ரோமர் 1:26-28

ரோமர் 1:26-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

ரோமர் 1:26-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதனால், இறைவன் அவர்களை வெட்கக்கேடான காம ஆசைகளுக்கு ஒப்புக்கொடுத்தார். அவர்களுடைய பெண்களுங்கூட இயல்பான பாலுறவை கைவிட்டு, இயல்புக்கு விரோதமான உறவுகளில் ஈடுபட்டார்கள். அவ்விதமாகவே ஆண்களும், இயல்பான பெண்களுடனான பாலுறவை விட்டுவிட்டு, ஆணுடன் ஆண் உறவுகொள்ளும்படியான காமவேட்கை கொண்டார்கள். ஆண்களுடன் ஆண்கள் அசிங்கமான செயல்களில் ஈடுபட்டார்கள். தங்களுடைய முறைகேடான செயல்களுக்கு ஏற்ற தண்டனையைத் தங்களிலேயேப் பெற்றுக்கொண்டார்கள். மேலும், அவர்கள் இறைவனைப்பற்றிய அறிவைக் காத்துக்கொள்வதை ஒரு தகுதியான செயலாக எண்ணவில்லை. இதனால் அவர்கள் செய்யத் தகாதவைகளைச் செய்யும்படி, இறைவன் அவர்களைச் சீர்கெட்ட சிந்தைக்கும் விட்டுவிட்டார்.

ரோமர் 1:26-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களை இயற்கையின்படி அனுபவிக்காமல், ஒருவர்மேல் ஒருவர் இச்சையினாலே பொங்கி, ஆணோடு ஆண் அவலட்சணமானதை செய்து, தங்களுடைய தவறுகளுக்குத்தக்க பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

ரோமர் 1:26-28 பரிசுத்த பைபிள் (TAERV)

மக்கள் அவ்விதமான காரியங்களைச் செய்ததால், அவர்கள் அவமானத்துக்குரியவற்றில் ஈடுபட்டனர். தேவன் அவர்களை விட்டு விலகிவிட்டார். பெண்கள் ஆண்களோடு கொள்ளவேண்டிய இயற்கையான பாலுறவை விட்டு, விட்டு இயல்பற்ற வகையில் பிற பெண்களோடு பாலுறவு கொள்ளத் தொடங்கினர். அவ்வாறே ஆண்களும் இயல்பான முறையில் பெண்களோடு உறவு கொள்வதை விட்டு விட்டனர். அதனால் தவறான காமவெறியினால் ஆண்களோடு ஆண்கள் அவலட்சணமாக உறவு கொண்டதால் அந்த அக்கிரமத்துக்குரிய தண்டனையையும் தம் சரீரத்தில் பெற்றுக்கொண்டனர். தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம் என்று மக்கள் நினைக்கவில்லை. எனவே தேவன் அவர்களைக் கைவிட்டுவிட்டார். அவர்கள் தங்கள் பயனற்ற சிந்தனைகளில் அமிழ்ந்து கிடக்க அனுமதித்தார். எனவே அவர்கள் செய்யக் கூடாதவற்றையெல்லாம் செய்து வந்தனர்.