவில்லை. என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.

நெகேமியா 5:6-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இவர்களுடைய கூக்குரலையும், குற்றச்சாட்டுகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபமடைந்தேன். நான் இவற்றை எனக்குள் சிறிது யோசித்துப் பார்த்தபின், உயர்குடி மனிதர், அதிகாரிகள் ஆகியோர்களையும் குற்றப்படுத்தினேன். “உங்கள் சொந்த நாட்டவரிடமிருந்தே நீங்கள் வட்டியை வற்புறுத்தி வாங்குகிறீர்கள்” என்று சொன்னேன். அப்படியே நான் அவர்களுக்கெதிராக ஒரு நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு பெரிய கூட்டத்தை ஒன்றுகூடிவரச் செய்தேன். நான் அவர்களிடம், “அந்நிய தேசத்தாருக்கு விற்கப்பட்டிருந்த நமது சகோதரரான யூத மக்களை எங்களால் முடிந்த அளவுக்கு விடுவித்திருக்கிறோம். அப்படியிருக்க இப்பொழுது திரும்பவும் நீங்கள் அவர்களை விற்கிறீர்கள்; அதனால் நாங்கள் அவர்களைத் திரும்பவும் வாங்க வேண்டியிருக்கிறது!” என்று கூறியபோது அவர்களால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை, அவர்கள் அமைதியாயிருந்தார்கள். எனவே நான் தொடர்ந்து அவர்களிடம், “நீங்கள் செய்வது சரியானது அல்ல. நம்முடைய எதிரிகளாகிய யூதரல்லாதவர்கள் அவமதிக்காதபடி, நீங்கள் நமது இறைவனுக்குப் பயந்து நடக்க வேண்டுமல்லவா? நானும் என் சகோதரர்களும், என் மனிதரும்கூட இந்த மக்களுக்குப் பணத்தையும், தானியத்தையும் கடனாகக் கொடுத்திருக்கிறோம். நீங்கள் வற்புறுத்தி வட்டி வாங்குவதை நிறுத்திவிடுங்கள்! நீங்கள் அவர்களிடம் அவர்களுடைய வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், வீடுகளையும் உடனே திருப்பிக் கொடுத்துவிடுங்கள்; அத்துடன் நீங்கள் கொடுத்த பணம், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றில் நூற்றில் ஒரு பங்காக வாங்கும் வட்டியையும் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” என்று சொன்னேன். அப்பொழுது அவர்கள், “நாங்கள் அவற்றைத் திருப்பிக் கொடுப்போம், அவர்களிடமிருந்து எதையும் நாங்கள் வற்புறுத்தி வாங்கவும் மாட்டோம். நீர் சொல்வதன்படியே செய்வோம்” என்றார்கள். உடனே நான் ஆசாரியர்களை அழைப்பித்து உயர்குடி மனிதரும், அதிகாரிகளும் தாங்கள் வாக்களித்தபடி செய்யவேண்டுமென்று சொல்லி, ஆணையிடும்படி செய்தேன். மேலும் நான் எனது ஆடையின் மடிப்புகளை உதறி, அவர்களிடம், “இப்போது செய்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பவனின் வீட்டையும், உடைமைகளையும் இறைவன் இவ்விதமாகவே உதறிப்போடுவாராக. அப்படிப்பட்ட மனிதன் உதறிப்போடப்பட்டு வெறுமையாக்கப்படுவானாக!” என்றேன். அதைக்கேட்ட மக்கள் கூட்டமும், “ஆமென்” என்று கூறி யெகோவாவைத் துதித்தார்கள். மக்கள் தாங்கள் வாக்குக்கொடுத்தபடியே செய்தார்கள். மேலும் அர்தசஷ்டா அரசனின் இருபதாம் வருட ஆட்சியில் யூதா நாட்டிற்கு நான் ஆளுநனாக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து, அர்தசஷ்டாவின் முப்பத்தி இரண்டாம் வருடம்வரை பன்னிரண்டு வருடங்களுக்கு நானோ, என் சகோதரர்களோ ஆளுநர்களுக்கான உணவைச் சாப்பிடவில்லை. எனக்கு முன்னிருந்த ஆளுநர்கள் மக்கள்மீது பாரமான சுமையைச் சுமத்தி, அவர்களிடமிருந்து நாற்பது சேக்கல் வெள்ளிப் பணத்தையும், அத்துடன் உணவையும், திராட்சை இரசத்தையும் வாங்கிவந்தார்கள். அவர்களுடைய உதவியாளர்களும்கூட அவர்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள். ஆனால் நானோ இறைவனுக்குப் பயந்ததினால் அவ்விதம் நடக்கவில்லை. நான் இந்த மதில் வேலைக்கு என்னை அர்ப்பணித்திருந்தேன். எனது வேலைக்காரர்கள் எல்லோரும் அந்த வேலைக்காக அங்கு கூடியிருந்தார்கள்; நாங்கள் எந்த நிலத்தையும் எங்களுக்குச் சொந்தமாக்கவில்லை. மேலும் நூற்றைம்பது யூதர்களும், அதிகாரிகளும் என் பந்தியில் சாப்பிட்டார்கள். அத்துடன் சுற்றுப்புற நாடுகளிலிருந்து எங்களிடம் வந்தவர்களும் சாப்பிட்டார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு மாடும், ஆறு சிறந்த செம்மறியாடுகளும், சில பறவைகளும் சமைக்கப்பட்டன. பத்து நாட்களுக்கு ஒருமுறை பெருமளவிலான பலரக திராட்சை இரசமும் கொண்டுவரப்பட்டன. இவ்வாறான செலவுகள் ஏற்பட்டபோதும், ஏற்கெனவே மக்கள் மிகுந்த கஷ்டம் அனுபவித்துக் கொண்டிருந்தபடியால், ஆளுநனுக்கு வரவேண்டிய உணவை நான் மக்களிடமிருந்து வற்புறுத்திக் கேட்கவில்லை. “என் இறைவனே, இந்த மக்களுக்காக நான் செய்த எல்லாவற்றையும் நினைத்து, எனக்கு நன்மை செய்யும்” என்றேன்.

நெகேமியா 5:6-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் கூக்குரலையும், இந்த வார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு, என்னுடைய மனதிலே ஆலோசனைசெய்து, பிறகு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்களுடைய சகோதரர்கள்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபை கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: யூதரல்லாதவர்களுக்கு விற்கப்பட்ட யூதர்களாகிய எங்கள் சகோதரர்களை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாக மீட்டிருக்கும்போது, நீங்கள் திரும்ப உங்கள் சகோதரர்களை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்திரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாக இருந்தார்கள். பின்னும் நான் அவர்களை நோக்கி: நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய எதிரிகளாகிய யூதரல்லாதவர்கள் அவமதிக்கிறதினாலே நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா? நானும் என்னுடைய சகோதரர்களும் என்னுடைய வேலைக்காரர்களும் இப்படியா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன் கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக. நீங்கள் இன்றைக்கு அவர்களுடைய நிலங்களையும், திராட்சைத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சைரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டனையாக வாங்கிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக் கொடுத்துவிடுங்கள் என்றேன். அதற்கு அவர்கள்: நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள்; அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிட வைத்தேன். நான் என்னுடைய ஆடையை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர்; இப்படியாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாகப் போவானாக என்றேன்; அதற்குச் சபையார்கள் எல்லோரும் ஆமென் என்று சொல்லி, யெகோவாவை துதித்தார்கள்; பின்பு மக்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள். நான் யூதா தேசத்திலே ஆளுநராக இருக்க ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்கு நியமித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருடம் முதல் அவருடைய முப்பத்திரண்டாம் வருடம் வரைக்கும் இருந்த பன்னிரண்டு வருட காலங்களாக, நானும் என்னுடைய சகோதரர்களும் ஆளுநர்கள் உணவுக்காக வாங்குகிற பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை. எனக்கு முன்னிருந்த ஆளுநர்கள் மக்களுக்குப் பாரமாக இருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சைரசமும் வாங்கினதும் அன்றி, நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்களுடைய வேலைக்காரர்களும் கூட மக்களின்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததால் இப்படிச் செய்யவில்லை. ஒரு வயலையாவது நாங்கள் வாங்கவில்லை; நாங்கள் அந்த மதிலின் வேலையிலே மும்முரமாக இருந்தோம்; என்னுடைய வேலைக்காரர்கள் அனைவரும் கூட்டமாக அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள். யூதர்களும் மூப்பர்களுமான நூற்றைம்பதுபேரும், எங்களைச் சுற்றிலும் இருக்கிற யூதர்கள் அல்லாதவர்களிடமிருந்து எங்களிடத்திற்கு வந்தவர்களும் என்னுடைய பந்தியில் சாப்பிட்டார்கள். நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல்தரமான ஆறு ஆடுகளும் சமைக்கப்பட்டது; பறவைகளும் சமைக்கப்பட்டது; பத்துநாளைக்கு ஒருமுறை பலவித திராட்சைரசமும் செலவழிந்தது; இப்படியெல்லாம் இருந்தபோதும், இந்த மக்கள் பட்டபாடு கடினமாக இருந்ததால், ஆளுநர்கள் வாங்குகிற பணத்தை நான் பெற்றுக்கொள்ளவில்லை. என்னுடைய தேவனே, நான் இந்த மக்களுக்காகச் செய்த எல்லாவற்றிற்காகவும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.

நெகேமியா 5:6-19 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் அவர்களது குற்றச்சாட்டுகளைக் கேட்டதும் மிகவும் கோபமடைந்தேன். நான் என்னை அமைதிப்படுத்திக் கொண்டு பிறகு நான் பணக்காரக் குடும்பங்களிடமும் அதிகாரிகளிடமும் சென்றேன். நான் அவர்களிடம், “நீங்கள் உங்கள் சொந்த ஜனங்களிடையே உங்கள் பணத்துக்கு வட்டி தருமாறு பலவந்தப்படுத்துகிறீர்கள். இவ்வாறு செய்வதை நீங்கள் நிறுத்தவேண்டும்” என்றேன். பிறகு நான் அனைத்து ஜனங்களையும் கூடும்படி அழைத்தேன். நான் அந்த ஜனங்களிடம், “நமது யூத சகோதரர்கள் மற்ற நாடுகளுக்கு அடிமைகளாக விற்கப்பட்டனர். நாங்கள் அவர்களைத் திரும்ப விலைகொடுத்து வாங்கி, அவர்களை விடுதலைச்செய்ய எங்களால் இயன்றதைச் செய்தோம். இப்பொழுது, மீண்டும் நீங்கள் அவர்களை அடிமைகளைப்போன்று விற்றுக்கொண்டிருக்கிறீர்கள்” என்றேன். அந்தப் பணக்காரர்களும் அதிகாரிகளும் அமைதியாக இருந்தார்கள். அவர்களால் சொல்வதற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே நான் தொடர்ந்து பேசினேன். நான் அவர்களிடம், “நீங்கள் செய்துகொண்டிருப்பது சரியில்லை. நீங்கள் தேவனுக்குப் பயந்து அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். மற்ற ஜனங்கள் செய்வதுபோன்ற வெட்கப்படத்தக்கச் செயல்களை நீங்கள் செய்யக்கூடாது. எனது ஜனங்களே, எனது சகோதரர்களே, நானும் கூட அந்த ஜனங்களுக்குப் பணத்தையும் தானியத்தையும் கடனாகக் கொடுத்திருக்கிறேன். அந்தக் கடன்களுக்கு வட்டி கொடுக்குமாறு பலவந்தப்படுத்துவதை விட வேண்டும். நீங்கள் அவர்களது திராட்சைத் தோட்டங்களையும், வயல்களையும், ஒலிவ வயல்களையும், வீடுகளையும் இப்போதே திருப்பிக் கொடுக்கவேண்டும். நீங்கள் அவர்களிடமிருந்து பெற்ற வட்டியையும் திருப்பிக் கொடுக்கவேண்டும். நீங்கள் அவர்களிடம் பணம், தானியம், புதிய திராட்சைரசம் மற்றும் எண்ணெய் ஆகியவற்றுக்கு நூற்றுக்கு ஒன்று வீதம் வட்டி வசூலித்திருக்கிறீர்கள். நீங்கள் அவற்றை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டும்” என்றேன். பிறகு அந்தப் பணக்காரர்களும் அதிகாரிகளும், “நாங்கள் இவற்றைத் திருப்பிக் கொடுப்போம். நாங்கள் அவர்களிடம் மேலும் எதையும் கேட்கமாட்டோம். நெகேமியா, நீ சொன்னபடியே நாங்கள் செய்வோம்” என்றனர். பிறகு நான் ஆசாரியர்களை அழைத்தேன். நான் பணக்காரர்களையும் அதிகாரிகளையும் தாங்கள் சொன்னதைச் செய்வதாக தேவனுக்கு உறுதிமொழி அளிக்கச்செய்தேன். பிறகு நான் எனது ஆடைகளின் மடிப்புகளை உதறிப்போட்டேன். நான், “தனது வாக்குறுதியைக் காப்பாற்றாத எவரையும் தேவன் இவ்வாறே உதறிப்போடுவார். தேவன் அவர்களைத் தமது வீடுகளிலிருந்து உதறுவார். அவர்கள் தமது சம்பாத்தியத்தை எல்லாம் இழப்பார்கள். அம்மனிதன் எல்லாவற்றையும் இழப்பான்” என்றேன். நான் இவற்றைச் சொல்லி முடித்தேன். அந்த ஜனங்கள் ஒத்துக்கொண்டனர். அவர்கள் அனைவரும் “ஆமென்” என்றனர். அவர்கள் கர்த்தரை துதித்தனர். எனவே ஜனங்கள் அவர்கள் வாக்குறுதிப்படியே செய்தனர். அந்தக் காலம் முழுவதும் நான் யூதாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, நானும் என் சகோதரர்களும் ஆளுநருக்கு ஒதுக்கப்பட்டிருந்த உணவை உண்ணவில்லை. எனது உணவை வாங்குவதற்கான வரியைக் கட்டுமாறு நான் ஜனங்களைப் பலவந்தப்படுத்தவில்லை. நான், அர்தசஷ்டா ராஜாவாகிய இருபதாம் ஆண்டு முதல் முப்பத்திரெண்டாம் ஆண்டுவரை ஆளுநராக இருந்தேன். நான் 12 ஆண்டுகள் யூதாவின் ஆளுநராக இருந்தேன். ஆனால் எனக்கு முன்னால் ஆளுநராக இருந்தவர்கள் ஜனங்களது வாழ்க்கையைக் கடினமாக்கினார்கள். அந்த ஆளுநர்கள் ஒவ்வொருவரையும் ஒரு பவுண்டு வெள்ளி கொடுக்குமாறு பலவந்தப்படுத்தினர். அவர்கள் ஜனங்களிடம் உணவும் திராட்சைரசமும் கொடுக்குமாறு செய்தனர். அந்த ஆளுநர்களுக்குக் கீழே இருந்த தலைவர்களும் ஜனங்களின் வாழ்க்கையை அதிகாரம் செலுத்தி மேலும் கடினமானதாகச் செய்தனர். ஆனால் நான் தேவனுக்கு பயந்து மரியாதை செலுத்தியதால் இதைப்போன்ற செயல்களைச் செய்யவில்லை. நான் எருசலேம் சுவரைக் கட்டுவதில் கடினமாக வேலை செய்தேன். எனது ஜனங்கள் அனைவரும் சுவரில் வேலை செய்வதற்காக அங்கே கூடினார்கள். நாங்கள் எவரிடமிருந்தும் எந்த நிலத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை. நான் ஒழுங்காக 150 யூதர்களை எனது பந்தியில் உண்ண வைத்தேன். சுற்றியிருந்த தேசங்களிலிருந்து எங்களிடத்தில் வந்தவர்களுக்கு உணவு கொடுத்தேன். ஒவ்வொரு நாளும் நான் இவ்வளவு உணவு தான் எனது பந்தியில் பரிமாறவேண்டும் என்று தீர்மானித்தேன். ஒரு பசு, ஆறு நல்ல ஆடு, பல வகை பறவைகள் ஆகியவை. பத்து நாட்களுக்கு ஒருமுறை எனது பந்தியில் எல்லாவகை திராட்சைரசமும் கொண்டு வரவேண்டும். எனினும் நான் ஆளுநருக்கு ஒதுக்கப்படவேண்டிய உணவே வேண்டுமென வற்புறுத்தியதில்லை. எனது உணவுக்காகச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்துமாறு நான் ஜனங்களை எப்பொழுதும் வற்புறுத்தியதில்லை. ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலைச் செய்கிறார்கள் என்பதை நான் அறிவேன். தேவனே, இந்த ஜனங்களுக்காக நான் செய்த நல்லவற்றை எல்லாம் நினைத்துப் பாரும்.