வெளிப்படுத்தின விசேஷம் 15:1-4

வெளிப்படுத்தின விசேஷம் 15:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் பரலோகத்திலே பெரும் வியப்புக்குரிய இன்னுமொரு அடையாளத்தைப் பார்த்தேன்: ஏழு தூதர்கள் ஏழு வாதைகளுடன் நின்றார்கள்; இவை கடைசி வாதைகள்; ஏனெனில், இவற்றுடன் இறைவனுடைய கோபம் நிறைவுபெறும். நான் கண்ணாடிக்கடல் போன்ற ஒன்றைக் கண்டேன். அதில் நெருப்பு கலந்திருந்தது. அதற்கருகில் அந்த மிருகத்தையும், அதனுடைய உருவச்சிலையையும், அதன் பெயருக்குரிய எண்ணையும் மேற்கொண்டு வெற்றிகொண்டவர்கள், நின்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் இறைவனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வீணைகளைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இறைவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவருடைய பாடலையும் பாடினார்கள்: “எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே, உமது செயல்கள் பெரிதானவை. அவை வியக்கத்தகுந்தவை. எல்லா யுகங்களுக்கும் அரசனாயிருக்கிறவரே, உமது வழிகள் நீதியும் சத்தியமுமானவை. கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமல் இருப்பார்கள்? யார் உமது பெயருக்கு மகிமையைக் கொடுக்காமலும் இருப்பார்கள்? ஏனெனில், நீர் ஒருவரே பரிசுத்தர். எல்லா நாட்டினரும் வந்து உமக்கு முன்பாக ஆராதனை செய்வார்கள், ஏனெனில், உமது நீதியான செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.”

வெளிப்படுத்தின விசேஷம் 15:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்களைப் பார்த்தேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிவிற்கு வந்தது. அன்றியும், அக்கினிக் கலந்த கண்ணாடிக் கடல்போல ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் உருவத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் பெயரின் எண்ணிற்கும் உள்ளாகாமல் ஜெயம் பெற்றவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் பார்த்தேன். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 15:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

பரலோகத்தில் நான் இன்னொரு அற்புதத்தைப் பார்த்தேன். அது பெரிதும் ஆச்சரியமுமானது. ஏழு தேவ தூதர்கள் ஏழு துன்பங்களைக் கொண்டு வந்தார்கள். இவை தான் இறுதியான துன்பங்கள். ஏனென்றால் இதற்குப் பிறகு தேவனுடைய கோபம் முடிந்துவிடுகிறது. நெருப்பு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றைக் கண்டேன். மிருகத்தையும், அதன் உருவத்தையும் அதன் எண்ணையும் வென்ற மக்கள் அனைவரும் கடலருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் தேவன் கொடுத்த இசைக் கருவிகள் இருந்தன. அவர்கள் தேவனுடைய ஊழியராகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவரின் பாடலையும் பாடினர்: “சர்வ வல்லமையுள்ள தேவனே! நீர் செய்தவை எல்லாம் பெரியவை, அற்புதமானவை. நாடுகளின் ராஜாவே! உமது வழிகளெல்லாம் நீதியும் உண்மையுமானவை. கர்த்தாவே! மக்கள் அனைவரும் உமக்கு அஞ்சுவார்கள். எல்லாரும் உம் பெயரைப் போற்றுவார்கள். நீர் ஒருவரே பரிசுத்தமானவர் எல்லா மக்களும் உம் முன் வந்து உம்மை வழிபடுவார்கள். ஏனெனில் நீர் நீதியானவற்றையே செய்கிறீர் என்பது தெளிவு.”

வெளிப்படுத்தின விசேஷம் 15:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது. அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.