நீதிமொழிகள் 2:1-9

நீதிமொழிகள் 2:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார். அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார். அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.

நீதிமொழிகள் 2:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் மகனே, ஞானத்திற்கு உன் செவிசாய்த்து, புரிந்துகொள்ளுதலில் உன் இருதயத்தைச் செலுத்தி, நீ என் ஞானத்தை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன் உள்ளத்தில் சேர்த்துவை. உண்மையில், நீ நுண்ணறிவுக்காக வேண்டுதல்செய்து, புரிந்துகொள்ளுதலுக்காக மன்றாடி, சுத்த வெள்ளியைத் தேடுவதுபோல் தேடி, புதையலை ஆராய்வதுபோல அதை ஆராய்ந்தால், அப்பொழுது நீ யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து விளங்கிக்கொள்வாய்; இறைவனைப்பற்றிய அறிவைக் கண்டுகொள்வாய். ஏனெனில் யெகோவாவே ஞானத்தைத் தருபவர்; அறிவும் விவேகமும் அவருடைய வாயிலிருந்தே வருகின்றன. அவர் நீதிமான்களுக்கு வெற்றியைக் கொடுத்து, குற்றமற்றவர்களாய் நடப்பவர்களுக்கு அவர் கேடயமாயிருந்து, அவர் நியாயத்தின் வழியைக் காத்துக்கொள்கிறார்; தமக்கு உண்மையாய் இருப்பவர்களின் வழியைப் பாதுகாக்கிறார். அப்பொழுது நீ நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றையும் ஒவ்வொரு நல்ல வழியையும் விளங்கிக்கொள்வாய்.

நீதிமொழிகள் 2:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக, நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால், அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். யெகோவா ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும். அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாக இருக்கிறார். அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார். அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய்.

நீதிமொழிகள் 2:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

என் மகனே நான் சொல்லுகின்றவற்றை ஏற்றுக்கொள். என் கட்டளைகளை நினைவில்கொள். ஞானத்தின் குரலைக் கேட்டு உன்னால் முடிந்தவரை புரிந்துகொள்ள முயற்சிசெய். ஞானத்தைக் கூப்பிடு. புரிந்துகொள்ளுவதற்காகச் சத்தமிடு. ஞானத்தை வெள்ளியைப்போல் தேடு, மறைந்துள்ள புதையல்களைத் தேடுவதுபோன்று தேடு. நீ இவற்றைச் செய்தால், கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வாய். நீ உண்மையிலேயே தேவனைப்பற்றிக் கற்றுக்கொள்ளலாம். கர்த்தர் ஞானத்தைக்கொடுக்கிறார். அவரது வாயிலிருந்து அறிவும் புரிந்துகொள்ளுதலும் வருகின்றன. நல்லவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் அவர் உதவி செய்கிறார். மற்றவர்களிடம் நேர்மையாக நடந்துகொள்பவர்களை அவர் காப்பாற்றுகிறார். அவர் தனது பரிசுத்தமான ஜானங்களைக் காக்கிறார். கர்த்தர் உனக்கு ஞானத்தைக்கொடுப்பார். அப்போது நீ நல்லவற்றையும், நேர்மையானவற்றையும், சரியானவற்றையும் புரிந்துகொள்ளுவாய்.