நீதிமொழிகள் 30:24-28
நீதிமொழிகள் 30:24-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“பூமியில் மிகச்சிறிய உயிரினங்கள் நான்கு உண்டு, ஆனாலும் அவை மிகவும் ஞானமுள்ளவை: எறும்புகள் மிக வலிமை குறைந்த உயிரினங்கள்; ஆனாலும், அவை கோடைகாலத்தில் தங்கள் உணவைச் சேமித்து வைக்கின்றன; குறுமுயல்களும் வலுக்குறைந்த பிராணிகளே; ஆனாலும், உயரமான கற்பாறைகளின் வெடிப்பில் தங்களுக்கு வீடுகளை அமைக்கின்றன. வெட்டுக்கிளிகளுக்கோ அரசன் இல்லை, ஆனாலும் அவை ஒன்றாய் அணிவகுத்துச் செல்கின்றன; பல்லியையோ கையால் பிடித்துக்கொள்ளலாம், ஆனாலும் அது அரச மாளிகைகளிலும் காணப்படுகிறது.
நீதிமொழிகள் 30:24-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பூமியில் சிறியவைகளாக இருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு. அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும், பெலமில்லாத உயிரினமாக இருந்தும், தங்களுடைய வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுயல்களும், ராஜா இல்லாமல் இருந்தும், கூட்டம் கூட்டமாகப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும், தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி, அரசர்கள் அரண்மனைகளில் இருக்கிற சிலந்திப் பூச்சியுமே.
நீதிமொழிகள் 30:24-28 பரிசுத்த பைபிள் (TAERV)
உலகில் உள்ள மிகச் சிறியவை நான்கு, ஆனால் இவை மிகவும் ஞானமுடையவை. எறும்புகள் மிகச் சிறியவை, பலவீனமானவை. எனினும் அவை தங்களுக்குத் தேவையான உணவைக் கோடைக்காலம் முழுவதும் சேகரித்துக்கொள்ளும். குழி முயல்கள் மிகச்சிறிய மிருகம், ஆனாலும் இதுதன் வீட்டைப் பாறைகளுக்கு இடையில் கட்டிக்கொள்ளும். வெட்டுக்கிளிகளுக்கு ராஜா இல்லை. எனினும் அவை சேர்ந்து வேலைச்செய்கின்றன. பல்லி மிகச் சிறிது. அவற்றை நம் கையால் பிடித்துக்கொள்ளலாம். எனினும் அவை அரண்மனையிலும் வசிக்கின்றன.
நீதிமொழிகள் 30:24-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும், சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும், ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும், தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே.