வெளிப்படுத்தின விசேஷம் 14:17-20
வெளிப்படுத்தின விசேஷம் 14:17-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பரலோகத்திலுள்ள ஆலயத்திலிருந்து, இன்னொரு இறைத்தூதன் வெளியே வந்தான். அவனும் ஒரு கூரிய அரிவாளை வைத்திருந்தான். வேறொரு இறைத்தூதன் பலிபீடத்திலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் நெருப்புக்குப் பொறுப்பாயிருக்கிறவன். அவன் கூரிய அரிவாளை வைத்திருந்த தூதனிடம் உரத்த குரலில், “உன்னுடைய கூரிய அரிவாளை எடுத்து, பூமியின் திராட்சை கொடியிலிருந்து திராட்சை பழக்குலைகளை அறுத்து சேர்த்துக்கொள்; ஏனெனில், அதன் திராட்சைப் பழங்கள் பழுத்து ஆயத்தமாகிவிட்டன” என்றான். அப்பொழுது அந்த இறைத்தூதன், தனது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டி, பூமியின் திராட்சைப் பழங்களை வெட்டி எடுத்து, இறைவனுடைய கோபாக்கினை என்னும் பெரிய திராட்சை ஆலைக்குள் எறிந்தான்; அவை நகரத்திற்கு வெளியே, திராட்சை ஆலையில் மிதிக்கப்பட்டன. அந்த ஆலையின் வெளியே, இரத்தம் ஒரு நதியாய் ஓடியது; அது குதிரைகளின் கடிவாளத்தின் உயரம் வரைக்கும் எழும்பிப் பெருகி, 300 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 14:17-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு வேறொரு தூதனும் கூர்மையான அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான். அக்கினியின்மேல் அதிகாரம் உள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கூர்மையான அரிவாளைப் பிடித்திருக்கிறவனைப் பார்த்து: பூமியின் திராட்சைப்பழங்கள் பழுத்திருக்கிறது, கூர்மையான உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று அதிக சத்தத்தோடு சொன்னான். அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சைப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபத்தின் தண்டனை என்னும் பெரிய ஆலையிலே போட்டான்; நகரத்திற்கு வெளியே உள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து முந்நூறு கிலோமீட்டர் தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டு குதிரைகளின் கடிவாளங்களின் உயரம்வரைக்கும் பெருகிவந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 14:17-20 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு இன்னொரு தேவதூதன் பரலோகத்திலுள்ள ஆலயத்தை விட்டு வெளியே வந்தான். அவனும் ஒரு கூர்மையான அரிவாளை வைத்திருந்தான். பின்பு இன்னொரு தேவதூதன் பலிபீடத்தில் இருந்து வெளியே வந்தான். நெருப்பின் மீது இவனுக்கு வல்லமை இருந்தது. கூர்மையான அரிவாளை வைத்திருந்த தேவதூதனை அழைத்து, அவன், “பூமியின் திராட்சைகள் பழுத்திருக்கின்றன. கூர்மையான உன் அரிவாளை எடு. பூமியின் திராட்சைக் குலைகளை கூரிய உன் அரிவாளால் அறுத்துச் சேகரி” என்று உரத்த குரலில் கூறினான். அதனால் அத்தூதன் அரிவாளைப் பூமியின் மீது நீட்டி பூமியின் திராட்சைப் பழங்களை அறுத்து, தேவனுடைய கோபமாகிய பெரிய ஆலையிலே போட்டான். நகரத்துக்கு வெளியிலிருந்த அந்த ஆலையிலே திராட்சைப் பழங்கள் நசுக்கப்பட்டன. அதிலிருந்து இரத்தம் வெளிப்பட்டது. அது குதிரைகளின் தலை உயரத்திற்கு 200 மைல் தூரத்துக்குப் பொங்கி எழுந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 14:17-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான். அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான். அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான். நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது.