சங்கீதம் 37:23-40

சங்கீதம் 37:23-40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு மனிதனுடைய வழியில் யெகோவா பிரியமாயிருந்தால், அவனுடைய காலடிகளை அவர் உறுதியாக்குகிறார். அவன் இடறினாலும் விழமாட்டான்; ஏனெனில், யெகோவா தமது கரத்தினால் அவனைத் தாங்கிப் பிடிக்கிறார். நான் வாலிபனாயிருந்தேன், இப்போது முதியவனாய் இருக்கிறேன்; ஆனால் நீதிமான்கள் கைவிடப்பட்டதையோ, அவர்களுடைய பிள்ளைகள் உணவுக்காக பிச்சையெடுத்ததையோ நான் ஒருபோதும் காணவில்லை. நீதிமான் எப்பொழுதும் தாராளமாய்க் கடன் கொடுக்கிறார்கள்; அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். தீமையிலிருந்து விலகி நன்மையைச் செய்; அப்பொழுது நீ என்றென்றும் நிலைத்திருப்பாய். ஏனெனில் யெகோவா நியாயத்தில் பிரியப்படுகிறார்; தமக்கு உண்மையாய் இருப்பவர்களைக் கைவிடவுமாட்டார். அவர்கள் என்றென்றும் பாதுகாக்கப்படுவார்கள். ஆனால் கொடியவர்களின் சந்ததியோ அழிந்துபோம். நீதிமான்கள் நாட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கி, அதில் என்றும் குடியிருப்பார்கள். நீதிமான்களின் வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; அவர்களுடைய நாவு நியாயத்தைப் பேசும். இறைவனின் சட்டம் அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது; அவர்களுடைய கால்கள் சறுக்குவதில்லை. நீதிமான்களைக் கொல்லும்படி, கொடியவர்கள் அவர்களைப் பிடிக்கப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள். ஆனால் யெகோவா, நீதிமான்களை கொடியவர்களின் கையில் விடுவதுமில்லை; நியாய்ந்தீர்க்கப்பட வரும்போது குற்றவாளிகளாக்க இடமளிப்பதுமில்லை. யெகோவாவை எதிர்பார்த்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள். நீ நாட்டை சொந்தமாக்கிக் கொள்ளும்படி, அவர் உன்னை உயர்த்துவார்; கொடியவர்கள் அழிந்துபோவார்கள், நீ அதைக் காண்பாய். கொடியவனும் ஈவு இரக்கமற்றவனுமான ஒருவனைக் கண்டேன்; அவன் ஒரு பச்சைமரம் தனக்கேற்ற மண்ணில் செழித்திருப்பதைப் போல வளர்ந்தான். ஆனால் அவன் விரைவாக ஒழிந்துபோனான்; நான் அவனைத் தேடியும்கூட அவனைக் காணவில்லை. குற்றமற்றவனைக் கவனித்துப்பார், நேர்மையானவனை நோக்கிப்பார்; சமாதானமாய் இருக்கிற மனிதனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ஆனால் குற்றவாளிகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்; கொடியவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும். நீதிமான்களின் இரட்சிப்பு யெகோவாவிடமிருந்து வரும்; கஷ்டமான காலத்தில் அவரே அவர்களின் அரணாய் இருக்கிறார். யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை விடுவிக்கிறார்; அவர்கள் யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறபடியால், கொடியவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து இரட்சிக்கிறார்.

சங்கீதம் 37:23-40 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார். நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை. அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள். நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான். யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை. நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய். கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன், அவன் காணப்படவில்லை. நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனிதனுடைய முடிவு சமாதானம். அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்; அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு. நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார்.

சங்கீதம் 37:23-40 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு வீரன் கவனமாக நடப்பதற்கு கர்த்தர் உதவுகிறார். அவன் விழாதபடி கர்த்தர் வழி நடத்துகிறார். வீரன் ஓடி பகைவனை எதிர்த்தால் கர்த்தர் வீரனின் கைகளைப் பிடித்து அவன் விழாதபடி தாங்கிக் கொள்கிறார். நான் இளைஞனாக இருந்தேன். இப்போது வயது முதிர்ந்தவன். நல்லோரை தேவன் கைவிடுவிடுவதை நான் பார்த்ததில்லை. நல்லோரின் பிள்ளைகள் உணவிற்காக பிச்சையெடுப்பதை நான் பார்த்ததில்லை. ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான். நல்ல மனிதனின் பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருப்பார்கள். தீமை செய்ய மறுத்து நல்லவற்றையே நீ செய்தால் என்றென்றும் நீ வாழ்வாய். கர்த்தர் நீதியை விரும்புகிறார். அவரைப் பின்பற்றுவோரை உதவியின்றிக் கைவிட்டதில்லை. கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை எப்போதும் பாதுகாக்கிறார். ஆனால் கெட்ட ஜனங்களை அவர் அழித்துவிடுவார். தேவன் வாக்களித்த தேசத்தை நல்லோர் பெறுவார்கள். அங்கு அவர்கள் எந்நாளும் வாழ்வார்கள். ஒரு நல்ல மனிதன் நல்ல போதனையை கொடுக்கிறான். அவன் முடிவுகள் ஒவ்வொருவருக்கும் நியாயமுள்ளவைகள். கர்த்தருடைய போதனைகள் அவன் இருதயத்தில் இருக்கும். அவன் நல்வழியில் வாழ்வதை விட்டு விலகான். தீயோர் நல்லோரைத் துன்புறுத்தும் வழிகளை நாடுவார்கள். தீயோர் நல்லோரைக் கொல்ல முனைவார்கள். அவர்கள் அவ்வாறு செயல்பட தேவன் விடார். நல்லோர் தீயோரென நியாயந்தீர்க்கப்பட கர்த்தர் விடார். கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருங்கள், கர்த்தரைப் பின்பற்றுங்கள். தீயோர் அழிக்கப்படுவார்கள். ஆனால் கர்த்தர் உனக்கு முக்கியத்துவமளிப்பார், தேவன் வாக்களித்த தேசத்தை நீ பெறுவாய். வல்லமைமிக்க தீயோரை நான் கண்டேன். அவன் பசுமையான, வலிய மரத்தைப் போலிருந்தான். ஆனால் அவன் மடிந்தான், அவனை நான் தேடியபோது அவன் காணப்படவில்லை. தூய்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். ஏனெனில் அது சமாதானத்தைத் தரும். சமாதானத்தை விரும்பும் ஜனங்களுக்கு பல சந்ததியினர் இருப்பார்கள். சட்டத்தை மீறுகிற ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் சந்ததி நாட்டை விட்டு வெளியேற நேரிடும். கர்த்தர் நல்லோரை மீட்கிறார். நல்லோர் வேதனைப்படும்போது கர்த்தர் அவர்களின் பெலனாவார். கர்த்தர் நல்லோருக்கு உதவிசெய்து அவர்களைப் பாதுகாக்கிறார். நல்லோர் கர்த்தரைச் சார்ந்திருப்பார்கள். அவர் அவர்களைத் தீயோரிடமிருந்து காக்கிறார்.

சங்கீதம் 37:23-40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை. அவன் நித்தம் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள். நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான். கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில், அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை. நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டு போவதை நீ காண்பாய். கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன். அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை. நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு. நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். கர்த்தர் அவர்களுக்கு உதவி செய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.