சங்கீதம் 107:8-43
சங்கீதம் 107:8-43 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களின் நிமித்தமும் நன்றி செலுத்துவார்களாக. ஏனெனில் தாகமுள்ளவர்களை அவர் திருப்தியாக்குகிறார்; பசியாய் இருப்பவர்களை நன்மையினால் நிரப்புகிறார். சிலர் இருளிலும் காரிருளிலும் உட்கார்ந்தார்கள், சிறைக் கைதிகள் இரும்புச் சங்கிலிகளில் கட்டுண்டு வேதனைப்பட்டார்கள். ஏனெனில், அவர்கள் இறைவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாய்க் கலகம்செய்து, மகா உன்னதமான இறைவனின் ஆலோசனையை அசட்டைபண்ணினார்கள். ஆகவே அவர் அவர்களைக் கடினமான வேலைக்குட்படுத்தினார்; அவர்கள் இடறி விழுந்தார்கள்; அவர்களுக்கு உதவிசெய்ய ஒருவருமே இருக்கவில்லை. அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார். அவர் அவர்களை, இருட்டிலிருந்தும் ஆழ்ந்த இருளிலிருந்தும் வெளியே கொண்டுவந்து, அவர்களுடைய சங்கிலிகளை அறுத்தெறிந்தார். யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும் நன்றி செலுத்துவார்களாக. ஏனெனில் யெகோவா வெண்கல வாசல்களை உடைத்தெறிகிறார்; இரும்புத் தாழ்ப்பாள்களை வெட்டிப் பிளக்கிறார். சிலர் தங்களுடைய கலக வழிகளின் காரணமாக மூடராகி, தங்கள் அநியாயத்தினிமித்தம் உபத்திரவத்தை அனுபவித்தார்கள். அவர்கள் எல்லா உணவையும் அருவருத்து, மரண வாசல்களை நெருங்கினார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார். அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவர்களைச் சுகப்படுத்தினார்; அவர் அவர்களை மரணக் குழிகளிலிருந்து தப்புவித்தார். யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும் நன்றி செலுத்துவார்களாக. அவர்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிட்டு, மகிழ்ச்சியின் பாடல்களால் அவருடைய செயல்களை அறிவிக்கட்டும். சிலர் கப்பல்களில் ஏறிக் கடல்மேல் போனார்கள்; அவர்கள் கடலின் திரளான தண்ணீரின்மேல் தொழில் செய்தார்கள். அவர்கள் யெகோவாவினுடைய செயல்களையும், ஆழத்தில் அவர் செய்த புதுமையான செயல்களையும் கண்டார்கள். ஏனெனில் அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல்காற்று எழும்பிற்று; அது அலைகளை உயர எழச்செய்தது. அவர்கள் வானங்கள்வரை ஏறி, ஆழங்கள்வரை இறங்கிச் சென்றனர்; அவர்களுடைய ஆபத்தில் அவர்களுடைய தைரியம் பயனற்றுப்போனது. அவர்கள் வெறியரைப்போல் உருண்டு புரண்டார்கள்; அவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போயிற்று. அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார். அவர் புயல்காற்றை தென்றல்போல் அமைதியாக்கினார்; கடலின் அலைகள் அடங்கிப்போயின. அது அமைதியானபோது அவர்கள் மகிழ்ந்தார்கள்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்குப் போக அவர் அவர்களுக்கு வழிகாட்டினார். யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும் நன்றி செலுத்துவார்களாக. மக்களின் சபையில் அவர்கள் அவரை புகழ்ந்துயர்த்தி, தலைவர்களின் ஆலோசனை சபையிலே அவரைத் துதிக்கட்டும். யெகோவா ஆறுகளைப் பாலைவனமாகவும், சுரக்கும் நீரூற்றுகளை வறண்ட தரையாகவும் மாற்றினார், செழிப்பான நாட்டை உவர் நிலமாக மாற்றினார்; அங்கே வசித்தவர்களின் கொடுமையின் நிமித்தமே அவ்வாறு செய்தார். அவர் பாலைவனத்தை நீர்த்தடாகங்களாகவும், வறண்ட நிலத்தை சுரக்கும் நீரூற்றாகவும் மாற்றினார். பசியுள்ளவர்களை அங்கே குடியிருக்கும்படி கொண்டுவந்தார்; அங்கே அவர்கள் தாங்கள் குடியிருக்கத்தக்க ஒரு பட்டணத்தைக் கட்டினார்கள். அவர்கள் வயல்வெளிகளில் விதைத்து, திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினார்கள்; அவை செழிப்பான அறுவடையைக் கொடுத்தன. யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார், அவர்கள் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது; அவர்களுடைய மந்தைகள் குறைந்துபோக அவர் விடவில்லை. பின்பு இறைவனது மக்களின் எண்ணிக்கை குறைந்தது, அவர்கள் ஒடுக்குதலினாலும் இடுக்கணினாலும் கவலையினாலும் சிறுமையடைந்தார்கள்; பெருமையான அதிகாரிகளின்மேல் இகழ்வை வரப்பண்ணும் அவரே, அவர்களைப் பாதையற்ற பாழ்நிலத்தில் அலையப்பண்ணினார். ஆனால் எளியவர்களை அவர்களுடைய துன்பத்திலிருந்து தூக்கியெடுத்து, அவர்களுடைய குடும்பங்களை மந்தையைப்போல் பெருகப்பண்ணினார். நீதிமான்கள் அதைக்கண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் கொடியவர்கள் அனைவரும் வாயடைத்துப் போய்விடுவார்கள். ஞானமுள்ளவன் எவனோ அவன் இதைக் கவனித்துக் கொள்ளட்டும்; யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பின் செயல்களைப்பற்றி சிந்திக்கட்டும்.
சங்கீதம் 107:8-43 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று, அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள், காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள். அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; உதவிசெய்ய ஒருவரும் இல்லாமல் விழுந்து போனார்கள். தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றினார். காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து, அவர்களுடைய கட்டுகளை அறுத்தார். யெகோவா வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று, அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும் தங்களுடைய அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள். அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள். தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார். அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக. கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே, அவர்கள் யெகோவாவுடைய செயல்களையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கச்செய்யும். அவர்கள் வானத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது. குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது. அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் விரும்பிய துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார். அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, மக்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக. அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும், குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார். அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி, பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி, வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும். அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகங்கள் குறையாமலிருக்கச்செய்கிறார். பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள். அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து, வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து, எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவனுடைய வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார். உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும். எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்; ஞானவான்கள் யெகோவாவுடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
சங்கீதம் 107:8-43 பரிசுத்த பைபிள் (TAERV)
அவர் ஜனங்களுக்காகச் செய்த வியக்கத்தகு காரியங்களுக்காகவும் அவரது அன்பிற்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுங்கள். தேவன் தாகமடைந்த ஆத்துமாவைத் திருப்திப்படுத்துகிறார். பசியுள்ள ஆத்துமாவை நன்மைகளால் தேவன் நிரப்புகிறார். தேவனுடைய ஜனங்களில் சிலர் சிறை வாசிகளாக இருந்தார்கள். அவர்கள் இருண்ட சிறைகளுக்குள் கம்பிகளுக்குப்பின்னே அடைக்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் தேவன் சொன்னவற்றிற்கு எதிராகப் போராடினார்கள். மிக உன்னதமான தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்க மறுத்தார்கள். அவர்கள் செய்த காரியங்களால் தேவன் அந்த ஜனங்களின் வாழ்க்கையைக் கடினமாக்கினார். அவர்கள் இடறி வீழ்ந்தார்கள். அவர்களுக்கு உதவ ஒருவனும் இருக்கவில்லை. அந்த ஜனங்கள் துன்பத்தில் சிக்குண்டிருந்தார்கள். அவர்கள் கர்த்தரிடம் உதவி வேண்டினார்கள். தேவன் அவர்கள் துன்பங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றினார். அவர்களை இருண்ட சிறைகளிலிருந்து தேவன் வெளியேற்றினார். அவர்களைக் கட்டியிருந்த கயிறுகளை தேவன் அறுத்தெறிந்தார். அவரது அன்பிற்காகவும் அவர் ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்களுக்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுங்கள். நாம் நமது பகைவரை முறியடிப்பதற்கு தேவன் உதவுகிறார். அவர்களின் வெண்கலக் கதவுகளை தேவனால் உடைக்க முடியும். அவர்களின் வாயிற் கதவுகளின் இரும்புக் கம்பிகளை தேவனால் சிதறடிக்க முடியும் சிலர் தங்கள் பாவங்களின் காரணமாக அறிவற்றவர்களாக மாறினார்கள். தங்களுடைய குற்றங்களுக்காக அவர்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். அந்த ஜனங்கள் உண்ண மறுத்தார்கள். அவர்கள் மரிக்கும் நிலையை அடைந்தார்கள். அவர்கள் துன்பத்தில் சிக்குண்டிருந்தார்கள். கர்த்தரை நோக்கி உதவிக்கென வேண்டினார்கள். அவர் அவர்களைத் துன்பங்களினின்று விடுவித்தார். தேவன் தமது வார்த்தையினால் கட்டளையிட்டு, அவர்களைக் குணமாக்கினார். எனவே அந்த ஜனங்கள் கல்லறையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள். அவரது அன்பிற்காகவும், அவர் ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்களுக்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுங்கள். அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் பலிகளைச் செலுத்தி கர்த்தருக்கு நன்றி கூறுங்கள். கர்த்தர் செய்தவற்றை மகிழ்ச்சியோடு கூறுங்கள். சில ஜனங்கள் கடலைக் கடந்து படகுகளில் சென்றார்கள். பெருங்கடலின் குறுக்கே வேலைகளின் பொருட்டு அவர்கள் சென்றார்கள். கர்த்தர் செய்யக்கூடியதை அந்த ஜனங்கள் கண்டார்கள். கடலில் அவர் செய்த வியக்கத்தக்க காரியங்களை அவர்கள் கண்டார்கள். தேவன் கட்டளையிட்டார், ஒரு பெருங்காற்று வீச ஆரம்பித்தது. அலைகள் உயரமாக, மேலும் உயரமாக எழும்பின. அலைகள் அவர்களை வானத்திற்கு நேராகத் தூக்கி, மீண்டும் கீழே விழச் செய்தது. மனிதர்கள் தங்கள் தைரியத்தை இழக்கும்படி ஆபத்தாக புயல் வீசிற்று. அவர்கள் நிலைதளர்ந்து குடிவெறியர்களைப் போல வீழ்ந்தார்கள். மாலுமிகளாகிய இவர்களுடைய திறமை வீணாய்போயிற்று. அவர்கள் துன்பத்தில் இருந்தார்கள். எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டார்கள். அவர்கள் துன்பங்களிலிருந்து அவர் அவர்களைக் காப்பாற்றினார். தேவன் புயலை நிறுத்தினார். அவர் அலைகளை அமைதிப்படுத்தினார். கடல் அமைதியுற்றதைக் கண்டு மாலுமிகள் மகிழ்ந்தார்கள். அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு தேவன் அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார். அவரது அன்பிற்காகவும், அவரது ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்ளுக்காகவும் கர்த்தருக்கு நன்றிகூறுங்கள். பெரிய கூட்டத்தில் தேவனை வாழ்த்துங்கள். முதிய தலைவர்கள் ஒன்றுகூடும்போது அவரை வாழ்த்துங்கள். தேவன் நதிகளைப் பாலைவனமாக்கினார். நீரூற்றுக்கள் பெருக்கெடுப்பதை தேவன் நிறுத்தினார். தேவன் வளமிக்க தேசத்தை மாற்றினார். அது பயனற்ற உப்பு நிலமாக மாறிற்று. ஏனெனில் அங்குத் தீயோர் வாழ்ந்தனர். தேவன் பாலைவனத்தை மாற்றினார். அது குளங்களுள்ள நிலம் ஆயிற்று. தேவன் உலர்ந்த நிலத்திலிருந்து நீரூற்றுக்களில் தண்ணீர் புறப்படச் செய்தார். தேவன் பசியுள்ள ஜனங்களை அந்த நல்ல தேசத்திற்கு வழிநடத்தினார். அவர்கள் அங்கு வாழ ஒரு நகரத்தை அமைத்தார்கள். அவர்கள் வயல்களில் விதைகளை நட்டார்கள். அவர்கள் வயல்களில் திராட்சைகளை நட்டார்கள். அவர்கள் நல்ல அறுவடை செய்தார்கள். தேவன் அந்த ஜனங்களை ஆசீர்வதித்தார். அவர்கள் குடும்பங்கள் பெருகின. அவர்களுக்குப் பற்பல மிருகங்கள் இருந்தன. திடீரென ஏற்பட்ட பேரிழப்பினாலும், துன்பங்களினாலும், அவர்கள் குடும்பங்கள் குறுகி பெலவீனமாயின. தேவன் அவர்கள் தலைவர்களை அவமானப்படுத்தி, வெட்கப்படச் செய்தார். பாதைகளற்ற பாலைவனத்தின் வழியாக அவர்கள் அலையும்படி தேவன் செய்தார். பின்பு தேவன் அந்த ஏழை ஜனங்களை அவர்களது துயரங்களிலிருந்து மீட்டார். இப்போது அவர்கள் குடும்பங்கள் ஆட்டு மந்தைகளைப் போல் பெருகியுள்ளன. நல்ல ஜனங்கள் இதைக்கண்டு மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் தீய ஜனங்களோ இதைக் காணும்போது, என்ன சொல்வதென்று அறியார்கள். ஒருவன் ஞானமுள்ளவனாக இருந்தால் இக்காரியங்களை நினைவுகூருவான். அப்போது தேவனுடைய அன்பு உண்மையாகவே இத்தகையதென்று புரிந்துகொள்ளத் தொடங்குவான்.
சங்கீதம் 107:8-43 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று, அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள், அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள். அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; சகாயரில்லாமல் விழுந்து போனார்கள். தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார். அந்தகாரத்திலும் மரணஇருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார். கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று, அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும் தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள். அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள். தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார். அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக. கப்பலேறி, கடல்யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே, அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். அவர் கட்டளையிடப் பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும். அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்து போகிறது. வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது. அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார். அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக. அவர் ஆறுகளை அவாந்தரவெளியாகவும், நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும், குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர் நிலமாகவும் மாற்றுகிறார். அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி, பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி, வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும். அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார். பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள். அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி, வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து, எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப் போலாக்குகிறார். உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும். எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.