சங்கீதம் 86:11-17

சங்கீதம் 86:11-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். என் தேவனாகிய ஆண்டவரே உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன். நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள். ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன். என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும். கர்த்தாவே, நீர் எனக்குத் துணை செய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.

சங்கீதம் 86:11-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; அதினால் நான் உமது உண்மையைச் சார்ந்திருப்பேன்; நான் உமது பெயரில் பயந்து நடக்கும்படி ஒரே சிந்தையுள்ள இருதயத்தை எனக்குத் தாரும். என் இறைவனாகிய யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உமது பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன். நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது; நீர் என்னை ஆழங்களிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர். இறைவனே, அகங்காரிகள் என்னைத் தாக்குகிறார்கள்; கொடூரமான கூட்டத்தார் என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர், அவர்கள் உம்மை மதிக்காதவர்கள். ஆனாலும் யெகோவாவே, நீரோ கருணையும் கிருபையுமுள்ள இறைவனாய் இருக்கிறீர்; கோபப்படுவதில் தாமதிப்பவராயும், அன்பும் உண்மையும் நிறைந்தவராயும் இருக்கிறீர். என் பக்கமாய்த் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்; உமது அடியேனுக்கு உமது பெலத்தைக் காண்பியும்; என்னைக் காப்பாற்றும், ஏனெனில் என் தாயைப்போலவே நானும் உமக்கு சேவை செய்கிறேன். என் பகைவர் கண்டு வெட்கப்படும்படியாக, உமது நன்மைக்கான ஓர் அடையாளத்தை எனக்குத் தாரும்; ஏனெனில் யெகோவாவே, நீர் எனக்கு உதவிசெய்து, என்னைத் தேற்றியிருக்கிறீர்.

சங்கீதம் 86:11-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது பெயருக்குப் பயந்திருக்கும்படி என்னுடைய இருதயத்தை ஒருமுகப்படுத்தும். என் தேவனாகிய ஆண்டவரே; உம்மை என்னுடைய முழு இருதயத்தோடும் துதித்து, உமது பெயரை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன். நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி பார்க்காமலிருக்கிறார்கள். ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன். என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் மகனைக் காப்பாற்றும். யெகோவாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என்னுடைய பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.

சங்கீதம் 86:11-17 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, உமது வழிகளை எனக்குப் போதியும். நான் வாழ்ந்து உமது சத்தியங்களுக்குக் கீழ்ப்படிவேன். உமது நாமத்தைத் தொழுது கொள்வதையே என் வாழ்க்கையின் மிக முக்கியமான காரியமாகக்கொள்ள எனக்கு உதவும். என் ஆண்டவராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். உமது நாமத்தை என்றென்றும் துதிப்பேன். தேவனே, என்னிடம் மிகுந்த அன்பு காட்டுகிறீர். கீழே மரணத்தின் இடத்திலிருந்து என்னைக் காப்பாற்றும். தேவனே, பெருமைமிக்க மனிதர்கள் என்னைத் தாக்குகிறார்கள். கொடிய மனிதர்களின் கூட்டம் என்னைக் கொல்லமுயல்கிறது. அம்மனிதர்கள் உம்மை மதிப்பதில்லை. ஆண்டவரே, நீர் தயவும் இரக்கமும் உள்ள தேவன். நீர் பொறுமையுடையவர், உண்மையும் அன்பும் நிறைந்தவர். தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்குக் காண்பித்து, என்மீது தயவாயிரும். நான் உமது பணியாள். எனக்குப் பெலனைத் தாரும். நான் உமது பணியாள். என்னைக் காப்பாற்றும். தேவனே, நீர் எனக்கு உதவுவீர் என்பதற்கு ஒரு அடையாளத்தைத் தாரும். என் பகைவர்கள் அந்த அடையாளத்தைக் கண்டு, ஏமாற்றம்கொள்வார்கள். நீர் என் ஜெபத்தைக் கேட்டு எனக்கு உதவுவீர் என்பதை அது காட்டும்.