வெளிப்படுத்தின விசேஷம் 6:3-8
வெளிப்படுத்தின விசேஷம் 6:3-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆட்டுக்குட்டியானவர், இரண்டாவது முத்திரையைத் திறந்தபோது, இரண்டாவதாய் இருந்த உயிரினம், “வா!” என்று சொல்வதை நான் கேட்டேன். அப்பொழுது இன்னொரு குதிரை வெளியே வந்தது, அது கருஞ்சிவப்பு நிறம் உடையதாயிருந்தது. அதில் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலிருந்து சமாதானத்தை நீக்கிவிடவும், மனிதர்கள் தங்களில் ஒருவரையொருவர் கொன்றுபோடும்படி செய்யவும், வல்லமை கொடுக்கப்பட்டது. அவனுக்கு ஒரு பெரிய வாள் கொடுக்கப்பட்டது. ஆட்டுக்குட்டியானவர், மூன்றாவது முத்திரையைத் திறந்தபோது, மூன்றாவதாய் இருந்த உயிரினம், “வா!” என்று சொல்வதை நான் கேட்டேன். நான் பார்த்தபோது, அங்கே எனக்கு முன்பாக, ஒரு கருப்புக்குதிரை நின்றது. அதில் ஏறியிருந்தவன் தன் கையிலே, தராசு ஒன்றைப் பிடித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு குரல் போன்ற சத்தம், “ஒரு நாள் கூலிக்கு கோதுமை ஒரு கிலோகிராம்; வாற்கோதுமை மூன்று கிலோகிராம்; எண்ணெயையும், திராட்சைரசத்தையும் சேதப்படுத்தாதே!” என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன். அந்தக் குரல் அந்த நான்கு உயிரினங்களின் நடுவிலிருந்தே வந்ததுபோல் எனக்குக் காணப்பட்டது. ஆட்டுக்குட்டியானவர், நான்காவது முத்திரையைத் திறந்தபோது, நான்காவதாய் இருந்த உயிரினத்தின் குரலை நான் கேட்டேன். அது, “வா” என்று சொன்னது. அப்பொழுது எனக்கு முன்பாக மங்கிய பச்சை நிறமுடைய ஒரு குதிரை நின்றதை நான் பார்த்தேன். அதில் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. பாதாளம் அவனுக்குப் பின்னாலேயே நெருக்கமாய் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. பூமியிலுள்ள நான்கில் ஒரு பங்கு மக்களை வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும், பூமியிலுள்ள கொடிய விலங்குகளினாலும் கொல்வதற்கு அவற்றிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 6:3-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்வதற்காகச் சமாதானத்தை பூமியிலிருந்து எடுத்துப்போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய வாளும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்வதைக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு வெள்ளிக்காசுக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு வெள்ளிக்காசுக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சைரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். அவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, நான்காம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைப் பார்த்தேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவனுக்குப் பின்னே சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், மரணத்தினாலும், பூமியின் கொடிய மிருகங்களினாலும், பூமியில் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்களைக் கொலைசெய்ய அவைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 6:3-8 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆட்டுக்குட்டியானவர் இரண்டாம் முத்திரையை உடைத்தார். அப்போது இரண்டாவது உயிருள்ள ஜீவன் “வா!” என்று சொல்வதைக் கேட்டேன். பிறகு இன்னொரு குதிரை வெளியே வந்தது. அது தீ போன்ற சிவப்பு வண்ணம் கொண்டது. அதன்மேல் இருந்தவனுக்கு உலகத்தில் உள்ள சமாதானத்தை எடுத்துவிடவும், பூமியில் உள்ள மக்கள் ஒருவரை ஒருவர் கொல்வதற்குமான அதிகாரமும் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவனுக்கு ஒரு பெரிய வாளும் தரப்பட்டது. ஆட்டுக்குட்டியானவர் மூன்றாவது முத்திரையை உடைத்தார். அப்போது மூன்றாவது உயிருள்ள ஜீவன், “வா!” என்று என்னிடம் கூறியதைக் கேட்டேன். நான் பார்த்தபோது ஒரு கறுப்புக் குதிரை வெளியே வந்தது. அதன்மேல் இருந்தவன் தராசு ஒன்றைக் கையில் வைத்திருந்தான். அப்பொழுது ஒருவகை சப்தத்தைக் கேட்டேன். அச்சப்தம் நான்கு உயிருள்ள ஜீவன்களின் மத்தியிலிருந்தே வந்தது. “ஒரு நாள் கூலியாக ஒரு படி கோதுமை. ஒரு நாள் கூலியாக மூன்று படி வாற்கோதுமை, எண்ணெயையும், திராட்சை இரசத்தையும் வீணாக்காதே” என்று கூறிற்று. ஆட்டுக்குட்டியானவர் நான்காம் முத்திரையை உடைத்தார். அப்போது நான்காம் உயிருள்ள ஜீவன் “வா!” என்று அழைத்தது. நான் பார்த்தபோது மங்கிய நிறமுள்ள ஒரு குதிரை வந்தது. இக்குதிரையை ஓட்டி வந்தவனுக்கு “மரணம்” என்று பெயர். மேலும் அவனுக்குப் பின்னால் “பாதாளம்” நெருக்கமாய் வந்துகொண்டிருந்தது. உலகில் உள்ள கால் பங்கு மக்களின்மேல் அவனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. வாளாலும், பஞ்சத்தாலும் நோயாலும் காட்டு மிருகங்களாலும் மக்களைக் கொல்லும் அதிகாரத்தை அவன் பெற்றான்.
வெளிப்படுத்தின விசேஷம் 6:3-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.