சங்கீதம் 119:1-10
சங்கீதம் 119:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
குற்றமற்றவர்களாய் வாழ்ந்து, யெகோவாவினுடைய சட்டத்தின்படி நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவருடைய நியமங்களைக் கைக்கொண்டு, தங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தவறு செய்யாமல் அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். நாங்கள் உமது ஒழுங்குவிதிகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்றே நீர் அவைகளைக் கொடுத்தீர். ஐயோ, உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும்படி, என் வழிகள் உறுதியாய் இருந்திருந்தால் நலமாயிருக்கும். உமது கட்டளைகளையெல்லாம் நான் கவனத்தில் கொள்ளும்போது, நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன். உமது நீதியான சட்டங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, நேர்மையான இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன். நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்; என்னை முற்றிலும் கைவிடாதேயும். வாலிபர் தன் நடத்தையை எப்படி சுத்தமாய்க் காத்துக்கொள்ள முடியும்? உமது வார்த்தையின்படி வாழ்வதினால்தானே. நான் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன்; உமது கட்டளைகளில் இருந்து என்னை வழிவிலகிப் போகவிடாதேயும்.
சங்கீதம் 119:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவுடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம வழியில் நடப்பவர்கள் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி நீர் கற்றுக்கொடுத்தீர். உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும். நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாமலிரும். வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே. என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும்.
சங்கீதம் 119:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அந்த ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள். கர்த்தருடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள். அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை. அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள். கர்த்தாவே, நீர் எங்களுக்கு உமது கட்டளைகளைக் கொடுத்தீர். அந்தக் கட்டளைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியுமாறு கூறினீர். கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன். நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை. உமது நியாயத்தையும் நன்மையையும் குறித்துப் படிக்கும்போது உம்மை உண்மையாகவே மகிமைப்படுத்தமுடியும். கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன். எனவே தயவுசெய்து என்னை விட்டு விலகாதேயும்! ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்? உமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே. நான் என் முழு இருதயத்தோடும் தேவனுக்கு சேவைசெய்ய முயல்வேன். தேவனே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும்.
சங்கீதம் 119:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தமமார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர். உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும். நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும். வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே. என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளை விட்டு வழிதப்பவிடாதேயும்.