சங்கீதம் 15:1-5
சங்கீதம் 15:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழ்வான்? உமது பரிசுத்த மலையில் யார் குடியிருப்பான்? குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள், நீதியானதைச் செய்கிறவர்கள், உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுகிறவர்கள்; தம் நாவினால் அவதூறு பேசாதவர்கள், தம் தோழருக்கு அநியாயம் செய்யாதவர்கள், மற்றவர்களை நிந்திக்காதவர்கள்; இழிவானவனை அவமதிப்பவர்கள், யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களைக் கனம்பண்ணுகிறவர்கள்; ஆணையிட்டதினால் துன்பம் நேரிட்டாலும் மனதை மாற்றாதவர்கள்; ஏழைகளுக்குத் தம் பணத்தை வட்டியின்றிக் கடனாகக் கொடுப்பவர்கள், குற்றமற்றவர்களுக்கு விரோதமாக இலஞ்சம் வாங்காதவர்கள்.
சங்கீதம் 15:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த மலையில் குடியிருப்பான்? உத்தமனாக நடந்து, நீதியை நடத்தி, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும், தன்னுடைய நண்பனுக்குத் தீங்குசெய்யாமலும், தன்னுடைய அயலான்மேல் சொல்லப்படும் அவமானமான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான். ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான். தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடுக்காமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாக லஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
சங்கீதம் 15:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழக்கூடும்? உமது பரிசுத்த மலைகளில் யார் வாழக்கூடும்? தூய வாழ்க்கை வாழ்ந்து, நற்செயல்களை செய்பவனும், உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுபவனும் உமது மலையில் வாழமுடியும். அம்மனிதன் பிறரைக் குறித்துத் தீமை கூறான். அம்மனிதன் அயலானுக்குத் தீங்கு செய்யான். அம்மனிதன் அவன் குடும்பத்தைக் குறித்து வெட்கம் தரும் மொழிகளைச் சொல்லான். தேவனை வெறுப்போரை அவன் மதியான். ஆனால் கர்த்தரைச் சேவிப்போரையெல்லாம் அம்மனிதன் மதிப்பான். அவன் அயலானுக்கு வாக்களித்தால் அவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பான். அவன் கடன் கொடுத்தால், வட்டி கேளான். குற்றமற்ற மனிதருக்குத் தீங்கிழைப்பதற்கு அவன் பணம் பெறான்.
சங்கீதம் 15:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான். ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான். தன் பணத்தை வட்டிக்குக் கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான், இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.