வெளிப்படுத்தின விசேஷம் 14:9-11
வெளிப்படுத்தின விசேஷம் 14:9-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்களுக்குப் பின்னால் மூன்றாம் தூதன் வந்து, அதிக சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்கித் தன் நெற்றியிலோ தன் கையிலோ அதின் முத்திரையை அணிந்து கொள்ளுகிறவன் எவனோ, அவன் தேவனுடைய கோபத்தின் தண்டனையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் ஊற்றப்பட்ட அவருடைய கோபமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். அவர்களுடைய வாதையின் புகை எல்லாக் காலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் உருவத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய பெயரின் முத்திரையை அணிந்துகொள்ளுகிற அனைவருக்கும் இரவும் பகலும் ஓய்வு இருக்காது.
வெளிப்படுத்தின விசேஷம் 14:9-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மூன்றாவது இறைத்தூதன் அவர்களைத் தொடர்ந்து வந்து, உரத்த குரலில் சொன்னதாவது: “யாராவது மிருகத்தையும், மிருகத்தின் உருவச்சிலையையும் வணங்கி, அதனுடைய அடையாளத்தைத் தனது நெற்றியிலோ அல்லது கையிலோ பெற்றுக்கொண்டால், அவனும் இறைவனுடைய கோபத்தின் மதுவைக் குடிப்பான்; அது அவருடைய கோபத்தின் கிண்ணத்தில், முழு வலிமையுடன் ஊற்றப்பட்டிருக்கிறது. அவன் பரிசுத்த இறைத்தூதருக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் எரிகின்ற கந்தகத்தினால் வரும் வேதனையை அனுபவிப்பான். அவர்களது வேதனையின் புகை என்றென்றுமாய் எழும்புகிறது. மிருகத்தையோ, அதனுடைய உருவச்சிலையையோ வணங்குகிறவர்களுக்கும், அதனுடைய பெயருக்குரிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்கிறவர்களுக்கும் இரவிலோ பகலிலோ இளைப்பாறுதல் இல்லை.”
வெளிப்படுத்தின விசேஷம் 14:9-11 பரிசுத்த பைபிள் (TAERV)
மூன்றாவது தேவதூதன் மற்ற இரு தூதர்களையும் பின் தொடர்ந்து வந்தான். அவன் உரத்த குரலில், “எவனொருவன் மிருகத்தையும், மிருகத்தின் உருவத்தையும் வழிபடுகிறானோ, எவனொருவன் மிருகத்தின் அடையாளத்தைத் தன் முன்நெற்றியிலோ, கையிலோ பதித்துக்கொள்கிறானோ அவனுக்குக் கேடு உருவாகும். அவன் தேவனுடைய கோபமாகிய மதுவைக் குடிப்பான். அவன் ஆட்டுக்குட்டியானவருக்கும், பரிசுத்த தேவதூதர்களுக்கும் முன்பாக அக்கினியாலும் கந்தகத்தாலும் துன்புறுத்தப்படுவான். அவர்களது வாதையின் புகை சதா காலங்களிலும் எழும்பிக்கொண்டிருக்கும். மிருகத்தையும் அதன் உருவத்தையும் வழிபடுகிறவர்களுக்கும் அதன் பெயரின் அடையாளக் குறியை உடைய மக்களுக்கும் இரவும் பகலும் எக்காலமும் ஓய்வு இருக்காது” என்றான்.
வெளிப்படுத்தின விசேஷம் 14:9-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும், அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.