வெளிப்படுத்தின விசேஷம் 16:10-16

வெளிப்படுத்தின விசேஷம் 16:10-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஐந்தாவது இறைத்தூதன் தனது கிண்ணத்திலுள்ளதை மிருகத்தின்மேலும், அதன் அரியணையின்மேலும் ஊற்றினான். அப்பொழுது அவனுடைய அரசு இருளில் மூழ்கியது. வேதனையினால் மனிதர்களின் நாவுகளைக் கடித்துக்கொண்டார்கள். அவர்கள் தங்களுடைய வேதனைகளினாலும், அவர்களின் புண்களினாலும் பரலோகத்தின் இறைவனை சபித்தார்களேதவிர, தாங்கள் செய்ததைவிட்டு மனந்திரும்ப மறுத்தார்கள். ஆறாவது இறைத்தூதன் தனது கிண்ணத்தில் உள்ளதை, ஐபிராத்து எனப்பட்ட பெரிய ஆற்றின்மேல் ஊற்றினான். அப்பொழுது கிழக்கிலிருந்து வரும் அரசருக்கு வழியை ஏற்படுத்தும்படி அந்த ஆற்றின் தண்ணீர் வற்றிப்போயிற்று. அதற்குப் பின்பு நான், மூன்று தீய ஆவிகள் வெளிவரக் கண்டேன். அவை தவளைகளைப்போல் காணப்பட்டன; அவை அந்த இராட்சதப் பாம்பின் வாயிலிருந்தும், மிருகத்தின் வாயிலிருந்தும், அந்தப் பொய் தீர்க்கதரிசியின் வாயிலிருந்தும் வெளியே வந்தன. அவை அற்புத அடையாளங்களைச் செய்துகாட்டும் பிசாசுகளின் ஆவிகள்; அவை உலகம் முழுவதிலுமுள்ள அரசர்களிடம் புறப்பட்டுச்சென்றன. எல்லாம் வல்ல இறைவனுடைய அந்த மகாநாளில், அவருக்கு எதிராக நடக்கப்போகும் யுத்தத்திற்காக, அவர்களை ஒன்றுசேர்க்கும்படியே அவை சென்றன. கர்த்தர் சொன்னதாவது, “இதோ, நான் திருடனைப்போல் வருகிறேன்! விழிப்புள்ளவனாய் இருந்து, தனது உடைகளை ஆயத்தமாய் வைத்திருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். அப்பொழுது அவன் நிர்வாணமாய் வெளியேப்போய், பகிரங்கமாய் வெட்கத்திற்குட்படமாட்டான்.” பின்பு அந்த அற்புத அடையாளங்களைச் செய்யும் ஆவிகள், அரசர்களை ஒன்றாகக் கூட்டிச் சேர்த்துக்கொண்டு, எபிரெய மொழியிலே அர்மகெதோன் என்று அழைக்கப்படும் இடத்திற்கு வந்தன.

வெளிப்படுத்தின விசேஷம் 16:10-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்களுடைய நாக்குகளைக் கடித்துக்கொண்டு, தங்களுடைய வருத்தங்களாலும், தங்களுடைய புண்களாலும், பரலோகத்தின் தேவனை அவமதித்தார்களேதவிர, தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை. ஆறாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஐபிராத்து என்னும் பெரிய நதியில் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போனது. அப்பொழுது, இராட்சசப் பாம்பின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலும் இருந்து தவளைகளைப்போல மூன்று அசுத்தஆவிகள் புறப்பட்டு வருவதைப் பார்த்தேன். அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்கும் உள்ள ராஜாக்களை சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படி புறப்பட்டுப்போகிறது. இதோ, திருடனைப்போல வருகிறேன். தன் மானம் தெரியும்படி நிர்வாணமாக நடக்காமல் விழித்துக்கொண்டு, தன் உடைகளைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். அப்பொழுது எபிரெய மொழியிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தன.

வெளிப்படுத்தின விசேஷம் 16:10-16 பரிசுத்த பைபிள் (TAERV)

ஐந்தாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்தவற்றை மிருகத்தின் சிம்மாசனத்தின்மீது எறிந்தான். அதனால் மிருகத்தின் இராஜ்யம் இருண்டுபோனது. மக்கள் வேதனையால் தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டனர். மக்கள் தம் வலியின் நிமித்தமாகவும் தம் கொப்புளங்களின் நிமித்தமாகவும் பரலோகத்தின் தேவனை சபித்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொள்ளவோ, தங்கள் தீய செயல்களில் இருந்து விலகவோ விரும்பவில்லை. ஆறாம் தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததை ஐபிராத்து என்னும் பெரிய ஆற்றில் எறிந்தான். அதிலுள்ள நீர் வற்றிப்போனது. அதனால் கீழ்நாட்டில் உள்ள ராஜாக்கள் வர வழி தயார் ஆயிற்று. பின்பு நான், தவளைபோல தோற்றம் அளித்த மூன்று அசிங்கமான கெட்ட ஆவிகளைக் கண்டேன். இராட்சச பாம்பின் வாயிலிருந்தும், மிருகத்தின் வாயிலிருந்தும், போலித் தீர்க்கதரிசியின் வாயில் இருந்தும் அவை வெளி வந்தன. இந்தக் கெட்ட ஆவிகளே பிசாசுகளின் ஆவிகள். அவை அற்புதங்களைச் செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. அவை உலகிலுள்ள அத்தனை ராஜாக்களிடமும் செல்கின்றன. சர்வவல்லமையுள்ள தேவனின் மாபெரும் நாளின் யுத்தத்திற்கு ராஜாக்களை ஒன்று திரட்ட அவை வெளியே செல்கின்றன. “கவனியுங்கள். ஒரு திருடனைப்போல நான் வருவேன். எவன் விழித்துக்கொண்டும், தன்னுடன் தன் ஆடைகளை வைத்துக்கொண்டும் இருக்கிறானோ அவன் மகிழ்ச்சியாய் இருப்பான். பிறகு அவன் நிர்வாணமாக அலையமாட்டான். மற்றவர்கள் பார்வையில் வெட்கப்படாமல் இருப்பான்.” கெட்ட ஆவிகள் ராஜாக்களை ஓரிடத்தில் ஒன்று சேர்த்தன. அந்த இடத்தின் பெயர் எபிரேய மொழியில் அர்மெகதோன் என்று அழைக்கப்படுகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 16:10-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு, தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை. ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்குந்திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று. அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன். அவைகள் அற்புதங்களைச்செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது. இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.