சங்கீதம் 107:1-7
சங்கீதம் 107:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; அவர் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள், எதிரிகளின் கையிலிருந்து அவரால் விடுதலையாக்கப்பட்டவர்கள், கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருக்கும் பல நாடுகளிலிருந்தும் சேர்க்கப்பட்டவர்கள் இதைச் சொல்லட்டும். சிலர் தாங்கள் குடியிருக்கத்தக்க பட்டணத்திற்குப் போகும் வழியைக் காணாமல், பாலைவனத்தின் பாழ்நிலங்களிலே அலைந்து திரிந்தார்கள். அவர்கள் பசியாயும் தாகமாயும் இருந்தார்கள், அவர்களுடைய ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை விடுவித்தார். குடியிருக்கத்தக்க ஒரு பட்டணத்திற்கு அவர் அவர்களை பாதுகாப்பாக வழிநடத்தினார்.
சங்கீதம் 107:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. யெகோவாவால் எதிரியின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு, கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்வார்களாக. அவர்கள் வாழும் ஊரைக்காணாமல், வனாந்திரத்திலே பாலைவனவழியாக, பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும் அலைந்து திரிந்தார்கள். தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்தார். வாழும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.
சங்கீதம் 107:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்! அவரது அன்பு என்றென்றைக்கும் உள்ளது! கர்த்தரால் மீட்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் இதைத்தான் சொல்லவேண்டும். கர்த்தர் பகைவரிடமிருந்து அவர்களைக் காப்பாற்றினார். கர்த்தர் அவரது ஜனங்களைப் பல்வேறு வித்தியாசமான நாடுகளிலுமிருந்து ஒருமித்துக் கூடும்படிச் செய்தார். அவர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமிருந்தும் வடக்கிலும் தெற்கிலுமிருந்தும் வரச்செய்தார். அவர்களுள் சிலர் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள். அவர்கள் வாழ ஒரு இடம் தேடினார்கள். ஆனால் அவர்களால் ஒரு நகரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் பசியாலும் தாகத்தாலும் வருந்தி, சோர்வடைந்து போனார்கள். எனவே அவர்கள் உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டார்கள். அவர் அவர்களின் தொல்லைகளிலிருந்து அவர்களை மீட்டார். தேவன் அந்த ஜனங்களை அவர்கள் வாழவிருக்கும் நகரத்திற்கு நேராக நடத்தினார்.
சங்கீதம் 107:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு, கிழக்கிலும் மேற்கிலும், வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்லக்கடவர்கள். அவர்கள் தாபரிக்கும் ஊரைக் காணாமல், வனாந்தரத்திலே அவாந்தரவழியாய், பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள். தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார். தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.