வெளிப்படுத்தின விசேஷம் 16:17-21

வெளிப்படுத்தின விசேஷம் 16:17-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏழாவது இறைத்தூதன் தனது கிண்ணத்திலுள்ளதை ஆகாயத்திலே ஊற்றினான். அப்பொழுது ஆலயத்திலிருந்து ஒரு சத்தமான குரல், “செய்தாயிற்று!” என்று அரியணையிலிருந்து கூறியது. அப்பொழுது மின்னல்களும், பேரிரைச்சல்களும், இடிமுழக்கங்களும், பெரிய பூமியதிர்ச்சியும் ஏற்பட்டன. மனிதர் பூமியில் உண்டான நாளிலிருந்து, அதுபோன்ற பூமியதிர்ச்சி ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அவ்வளவு பலமாய் அந்தப் பூமியதிர்ச்சி இருந்தது. மகா நகரமான பாபிலோன், மூன்று பகுதிகளாகப் பிளந்தன. உலக நாடுகளின் நகரங்கள் இடிந்து விழுந்தன. மகா பாபிலோனை இறைவன் மறந்துவிட, இவ்வாறு அவர் தமது கடுங்கோபத்தின் கிண்ணத்திலே, தனது கோபத்தின் திராட்சை மதுவை நிரப்பி அவளுக்குக் கொடுத்தார். தீவுகளெல்லாம் மறைந்துபோயிற்று; மலைகள் காணப்படாமற்போயிற்று. வானத்திலிருந்து பெரும் கல்மழை மனிதர்மேல் விழுந்தது. அதன் கல் ஒவ்வொன்றும் நாற்பத்தைந்து கிலோ நிறையுடையதாய் இருந்தது. அப்பொழுது மனிதர், அந்தக் கல்மழையின் வாதையினிமித்தம் இறைவனைச் சபித்தார்கள்; ஏனெனில், அந்த வாதை மிகவும் கொடியதாக இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 16:17-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஏழாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து வந்த பெரிய சத்தம் அது செய்துமுடிக்கப்பட்டது என்று சொன்னது. சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டானது; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனிதர்கள் உண்டான நாளிலிருந்து அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சி உண்டானது இல்லை. அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, யூதரல்லாதவர்களுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய கடுமையான கோபத்தின் தண்டனையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக ஞாபகப்படுத்தப்பட்டது. தீவுகள் எல்லாம் அகன்றுபோயின; மலைகள் காணாமல்போனது. நாற்பது கிலோ எடையுள்ள பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனிதர்கள்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினால் மனிதர்கள் தேவனை அவமதித்தார்கள்; அந்த வாதை மகா கொடியதாக இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 16:17-21 பரிசுத்த பைபிள் (TAERV)

ஏழாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்தவற்றைக் காற்றில் தூவினான். அதனால் ஆலயத்திலுள்ள சிம்மாசனத்தில் இருந்து ஒரு பெரும் குரல் ஒலித்தது. அது, “அது முடிந்தது” என்று சொன்னது. பிறகு மின்னல்கள் மின்னின, ஓசைகள் எழுந்தன, இடி முழங்கியது. பூமி அதிர்ந்தது. பூமியில் மனிதர்கள் படைக்கப்பட்ட பிறகு உருவான நில அதிர்ச்சியிலேயே இதுதான் மிக மோசமான நில அதிர்ச்சி. மிகப் பெரிய அந்த நகரம் மூன்றாகப் பிளந்துபோயிற்று. நாடுகளில் உள்ள நகரங்கள் அழிந்துபோயின. தேவன் மகா நகரமாகிய பாபிலோனைத் தண்டிக்க மறக்கவில்லை. அந்த நகரத்துக்கு அவர் தனது கடுமையான கோபமாகிய மது நிறைந்த கோப்பையைக் கொடுத்தார். எல்லா தீவுகளும் மறைந்தன. மலைகள் எல்லாம் இல்லாமல் போயின. இராட்சசத்தனமான கல்மழை வானில் இருந்து மக்கள் மீது பெய்தது. ஒவ்வொரு மழைக்கல்லும் ஒரு உப்பு மூட்டையினைப் போன்று கனத்திருந்தது. இந்தப் பெருந்துன்பத்தால் மக்கள் தேவனை மேலும் சபித்தார்கள். இத்துன்பம் மகா துன்பமாய் இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 16:17-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது. சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை. அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்குத் தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்குமுன்பாக நினைப்பூட்டப்பட்டது. தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின. தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்; அந்த வாதை மகா கொடிதாயிருந்தது.