நீதிமொழிகள் 19:1-12
நீதிமொழிகள் 19:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி. ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான். மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும். செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான். பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன். தரித்திரனை அவனுடைய சகோதரர் எல்லாரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாய் அவன் சிநேகிதர் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே. ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான். பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது. மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை. ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
நீதிமொழிகள் 19:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வஞ்சக உதடுகளுள்ள மூடரைப் பார்க்கிலும், குற்றமற்றவராய் நடக்கிற ஏழையே சிறந்தவர். அறிவில்லாமல் எதையாவது பற்றி வைராக்கியம் கொள்வது நல்லதல்ல; அவசரப்பட்டால் வழிதவறி விடுவது எவ்வளவு நிச்சயம்! ஒருவருடைய மூடத்தனமே அவருடைய வாழ்க்கையை பாழாக்குகிறது; ஆனாலும் அவர்களுடைய இருதயமோ யெகோவாவுக்கு எதிராகக் கோபம்கொள்கிறது. செல்வம் அநேக நண்பர்களைக் கொண்டுவரும்; ஆனால் ஏழைகளை நெருங்கிய நண்பரும் கைவிடுவார்கள். பொய்ச்சாட்சி சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்; பொய்யைத் தாராளமாய்ப் பேசுபவரும் தப்பமுடியாது. ஆளுநரின் தயவைப் பெற அநேகர் நாடுகின்றனர்; அன்பளிப்பு கொடுப்பவருக்கு அனைவரும் நண்பர்கள். ஏழைகளின் உறவினர்கள் அவர்களை வெறுக்கிறார்கள், அவர்களுடைய சிநேகிதர்கள் எவ்வளவு அதிகமாய் அவர்களைப் புறக்கணிப்பார்கள்! ஏழைகளோ அவர்களிடம் கெஞ்சினாலும், அவர்களுடைய நண்பர்கள் போய்விடுகிறார்கள். ஞானத்தைப் பெறுகிறவர் தன் வாழ்வை நேசிக்கிறார்கள், புரிந்துகொள்ளுதலைக் காப்பவர்கள் நன்மையடைவார்கள். பொய்ச்சாட்சி சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள்; பொய்யைத் தாராளமாய்ப் பேசுபவரும் தப்பமுடியாது. ஆடம்பர வாழ்வு மதியீனருக்குத் தகுந்ததல்ல; ஒரு அடிமை இளவரசர்களை ஆட்சி செய்வது எவ்வளவு மோசமானது! ஒருவருடைய ஞானம் அவருக்கு பொறுமையைக் கொடுக்கிறது; குற்றத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பது அவர்களுக்கு மகிமை. அரசனின் கடுங்கோபம் ஒரு சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; ஆனால் அவனுடைய தயவோ புல்லின்மேலுள்ள பனியைப்போலிருக்கும்.
நீதிமொழிகள் 19:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன். ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான். மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும். செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான். பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன். தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே. ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான். பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது. மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை. ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.
நீதிமொழிகள் 19:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒரு முட்டாளாக இருந்து பிறரை ஏமாற்றிப் பொய் சொல்கிறவனாக இருப்பதைவிட ஏழையாகவும் நேர்மையானவனாகவும் இருப்பது நல்லது. சிலவற்றைப்பற்றி பரவசப்படுவது போதாது. நீ செய்வது என்ன என்று உனக்குத் தெரியவேண்டும். எதையாவது அவசரமாகச் செய்வாயானால் அதைத் தவறாகச் செய்துவிடுவாய். ஒருவனது சொந்த முட்டாள்தனம் அவனது வாழ்வை அழித்துவிடும். ஆனால் அவன் கர்த்தர் மீது பழி சொல்லுவான். ஒருவன் செல்வந்தனாக இருந்தால், அவனது செல்வம் பல நண்பர்களைத் தரும். ஆனால் ஒருவன் ஏழையாக இருந்தால் எல்லா நண்பர்களும் அவனைவிட்டு விலகுவார்கள். இன்னொருவனுக்கு எதிராகப் பொய் சொல்பவன் தண்டிக்கப்படுவான். பொய் சொல்பவனுக்குப் பாதுகாப்பில்லை. ஆள்பவரோடு நட்புக்கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். மேலும், பரிசு தருபவரோடு நட்புக்கொள்ள ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். ஒருவன் ஏழையாக இருந்தால், அவனது குடும்பம் கூட அவனுக்கு எதிராக இருக்கும். அவனது நண்பர்களும்கூட அவனை விட்டு விலகுவார்கள். அந்த ஏழை அவர்களிடம் உதவி கேட்கலாம். எனினும் அவனருகில் அவர்கள் போகமாட்டார்கள். ஒருவன் உண்மையிலேயே தன்னை நேசித்தால், அறிவைப்பெறக் கடுமையாக உழைக்கவேண்டும். அவன் கடினமாக முயற்சிசெய்து புரிந்துகொள்ளுதலை அடையவேண்டும். அவன் அதற்குரிய வெகுமதியைப் பெறுவான். பொய்சாட்சி சொல்பவன் தண்டிக்கப்படுவான். தொடர்ந்து பொய்சொல்பவன் அழிக்கப்படுவான். ஒரு முட்டாள் செல்வந்தனாகக் கூடாது. இது ஒரு அடிமை இளவரசனை ஆள்வதைப் போன்றது. ஒருவன் அறிவுள்ளவனாக இருந்தால், அந்த அறிவு அவனுக்குப் பொறுமையைத் தரும். அவனுக்குத் தீமை செய்தவர்களை மன்னிப்பது அருமையானது. ஒரு ராஜா கோபத்தோடு இருக்கும்போது, அது சிங்கத்தின் கெர்ச்சிப்பு போன்று இருக்கும். ஆனால் அவன் உன்னோடு மகிழ்ச்சியாக இருப்பது, மென்மையாக மழை பொழிவதுபோன்று இருக்கும்.