பிலிப்பியர் 2:9-13

பிலிப்பியர் 2:9-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.

பிலிப்பியர் 2:9-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதனாலே இறைவன் அவரை மிக மேலான இடத்திற்கு உயர்த்தி, எல்லாப் பெயர்களையும்விட உன்னதமான பெயரை அவருக்குக் கொடுத்தார். அதனால் இயேசுவின் பெயருக்கு ஒவ்வொரு முழங்காலும் முடங்கும். பரலோகத்திலும் பூமியிலும் பூமியின்கீழும் உள்ளவர்களின் எல்லா முழங்கால்களும் முடங்கும். பிதாவாகிய இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி, ஒவ்வொரு நாவும் இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று அறிக்கையிடும். ஆகையால் என் அன்புக்குரிய நண்பர்களே, நீங்கள் எப்போதும் கீழ்ப்படிகிறது போலவே, நான் இருக்கும்போது மட்டுல்ல, நான் இப்போது இல்லாதிருக்கையிலும் அதிகமாகக் கீழ்ப்படிந்திருங்கள். தொடர்ந்து உங்கள் இரட்சிப்பை பயத்துடனும், நடுக்கத்துடனும் செயல்படுத்துங்கள். ஏனெனில், இறைவனே தனது நல்ல நோக்கத்திற்கு ஏற்றபடி, நீங்கள் செயலாற்றுவதற்கான விருப்பங்களையும், ஆற்றலையும் கொடுத்து உங்களுக்குள் செயலாற்றுகிறார்.

பிலிப்பியர் 2:9-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகவே, தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானத்தில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும், பூமியின் கீழ் உள்ளவைகளுடைய முழங்கால்கள் எல்லாம் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று நாக்குகளெல்லாம் அறிக்கைபண்ணுவதற்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்கு அருகில் இருக்கும்பொழுது மட்டுமில்லை, நான் தூரத்தில் இருக்கும்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனென்றால், தேவனே தம்முடைய தயவுள்ள விருப்பத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராக இருக்கிறார்.

பிலிப்பியர் 2:9-13 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனுக்குக் கிறிஸ்து பணிந்தார். ஆகையால் தேவன் அவரை மிக முக்கியமான இடத்துக்கு உயர்த்திவிட்டார். தேவன் அவரது பெயரை மற்ற எல்லா பெயர்களையும் விட உயர்வாக்கினார். அனைவரும் இயேசுவின் பெயருக்கு முன்பு தலைகுனிந்தே இருக்க வேண்டும் என்பதற்காகவே தேவன் இதனைச் செய்தார். பரலோகத்திலும், பூலோகத்திலும், பூமிக்குக் கீழுள்ள உலகத்திலும் உள்ளவர்கள் அவரைப் பணிவார்கள். “இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர்” என்று அனைவரும் அறிக்கை செய்வர். அவர்கள் இதனைச் சொல்லும்போது பிதாவாகிய தேவனுக்கு மகிமை சேரும். என்னுடைய அன்பு நண்பர்களே! எப்பொழுதும் நீங்கள் கீழ்ப்படிந்து இருங்கள். உங்களோடு நான் இருந்தபோது நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிருந்தீர்கள். உங்களோடு நான் இல்லாதபோது நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நான் தூரமாயிருக்கிறபோது நீங்கள் தேவனிடம் மரியாதையும் அச்சமும் கொண்டு உங்கள் இரட்சிப்பு நிறைவேற முயற்சி செய்யுங்கள். ஆமாம், தேவன் உங்களில் பணியாற்றுகிறார். அவர் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும், செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறார். அவற்றைச் செய்ய உங்களுக்கு தேவனே பலத்தைக் கொடுக்கிறார்.