வெளிப்படுத்தின விசேஷம் 17:3-10
வெளிப்படுத்தின விசேஷம் 17:3-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்பு தூதன் என்னை ஆவியானவரில் ஆட்கொள்ளப்பட்ட நிலையில், பாலைவனத்திற்குக் கொண்டுசென்றான். அங்கே ஒரு பெண் ஒரு சிவப்பான மிருகத்தின்மேல் உட்கார்ந்திருப்பதை நான் கண்டேன். அந்த மிருகம் இறைவனை அவமதிக்கும் பெயர்களால் மூடப்பட்டிருந்தது. அந்த மிருகத்திற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன. அந்தப் பெண் ஊதாநிற உடையையும், சிவப்புநிற உடையையும் உடுத்தியிருந்தாள். தங்கத்தினாலும், மாணிக்கக் கற்களினாலும், முத்துக்களினாலும் அவள் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அருவருப்பான காரியங்களினாலும், அவளுடைய விபசாரத்தின் அசிங்கங்களினாலும் நிறைந்த ஒரு தங்கக் கிண்ணத்தை அவள் தனது கையில் வைத்திருந்தாள். அவளுடைய நெற்றியிலே எழுதப்பட்டிருந்த பெயர் ஒரு இரகசியமாயிருந்தது: மாபெரும் பாபிலோன், வேசிகளுக்கும் பூமியின் எல்லா அருவருப்புகளுக்கும் தாய். அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினால் வெறிகொண்டிருந்ததை நான் கண்டேன். அதாவது இயேசுவுக்கு சாட்சிகளாய் இருந்தவர்களின் இரத்தமே. நான் அவளைக் கண்டு மிகவும் வியப்படைந்தேன். அப்பொழுது அந்தத் இறைத்தூதன் என்னிடம்: “நீ ஏன் வியப்படைகிறாய்? அந்தப் பெண்ணையும், அவள் ஏறியிருக்கிற ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளுமுள்ள மிருகத்தையும் பற்றிய இரகசியத்தை நான் உனக்கு விளக்கிச்சொல்லுவேன். நீ கண்ட அந்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; ஆனால், அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, தன் அழிவுக்குச் செல்லும். அந்த மிருகத்தை உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, ஜீவப் புத்தகத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்டிராதவர்களாய், பூமியில் குடிகள், காணும்போது வியப்படைவார்கள். ஏனெனில், அது முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை, ஆனால் இனி அது வரும். “இதை விளங்கிக்கொள்ள ஞானமுள்ள மனம் தேவை. அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கின்ற ஏழு மலைகளாம். அவை ஏழு அரசர்களாம்; அவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள்; ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை. ஆனால் அவனது அரசு, சிறிதுகாலம் மட்டுமே நிலைத்திருக்கும்.
வெளிப்படுத்தின விசேஷம் 17:3-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் அவதூறான பெயர்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு பெண் ஏறியிருப்பதைப் பார்த்தேன். அந்தப் பெண் இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையும் அணிந்து பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் பெயர் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைப் பார்த்தேன்; அவளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அப்பொழுது, தூதனானவன் என்னைப் பார்த்து: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்தப் பெண்ணுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாக இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன். நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். ஞானமுள்ள மனம் இதைப் புரிந்துகொள்ளும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் ஆட்சி செய்வான்.
வெளிப்படுத்தின விசேஷம் 17:3-10 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆவியானவரால் என்னைப் பாலைவனத்துக்கு அத்தூதன் கொண்டுபோனான். அங்கே ஒரு பெண் ஒரு சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் உட்கார்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த மிருகத்தின்மேல் தீய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன. இரத்த வண்ணத்தில் சிவப்பும் இரத்தாம்பரமுமான ஆடை அந்தப் பெண்ணுக்கு அணிவிக்கப்பட்டது. அவள் பொன்னாலும் நகைகளாலும், முத்துக்களாலும் தன்னை அலங்கரித்திருந்தாள். அவள் கையில் ஒரு பொன் கோப்பையை வைத்திருந்தாள். இக்கோப்பை அருவருப்பாலும், வேசித்தனமாகிய அசிங்கத்தாலும் நிறைந்திருந்தது. அவளது நெற்றியில் அவளுக்குரிய பட்டப்பெயர் எழுதப்பட்டிருந்தது. அப்பட்டப் பெயருக்கு ஒரு மறைபொருளும் உண்டு. எழுதப்பட்டிருந்த வாசகம் இதுதான்: மகா பாபிலோன் வேசிகளுக்கும் பூமியில் உள்ள அருவருப்புகளுக்கும் தாய்! அப்பெண் குடித்திருந்ததை நான் பார்த்தேன். அவள் தேவனின் பரிசுத்தமான மக்களின் இரத்தத்தாலும், இயேசுவின் சாட்சிகளின் இரத்தத்தாலும் நிலைதடுமாறி இருந்தாள். அவளைப் பார்த்தபோது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. அப்போது தூதன் என்னைப் பார்த்து, “ஏன் அதிசயப்படுகிறாய்? நான் இவளுடைய இரகசியத்தையும், இவளைச் சுமக்கிற ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும் கொண்ட அம்மிருகத்தின் இரகசியத்தையும் உனக்குக் கூறுகிறேன். நீ கண்ட மிருகம் முன்பொரு காலத்தில் உயிருடன் இருந்தது. ஆனால் இப்போது அது உயிருடன் இல்லை. அது உயிரடைந்து அடித்தளமற்ற பாதாளத்தில் இருந்து ஏறி வந்து அழிவை நோக்கிப் போகிறது. இந்த உலகத்தில் வாழும் மக்கள் இம்மிருகத்தைக் காணும்போது ஆச்சரியப்படுவார்கள். காரணம் இது ஒரு காலத்தில் உயிரோடு இருந்தது பின் இராமல் போனது. ஆனால், மீண்டும் வரப்போகிறது. இம்மக்களின் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் உலகம் தொடங்கின நாள் முதல் எழுதப்படாமல் இருக்கிறது. “இதைப் புரிந்துகொள்ள உனக்கு ஞானமுள்ள மனம் வேண்டும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்துகொண்டிருக்கிற ஏழு மலைகள் ஆகும். அவை ஏழு ராஜாக்களுமாகும். இவர்களில் ஐந்து பேர் விழுந்தார்கள். ஒருவன் இருக்கிறான். இன்னொருவன் இன்னும் வரவில்லை. அவன் வந்த பிறகு கொஞ்ச காலம் தான் உயிரோடு இருப்பான்.
வெளிப்படுத்தின விசேஷம் 17:3-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவுப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன். அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன். நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள். ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்.