ஆதியாகமம் 1

1
படைப்பின் வரலாறு
1படைப்பின் ஆரம்பத்தில், இறைவன் வானங்களையும் உலகத்தையும் படைத்தார். 2அப்போது, உலகம் அமைப்பு இன்றி வெறுமையாக இருக்க, ஆழ்நீரின் மேற்பரப்பை இருள் மூடி இருக்க, இறைவனின் ஆவியோ நீரின் மேற்பரப்பில் சுற்றி அசைந்து கொண்டிருந்தது.
3“ஒளி உண்டாகட்டும்!” என்றார் இறைவன்,
ஒளி உண்டாகியது! 4இறைவன், ஒளி நல்லது என்று கண்டு மகிழ்ந்தார்; இறைவன், ஒளியை இருளிலிருந்து வேறாகப் பிரித்து வைத்தார். 5இறைவன், “பகல்” என்று ஒளிக்குப் பெயர் சூட்டினார், “இரவு” என்று இருளுக்கு பெயர் சூட்டினார்; மாலை மறைந்து காலையானது,#1:5 மாலை மறைந்து காலையானது – எபிரேய மொழிநடையில் ஒருநாள் முழுமையடைகின்றது என்பதாகும். அதுவே முதலாம் நாள்.
6அதன் பின்னர், “நீர்களுக்கு மத்தியிலே ஒரு உறுதியான வெளித்தட்டாக வானவெளி#1:6 வானவெளி – எபிரேய மொழியில் வெளித்தட்டு உண்டாகட்டும்; அது நீரில் இருந்து நீரைப் பிரித்து வைக்கட்டும்!” என்றார் இறைவன்.
7சொன்னபடியே நடந்தது! எனவே இறைவன் வானவெளியை வடிவமைத்து, வானவெளிக்கு கீழுள்ள நீரையும் வானவெளிக்கு மேலுள்ள நீரையும் வெவ்வேறாகப் பிரித்து வைத்தார். 8இறைவன், “ஆகாயம்” என்று வானவெளிக்கு பெயர் சூட்டினார். மாலை மறைந்து காலையானது, அதுவே இரண்டாம் நாள்.
9அதன் பின்னர், “ஆகாயத்தின் கீழுள்ள நீர் ஓரிடத்தில் சேர்ந்துகொள்வதாக. அதனால் உலர்ந்த தரை வெளியே தோன்றுவதாக” என்றார் இறைவன்.
சொன்னபடியே நடந்தது! 10இறைவன் உலர்ந்த தரைக்கு, “நிலம்” என்று பெயர் சூட்டினார், ஒன்றுசேர்ந்த நீருக்கு, “சமுத்திரங்கள்” என்றும் பெயர் சூட்டினார். இறைவன், தாம் உருவாக்கியவை நல்லதெனக் கண்டு மகிழ்ந்தார்.
11அதன் பின்னர், “நிலமானது தாவரங்களைத் துளிர்விடச் செய்வதாக; அவை அவற்றுக்குரிய வகையின்படி பரவுகின்ற விதை தரும் பயிர்களையும், விதைகளைக் கொண்ட கனிகளைத் தரும் மரங்களையும் துளிர்விடச் செய்வதாக!” என்றார் இறைவன். சொன்னபடியே நடந்தது! 12தாவரங்களைத் துளிர்விடச் செய்தது நிலம்; விதையைப் பிறப்பிக்கும் பயிர்களை அவற்றின் வகைகளின்படியும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் மரங்களை அவற்றின் வகைகளின்படியும், துளிர்விடச் செய்தது நிலம். இறைவன் தாம் உருவாக்கியவை நல்லதெனக் கண்டு மகிழ்ந்தார். 13மாலை மறைந்து காலையானது, அதுவே மூன்றாம் நாள்.
14அதன் பின்னர், “வானவெளியில் ஒளிச்சுடர்கள் உண்டாகட்டும்; அவை பகலை இரவிலிருந்து பிரிப்பதுடன், அறிகுறிகளாகவும், காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் அறிவதற்காகவும் இருப்பதாக. 15அவை பூமிக்கு வெளிச்சம் தருகின்ற ஒளிச்சுடர்களாய் வானவெளியில் உண்டாவதாக!” என்றார் இறைவன்.
சொன்னபடியே நடந்தது! 16எனவே இறைவன் இரு பெரும் ஒளிச்சுடர்களை உண்டாக்கினார்; பகலை ஆள்வதற்கு பெரிய ஒளிச்சுடரையும்#1:16 பெரிய ஒளிச்சுடரையும் சூரியன். இரவை ஆள்வதற்கு சிறிய ஒளிச்சுடரையும்,#1:16 சிறிய ஒளிச்சுடரையும் சந்திரன் அவற்றுடன் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதற்காகவும், 18பகலையும் இரவையும் ஆள்வதற்காகவும், ஒளியை இருளிலிருந்து பிரிப்பதற்காகவும் இறைவன் அவற்றை வானவெளியில் நிலைநாட்டினார். இறைவன், தாம் உருவாக்கியவை நல்லதெனக் கண்டு மகிழ்ந்தார். 19மாலை மறைந்து காலையானது, அதுவே நான்காம் நாள்.
20அதன் பின்னர், “தண்ணீர், அது திரள்கின்ற உயிரினங்களால் நிரம்பட்டும்! பூமிக்கு மேலுள்ள வான்வெளி, அதிலெங்கும் பறவைகள் பறக்கட்டும்!” என்றார் இறைவன்.
21இவ்வாறு இறைவன் இராட்சத கடல் விலங்குகளையும், நிரம்பும் அளவுக்கு அந்த நீரில் திரள்கின்ற அனைத்து நீந்துகின்ற உயிரினங்களையும் அவை ஒவ்வொன்றுக்கும் உரிய வகைகளின்படி படைத்தார். சிறகுள்ள அனைத்து பறவைகளையும் அவை ஒவ்வொன்றின் வகையின்படி படைத்தார். 22இறைவன் அவற்றை ஆசீர்வதித்து, கடல் வாழ் உயிரினங்களிடம், “இனவிருத்தி அடைந்து, எண்ணிக்கையில் பெருகி, கடல்நீரை நிரப்புங்கள்” என்றார். அத்துடன், “நிலத்தில் பறவைகளும் பெருகட்டும்” என்றும் சொன்னார். 23மாலை மறைந்து காலையானது, அதுவே ஐந்தாம் நாள்.
24அதன் பின்னர், “நிலமானது உயிரினங்களை அவற்றின் வகைகளின்படி உண்டாக்கட்டும்; வளர்ப்பு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஒவ்வொன்றுக்கும் உரிய வகையின்படி உண்டாக்கட்டும்” என்றார் இறைவன்.
அது அவ்வாறே ஆயிற்று! 25இறைவன் காட்டுமிருகங்களை#1:25 காட்டுமிருகங்களை – எபிரேய மொழியில் நிலத்தின் மிருகங்களை என்றுள்ளது. அவற்றின் வகைகளின்படியும், வளர்ப்பு மிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், தரையில் ஊரும் உயிரினங்கள் எல்லாவற்றையும் அவற்றின் வகைகளின்படியும் உண்டாக்கினார். இறைவன், தாம் உருவாக்கியவை நல்லதெனக் கண்டு மகிழ்ந்தார்.
26அதன் பின்னர், “மனிதரை, நமது உருவமாக நமது சாயலில் உருவாக்குவோம். கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், வளர்ப்பு மிருகங்களையும், அனைத்து காட்டுமிருகங்களையும்#1:26 காட்டுமிருகங்களையும் – சில மூலப்பிரதிகளில் நிலம் அனைத்தையும் என்றுள்ளது., தரையில் ஊர்ந்து செல்கின்ற அனைத்து உயிரினங்களையும் அவர்கள் ஆட்சி செய்யட்டும்” என்றார் இறைவன்.
27அவ்வாறே இறைவன், தமது உருவமாக மனிதரைப்#1:27 மனிதரை – எபிரேய மொழியில் ஆதாம் படைத்தார்,
இறைவனின் உருவமாக அவர்களை அவர் படைத்தார்;
ஆணும் பெண்ணுமாக அவர்களை அவர் படைத்தார்.
28அதன் பின்னர் அவர்களை ஆசீர்வதித்து, “நீங்கள் இனவிருத்தி அடைந்து, நிலத்தை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்துங்கள். கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், நிலத்தில் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களையும் ஆட்சி செய்யுங்கள்!” என்றார் இறைவன்.
29அதன் பின்னர், “இதோ, நிலம் முழுவதிலும் அதன் மேற்பரப்பில் இருக்கும் விதை தரும் தாவரங்களையும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் அனைத்து மரங்களையும் உங்களுக்குக் கொடுக்கின்றேன். விதைகளும் பழங்களும் உங்களுக்கு உணவாயிருக்கும். 30நிலத்திலுள்ள அனைத்து மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், தரையில் ஊர்ந்து செல்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும், அதாவது தன்னில் உயிர்மூச்சு உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நான் பச்சைத் தாவரங்கள் எல்லாவற்றையும் உணவாகக் கொடுக்கின்றேன்” என்றார் இறைவன்.
சொன்னபடியே நடந்தது! 31இறைவன், தாம் உண்டாக்கிய எல்லாவற்றையும் பார்த்தார், அது மிக நல்லதாக இருந்ததைக் கண்டு மகிழ்ந்தார். மாலை மறைந்து காலையானது, அதுவே ஆறாம் நாள்.

Vurgu

Paylaş

Kopyala

None

Önemli anlarınızın tüm cihazlarınıza kaydedilmesini mi istiyorsunuz? Kayıt olun ya da giriş yapın