நெகேமியா 9:1-3

நெகேமியா 9:1-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்த மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இஸ்ரவேல் புத்திரர் உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாய்க் கூடிவந்தார்கள். இஸ்ரவேல் சந்ததியார் மறுஜாதியாரையெல்லாம் விட்டுப்பிரிந்து வந்து நின்று, தங்கள் பாவங்களையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள். அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவஅறிக்கைபண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.

நெகேமியா 9:1-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேல் மக்கள் அதே மாதமாகிய ஏழாம் மாதம் இருபத்து நான்காம் நாளில், உபவாசித்துத் துக்கவுடை உடுத்தித் தங்கள் தலைகளில் புழுதியைப் போட்டுக்கொண்டு, ஒன்றுகூடி வந்தார்கள். இஸ்ரயேலரின் சந்ததிகள் அந்நியரிலிருந்தும், தங்களை வேறுபிரித்துக் கொண்டார்கள். அவர்கள் எழுந்து நின்று தங்கள் பாவங்களையும், தங்கள் முற்பிதாக்களின் கொடுமையையும் அறிக்கை செய்தார்கள். அவர்கள் தாங்கள் நின்ற இடங்களிலேயே நின்றபடி, ஒரு நாளில் கால்பங்கு நேரத்திற்கு தங்கள் இறைவனாகிய யெகோவாவின் சட்டப் புத்தகத்திலிருந்து வாசித்தார்கள். இன்னுமொரு கால்பங்கு நேரத்திற்குத் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுத் தங்கள் இறைவனாகிய யெகோவாவை வழிபட்டார்கள்.

நெகேமியா 9:1-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த மாதம் இருபத்துநான்காம் தேதியிலே இஸ்ரவேல் மக்கள் உபவாசம்செய்து, சணல் ஆடை உடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாகக் கூடிவந்தார்கள். இஸ்ரவேல் சந்ததியார்கள் யூதரல்லாதவர்களை எல்லாம் விட்டுப்பிரிந்து வந்து நின்று, தங்களுடைய பாவங்களையும், தங்கள் முன்னோர்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள். அவர்கள் எழுந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது அந்நாளின் காற்பகுதிவரை அவர்களுடைய தேவனாகிய யெகோவாவின் நியாயப்பிரமாணப் புத்தகம் வாசிக்கப்பட்டது; அடுத்த காற்பகுதிவரை அவர்கள் பாவஅறிக்கைசெய்து, தங்கள் தேவனாகிய யெகோவாவை குனிந்து வணங்கினார்கள்.

நெகேமியா 9:1-3 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு அதே மாதத்தின் 24வது நாள் இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு நாள் உபவாசத்திற்காகக் கூடினார்கள். அவர்கள் துக்கத்திற்குரிய ஆடையை அணிந்தனர்; தங்கள் தலையில் சாம்பலைப் போட்டுக்கொண்டனர். இதன் மூலம் தாங்கள் துக்கமாகவும், கலக்கமாகவும் இருப்பதாகக் காட்டினார்கள். இஸ்ரவேல் சந்ததியினர் அயல் நாட்டினவர்களிடமிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டனர். இஸ்ரவேலர்கள் ஆலயத்தில் எழுந்து நின்று தங்களது பாவங்களையும் தங்கள் முற்பிதாக்களின் பாவங்களையும் அறிக்கையிட்டனர். அவர்கள் மூன்று மணி நேரம் எழுந்து நின்று, ஜனங்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சட்டப்புத்தகத்தை வாசித்தனர். பிறகு மேலும் மூன்று மணிநேரம் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர். தங்கள் தேவனாகிய கர்த்தரை குனிந்து தொழுதுகொண்டனர்.