செப்பனியா 2:4-15

செப்பனியா 2:4-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும். சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு ஐயோ! பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது; இனி உன்னில் குடியில்லாதபடிக்கு உன்னை அழிப்பேன். சமுத்திரக்கரை தேசம் மேய்ப்பர் தங்கும் குடில்களும் ஆட்டுத்தொழுவங்களுமாகும். அந்த தேசம் யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாகும்; அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்; அஸ்கலோனின் வீடுகளிலே சாயங்காலத்திலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார். மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டிச்சொன்ன தூஷணங்களையும் கேட்டேன். ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப்போலுமாகி, காஞ்சொறி படரும் இடமும், உப்புப்பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்; என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீதியானவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார். அவர்கள் சேனைகளுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தபடியினால், இது அவர்கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும். கர்த்தர் அவர்கள்மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள். எத்தியோப்பியராகிய நீங்களும் என் பட்டயத்தினால் கொலைசெய்யப்படுவீர்கள். அவர் தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார். அதின் நடுவில் மந்தைகளும் ஜாதிஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய சிகரங்களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும்; கேதுரு மரங்களின் மச்சைத் திறப்பாக்கிப்போடுவார். நான்தான், என்னைத் தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப் போய்விட்டதே! அதின் வழியாய்ப் போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.

செப்பனியா 2:4-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

காசா கைவிடப்படும், அஸ்கலோன் பாழாக விடப்படும். அஸ்தோத் நண்பகலில் வெறுமையாக்கப்படும், எக்ரோன் வேரோடு பிடுங்கப்படும். கடற்கரை அருகே வாழும் கிரேத்திய மக்களே, உங்களுக்கு ஐயோ கேடு; பெலிஸ்தியரின் நாடாகிய கானானே, யெகோவாவின் வார்த்தை உனக்கு எதிராக இருக்கிறது. “நான் உன்னை அழிப்பேன், ஒருவரும் அங்கு தப்பியிருக்கமாட்டார்கள்.” கிரேத்தியர் வாழும் கடற்கரை நாடு, இடையர்களுக்கும் செம்மறியாடுகளின் தொழுவங்களுக்கும் உரிய இடமாகும். அது யூதா குடும்பத்தில் மீதியாயிருப்பவர்களுக்கு உரியதாகும். அங்கு அவர்கள் மேய்ச்சலைக் கண்டுகொள்வார்கள். அவர்கள் மாலை வேளைகளில், அஸ்கலோனிலுள்ள வீடுகளில் படுத்திருப்பார்கள். அவர்களின் இறைவனாகிய யெகோவா, அவர்களில் கரிசனையாயிருப்பார்; அவர்கள் இழந்த செல்வங்களை அவர்களுக்குத் திரும்பவும் கொடுப்பார். மோவாபியரின் இழிவுகளையும், அம்மோனியரின் நிந்தனைகளையும் நான் கேட்டேன். அவர்கள் என் மக்களை இழிவாய் பேசி, அவர்களின் நாட்டிற்கெதிராக பயமுறுத்தல்களை ஏற்படுத்தினார்கள். ஆகவே, இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்கிறதாவது, நான் வாழ்வது நிச்சயம்போலவே, மோவாப் நாடு சோதோமைப் போலவும், அம்மோனியரின் நாடு கொமோராவைப் போலாவதும் நிச்சயம். அவை என்றென்றும் களைகள் வளரும் இடமாகவும், உப்புப் பள்ளங்களாகவும், பாழிடமாகவும் காணப்படும். என் மக்களில் மீதியாயிருப்போர் அவர்களைக் கொள்ளையடிப்பார்கள். என் நாட்டில் தப்பியவர்கள் அவர்கள் நாட்டைத் தங்கள் உரிமையாக்கிக்கொள்வார்கள். சேனைகளின் யெகோவாவின் மக்களை இகழ்ந்து, கேலி செய்த அவர்களின் அகந்தைக்குப் பதிலாக, அவர்களுக்குக் கிடைப்பது இதுவே. யெகோவா நாட்டிலுள்ள தெய்வங்களையெல்லாம் அழிக்கும்போது, அவர் அவர்களுக்கு ஒரு பெரும் பயங்கரமாய் இருப்பார். அப்பொழுது பூமியெங்குமுள்ள நாடுகளும் யெகோவாவை ஆராதிப்பார்கள். ஒவ்வொருவரும் தன்தன் சொந்த நாட்டிலிருந்து அவரை வழிபடுவார்கள். எத்தியோப்பியரே, நீங்களும் என் வாளுக்கு இரையாவீர்கள். அவர் தன் கையை வடக்கிற்கு எதிராக நீட்டி, அசீரியாவை அழிப்பார், நினிவேயை அவர் முற்றிலும் பாழாக்கி, பாலைவனத்திற்கு ஒப்பான பாழ்நிலமாக்குவார். அங்கே ஆட்டு மந்தையும் மாட்டு மந்தையும் படுத்திருக்கும். எல்லா விதமான விலங்குகளும் அங்கே படுத்திருக்கும். பாலைவன ஆந்தையும், கீச்சிடும் ஆந்தையும் அதன் தூண்களில் தங்கியிருக்கும். அவற்றின் சத்தம் ஜன்னல்களின் வழியாக எதிரொலிக்கும். வாசல்களில் இடிபாடுகள் குவிந்து கிடக்கும். கேதுரு மரத்தினாலான உத்திரங்கள் வெளியே தெரியும். “நான்தான், என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.” என தனக்குள் சொல்லிக்கொண்டு, பாதுகாப்புடன் கவலையின்றி வாழ்ந்த நினிவே நகரம் இதுவோ. இது எவ்வளவாய்ப் பாழடைந்து, காட்டு மிருகங்களுக்குப் தங்குமிடமாயிற்று! அதைக் கடந்துசெல்கிறவர்கள், கைகளைத் தட்டி, கேலி செய்வார்கள்.

செப்பனியா 2:4-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

காசா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும். கடற்கரை குடிமக்களாகிய கிரேத்தியருக்கு ஐயோ, பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, யெகோவாவுடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது; இனி உன்னில் குடியில்லாதபடி உன்னை அழிப்பேன். கடற்கரை தேசம் மேய்ப்பர்கள் தங்கும் குடிசைகளும் ஆட்டுத் தொழுவங்களுமாகும். அந்த தேசம் யூதா சந்ததியாரில் மீதியாக இருப்பவர்களுக்குச் சொந்தமாகும்; அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்; அஸ்கலோனின் வீடுகளிலே மாலையிலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பை மாற்றுவார். மோவாப் செய்த பழிச்சொல்லையும், அம்மோனியர்கள் என் மக்களை இகழ்ந்து, அவர்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டிச்சொன்ன தூஷணங்களையும் கேட்டேன். ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோனியர்களின் தேசம் கொமோராவைப்போலுமாகி, நெருஞ்சிமுள் படரும் இடமும், உப்புப்பள்ளமும், நிரந்தர பாழுமாயிருக்கும்; என் மக்களில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா உரைக்கிறார். அவர்கள் சேனைகளுடைய யெகோவாவின் மக்களுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி அவர்களை ஏளனம் செய்ததினால், இது அவர்கள் அகங்காரத்திற்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும். யெகோவா அவர்கள்மேல் அதிகாரமுள்ளவராக இருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகச்செய்வார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல அன்னியமக்களும் அவரவர் தங்கள் தங்கள் இடத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள். எத்தியோப்பியராகிய நீங்களும் என் பட்டயத்தினால் கொலைசெய்யப்படுவீர்கள். அவர் தமது கையை வடதேசத்திற்கு விரோதமாக நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்திரத்தைப்போல வறட்சியுமான இடமாக்குவார். அதின் நடுவில் மந்தைகளும் வகைவகையான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய மலையுச்சிகளின்மேல் நாரையும் கோட்டானும் இரவில் தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் வெறுமை இருக்கும்; கேதுருமரத் தளங்களைத் திறப்பாக்கிப்போடுவார். நான்தான், என்னைத் தவிர வெறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, பொறுப்பில்லாமல் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகங்கள் வசிக்குமிடமாகப் போய்விட்டதே! அதின் வழியாகப் போகிறவன் எவனும் தன் கைகளைத்தட்டி ஏளனம் செய்வான்.

செப்பனியா 2:4-15 பரிசுத்த பைபிள் (TAERV)

காத்சாவில் எவரும் விடுபடமாட்டார்கள். அஸ்கலோன் அழிக்கப்படும். அஸ்தோத்தை விட்டுப் போகும்படி மதியத்திற்குள் பலவந்தப்படுத்தப்படுவார்கள். எக்ரோன் காலியாகும். பெலிஸ்தரின் தேச ஜனங்களே, கடற்கரையில் வாழும் ஜனங்களே, கர்த்தரிடமிருந்து வந்த இச்செய்தி உங்களுக்குரியது. கானான் தேசமே, பெலிஸ்தரின் தேசமே, நீங்கள் அழிக்கப்படுவீர்கள். அங்கே எவரும் வாழமாட்டார்கள். கடற்கரையில் உள்ள உங்கள் நிலங்கள் மேய்ப்பர்களுக்கும், ஆடுகளுக்கும் தங்கும் இடங்களாகும். பிறகு அந்த தேசம் யூதாவிலிருந்துத் தப்பிப் பிழைத்தவர்களுக்கு உரியதாகும். கர்த்தர் அந்த யூதாவிலுள்ள ஜனங்களை நினைவில் வைத்திருப்பார். அந்த ஜனங்கள் அயல்நாடுகளில் கைதிகளாக இருப்பார்கள். ஆனால் கர்த்தர் அவர்களைத் திரும்ப அழைத்து வருவார். பிறகு யூதா ஜனங்கள் தமது ஆடுகளை அவ்வயல்களில் உள்ள புல்லை மேயச்செய்வார்கள். மாலை நேரங்களில் அவர்கள் அஸ்கலோனின் காலியான வீடுகளில் படுத்துக்கொள்வார்கள். கர்த்தர் கூறுகின்றார்: “மோவாப் ஜனங்களும், ஆமோன் ஜனங்களும் என்ன செய்தனர் என்று எனக்குத் தெரியும். அந்த ஜனங்கள் எனது ஜனங்களை நிந்தைக்குள்ளாக்கினார்கள். அந்த ஜனங்கள் தம் சொந்த நாட்டைப் பெரிதாக்க இத்தேசத்தை எடுத்துக் கொண்டார்கள். எனவே, நான் வாழ்வது எவ்வளவு உறுதியோ அவ்வாறே, மோவாப் மற்றும் ஆமோனின் ஜனங்கள், சோதோம் மற்றும் கொமோராவைப்போல அழிக்கப்படுவார்கள். நான் சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர். நான் அந்நாடுகள் எல்லாம் என்றென்றைக்கும் முழுமையாக அழிக்கப்படுமென்று வாக்குறுதி அளிக்கிறேன். அவர்களது நிலத்தில் முட்செடிகள் வளரும். அவர்களது நிலமானது சவக்கடலினால் உப்பாக்கப்பட்ட நிலம் போன்றிருக்கும். எனது ஜனங்களில் மீதியாக இருப்பவர்கள் அந்த நிலத்தையும் அதில் உள்ளவற்றையும் எடுத்துக்கொள்வார்கள்.” மோவாப் மற்றும் அம்மோன் ஜனங்களுக்கு அவை நிகழும். ஏனென்றால், அவர்கள் பெருமைமிக்கவர்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஜனங்களைக் கொடுமைப்படுத்தி, அவமானமடையவும், வெட்கமடையவும் செய்தார்கள். அந்த ஜனங்கள் கர்த்தருக்கு அஞ்சுவார்கள். ஏனென்றால், கர்த்தர் அவர்களது தெய்வங்களை அழிப்பார். பிறகு தூரதேசங்களில் உள்ள ஜனங்கள் அனைவரும் கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள். எத்தியோப்பியா ஜனங்களே, இது உங்களுக்கும் பொருந்தும். கர்த்தருடைய பட்டயம் உமது ஜனங்களையும் கொல்லும். கர்த்தர் வடக்கே திரும்பி அசீரியாவையும் தண்டிப்பார். அவர் நினிவேயையும் அழிப்பார். அந்நகரமானது காலியான வறண்ட பாலைவனம் போலாகும். பிறகு அந்த அழிந்த நகரத்தில் ஆடுகளும், காட்டு மிருகங்களும் மட்டுமே வாழும். விட்டுப்போன தூண்களின்மேல் கோட்டான்களும், நாரைகளும் இருக்கும். அவர்களின் கூக்குரல் ஜன்னல் வழியாக வந்து கேட்கப்படும். வாசல் படிகளில் காகங்கள் இருக்கும். கருப்பு பறவைகள் காலியான வீடுகளில் இருக்கும். இப்பொழுது நினிவே மிகவும் பெருமிதமாக உள்ளது. இது அத்தகைய மகிழ்ச்சிகரமான நகரம். ஜனங்கள் தாம் பாதுகாப்புடன் இருப்பதாக நினைக்கிறார்கள். அவர்கள் நினிவேதான் உலகத்திலேயே மிகச் சிறந்த இடம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அந்நகரம் அழிக்கபடும். இது காலியான இடமாகி காட்டு மிருகங்கள் மட்டுமே ஓய்வெடுக்கச் செல்லும். ஜனங்கள் அந்த வழியாகக் கடந்து செல்லும்போது அதைப் பார்த்து பரிகசிப்பார்கள். அந்நகரம் எவ்வளவு மோசமாக அழிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி தங்கள் தலையை குலுக்குவார்கள்.